சினிமாங்கிறது ரிலே ரேஸ்!



கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் கோவை சரளா 3

நிறைய பேரு என்னை அடிக்கடி கேட்கிற கேள்வி- ‘உங்களுக்கு அப்புறம் ஏன் பெருசா காமெடியில் நடிகை யாரும் எடுபடலை?’எனக்கு அப்படி தோணலை. யாராவது புதுசு புதுசா வந்துக்கிட்டேதான் இருக்காங்க. மக்களை சிரிக்க வெச்சுக்கிட்டேதான் இருக்காங்க.இப்பவே பார்த்தீங்கன்னா தேவதர்ஷினி, ஆர்த்தி, வித்யுலேகா, மதுமிதான்னு நிறைய பேரு இருக்காங்க.

இவங்களில் யாராவது என்னைவிட அதிக காலம் சினிமாவில் தாக்குப் பிடிக்கவும் வாய்ப்பிருக்கு. யார் மக்கள் கிட்டே எடுபடுவாங்கன்னு ரசிகர்கள்தான் முடிவு பண்ணணும். நாம சொல்ல முடியாது.ஆனா, ஸ்க்ரீனில் பண்ணுற பெர்ஃபாமன்சுக்கு ஈக்குவலா ஃபீல்டிலும் நிக்கணும். அதுதான் லாங் சர்வீஸுக்கு முக்கியம்.

நான் நடிக்க ஆரம்பிச்ச ஆரம்பத்துலே ஸ்பாட்டுலே சீனியர் நடிகர்கள் யாருமே எங்கிட்டே பேசமாட்டாங்க. எந்த ஆலோசனையும் அவங்ககிட்டே இருந்து கிடைக்காது. எனக்கே ஒரு மாதிரியா இருக்கும். நான் பட்ட அந்த கஷ்டங்களை எனக்கு அப்புறம் வர்றவங்க யாரும் படக்கூடாதுன்னு மனசுக்குள்ளே ஒரு வைராக்கியம்.

ஜூனியர், சீனியர் பாகுபாடில்லாமே எல்லாருகிட்டேயும் சரிசமமா ஜோவியலா பேசுவேன். என்னோட சேர்ந்து நடிக்கிறவங்களுக்கு எனக்குத் தெரிஞ்சதை சொல்லிக் கொடுப்பேன். பாடிலேங்குவேஜை எப்படி மாத்திக்கிட்டா ரசிகர்கள் ரசிப்பாங்க, வசனங்களை எப்படி உச்சரிச்சா தியேட்டரில் விசில் கிளம்பும்னெல்லாம் என்னோட அனுபவத்துலே கிடைச்ச பாடத்தை அவங்களுக்கு சொல்லுவேன்.

அதை ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் அவங்க அவங்க உரிமை. ஆனா சினிமாங்கிறது ரிலே ரேஸ் என்கிற யதார்த்தத்தை எல்லாரும் புரிஞ்சுக்கணும். நம்ம கிட்டே இருக்கிற டார்ச்சை நாளைக்கு வேற யாரோ ஏந்திக்கிட்டு போகப்போறாங்க என்கிற யதார்த்தத்தை மதிக்கணும். இந்த ஃபீல்டுக்கு வர்ற எல்லாருமே கொஞ்சநாள்தான் இங்கே தங்கப் போறோம். அந்த கொஞ்சநாள் சந்தோஷமா, சகஜமா இருந்துட்டுப் போறதுலே என்னத்தை பெருசா வாரிக் கொடுத்துடப் போறோம்?ஒண்ணு சொல்லட்டுமா?

சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின், காமெடியன், டைரக்டர், புரொடியூஸர்னு யாரா இருந்தாலும் சரி, ஓடுற குதிரை மேலே மட்டும்தான் ஜனங்க காசு கட்டுவாங்க. நல்லா ஓடினா பால்கனியில் இருந்து காசை மழையா கொட்டவும் செய்வாங்க.

லேசா நொண்டி அடிச்சோம்னு வெச்சுக்கங்களேன், அடுத்த குதிரையை செலக்ட் பண்ணிடுவாங்க. ஆயிரம் படம் நடிச்சுட்டு, கின்னஸ் சாதனை புரிஞ்சு, தமிழ்நாட்டுக்கே பெருமை தேடிக் கொடுத்தவங்க ஆச்சி மனோரமா. நடுவுலே கொஞ்சம் உடம்பு முடியாம நடிக்காம இருந்தப்போ எவ்வளவு வேகமா மறந்துட்டாங்கன்னு எல்லாரும் பார்த்திருப்பீங்களே! அவ்ளோதான் சினிமா.

இதையெல்லாம் நான் சினிமாவில் இருக்கிற என்னோட சகோதர சகோதரிகள் கிட்டே பேசிக்கிட்டிருக்கேன்னு மட்டும் நினைக்காதீங்க. சினிமாவுக்கு வர நினைக்கிற எல்லாரோடும்தான் பேசிக்கிட்டிருக்கேன்.

கோவை சரளாவுக்கு என்னா, எழுநூறு படத்துக்கு மேலே நடிச்சிட்டாங்க, நிறைய சம்பாதிச்சிட்டாங்கன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. பெரிய உயரங்களை எட்டியிருக்கேன் என்பது உண்மைதான். ஆனா, இந்த உயரத்துக்காக எவ்வளவு இழந்திருக்கேன் என்பதெல்லாம் எனக்குதான் தெரியும்.

இன்னைக்கும் ஷூட்டிங் போறப்போ, முதன்முதலா கேமராவுக்கு முன்னாடி நின்னப்போ என்ன பயம் இருந்ததோ, அதே பயம் இருக்கு. அது இல்லைன்னா நான் அன்னியோட காலி. சின்ன கேரக்டரோ, பெரிய கேரக்டரோ, என்னை நம்பி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை பெரிய சவாலா நினைச்சிக்கிட்டுதான் எதிர்கொள்வேன். கனவுலே கூட என் தொழிலுக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்கேன். இந்த புரொஃபஷனல் எத்திக்ஸ் இல்லாதவங்க சினிமாவில் மட்டுமில்லை, வேறெந்த துறையிலுமே ஜெயிக்கிறது கஷ்டம்தான்.

சந்திப்பு : தேவராஜ்
(தொடரும்)