ஒரே ஒரு சந்திரன்தான்! ஒரே ஒரு தன்ஷிகாதான்!



ஹீரோயினிஸம்

“நம்மை நடிக்க அழைக்க மாட்டாரா?” என்று நடிக நடிகையர் ஏங்கும் இயக்குநர் பாலா. அப்படிப்பட்ட இயக்குநரே அழைத்து, ‘பரதேசி’ படத்தில் நடிக்க வைக்கிறார். தரமான படங்களை மட்டுமே இயக்குவேன் என்று சபதமெடுத்திருக்கும் வசந்தபாலன், தன்னுடைய கனவுப் படமான ‘அரவான்’ படத்துக்கு அழைக்கிறார். முற்போக்கு இயக்குநரான ஜனநாதன் கூப்பிட்டு ‘பேராண்மை’க்காக கையில் துப்பாக்கியை கொடுக்கிறார்.

முந்தைய படத்துக்காக ஹேர் ஸ்டைல் மாற்றிக் கொண்டதால், தலைமுடி கொஞ்சம் வளரட்டும் என்று சமூகநோக்குள்ள படங்களை இயக்கும் சமுத்திரக்கனி ‘கிட்ணா’வுக்காக காத்திருக்கிறார். அவ்வளவெல்லாம் ஏன்? சூப்பர்ஸ்டாருக்கு மகளாக இவரைத்தான் பா.இரஞ்சித் ‘கபாலி’யில் நடிக்க வைத்தார்.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட நடிகை தமிழ் சினிமாவில் இப்போது வேறு யாரேனும் இருக்கிறார்களா? மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் போன்றவர்களுக்குக் கூட இல்லாத சிறப்பு, இன்னமும் முன்னணி நடிகை பட்டியலில் இடம்பெற போராடிக் கொண்டிருக்கும் தன்ஷிகாவுக்கு இருக்கிறது என்பதே அவரது திறமைக்குச் சான்று.

என்றுமே தளராத தன்னம்பிக்கை, உழைப்பு, அசராத உடல்வாகு, நடிப்புத் தொழிலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிச்சல்... இவைதான் தன்ஷிகாவின் அடையாளங்கள். அடுத்த விஜயசாந்தி என்று ரசிகர்களால் குறிப்பிடப்படுபவர், எந்த மாஜி நடிகையின் வாரிசுமல்ல. மலையாள தேசத்து இறக்குமதியுமல்ல. மெழுகு பொம்மை கணக்கான மும்பை வரவுமல்ல. பக்கா தஞ்சாவூர் தமிழச்சி.

தமிழ் சினிமா புறக்கணித்த தமிழச்சியான கார்த்திகாவைப் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன்பாக இதே ‘ஹீரோயினிஸம்’ பகுதியில் வாசித்தோம். இவருக்கும் அதே பிரச்சினைதான். ஆனால், அவர் விலகி ஓடியதற்கும், விலக்கி வைக்கப்பட்டதற்கும் காரணம் சினிமாவின் ஆணாதிக்கத் தன்மையும், ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடும் தைரியம் இல்லாமல் போனதும்தான். இவரோ, மாஸ் ஹீரோவுக்கு நிகரான மனதைரியம் கொண்டவர். அந்த தைரியம்தான் இவரை இன்னமும் நீடிக்க வைக்கிறது. ஜெயிப்பதற்காக போராட வைத்துக் கொண்டிருக்கிறது.

முதல்நாள் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கால்மூட்டு தேய முட்டிபோட்டு நடந்து பிரார்த்திப்பார். மறுநாள் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வார். அதற்கடுத்த நாள் ஆந்திராவில் உள்ள தர்கா ஒன்றில் முக்காடிட்டு அமர்ந்திருப்பார். வியாழன் தோறும் சாய்பாபா முன்பாக தியானம் செய்வார்.

சூரியன் உதிக்கும் அதிகாலைகளில் சென்னை மெரினா கடற்கரையில் ஆறு அடி உயர ஆண்களுடன் சண்டைப் பயிற்சி மேற்கொண்டிருப்பார். இப்படியாக தன்ஷிகாவின் வாழ்க்கை ஒருமாதிரி நான்லீனியர் காவியம். “என்னோட வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்கினது” என்கிற அஜீத்தின் பிரபலமான வசனத்தை நிஜத்தில் பேசத் தகுதியான நடிகை அவர்.

‘பரதேசி’க்காக உடலை கருப்பாக்கிக் கொண்டார். ‘அரவான்’ படத்துக்காக ரவிக்கை துறந்து பழந்தமிழச்சியாக மாறினார். ‘பேராண்மை’க்காக எடைமிகுந்த துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு காட்டின் முட்புதர்களில் ஓடினார். ‘கிட்ணா’வுக்காக பொட்டல் காட்டில் விறகு சுமக்கிறார். ‘கபாலி’க்காக தன்னுடைய ஆறடி கூந்தலை அரை அடியாகக் குறைத்துக் கொண்டார்.

நடிப்புக்காக கமலும், விக்ரமும்தான் இப்படி வருத்திக் கொள்வார்கள். தன்ஷிகாவும் அந்தப் பட்டியலில் சேரத் தகுதியானவரே. அவருக்கான உயரங்களும், விருதுகளும் இன்னமும் கிடைக்காததுதான் தமிழ்த் திரைச் சூழலின் சாபக்கேடு.நடிக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் நடிகை ஆகலாம். ஆனால், எல்லா நடிகையாலும் தன்ஷிகா ஆகிவிட முடியாது.

- மீரான்