நாயகனின் விஸ்வரூபம்!



தூங்காவனம் விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி கமல்தான் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது ‘தூங்காவனம்’. கமலின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் அத்தனை பேருக்கும் ஃபுல் மீல்ஸ் இந்தப் படம். போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி கமல்ஹாசன். கடத்தல்காரரான பிரகாஷ்ராஜிடமிருந்து போதைப் பொருளைக் கைப்பற்றுகிறார். இழந்த சரக்கைக் கைப்பற்ற பிரகாஷ்ராஜ், கமல்ஹாசனின் மகனைக் கடத்துகிறார். மகனை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கமல் எடுத்ததை கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், பொருள் அவர் பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து காணாமல் போய்விடுகிறது. அதனால் மகனை மீட்பது சிக்கலாகிவிடுகிறது. கமல் எப்படி தன் மகனை மீட்டார், குற்றவாளிகளை தண்டித்தாரா என்பதே படம்.



‘விஸ்வரூபம்’ படத்துக்கு பிறகு ஆக்‌ஷன் அவதாரத்தில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் கமல். மகனைப் பறி கொடுத்த அப்பாவின் தவிப்பை அப்படியே திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். அறுபது வயதைக் கடந்த உலகநாயகன், ஈகோவோ இமேஜோ பார்க்காமல் அனைவரிடமும் அடிவாங்குவது போல நடித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் த்ரிஷாவுக்கு டக்கரான ரோல். நீண்டகாலத்துக்குப் பிறகு இவரது கேரக்டருக்காக பேசப்படும் படமாக இப்படம் அமையும்.  பிரகாஷ்ராஜின் யதார்த்தமான நடிப்பு படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. நக்கல் சிரிப்பு, வில்லங்க பார்வை என பிரமாதப்படுத்தியிருக்கிறார். பல காட்சிகளில் நடிப்பில் இவருக்கும், கமலுக்கும் ஜல்லிக்கட்டே நடக்கிறது.

ஆஷா சரத், கிஷோர், சம்பத், ஜெகன் என  அனைவரும் கொடுத்த வேலையை சரியாக ச் செய்துள்ளார்கள். வசனங்களுக்கான வாய்ப்பு குறைவு என்றாலும் கிடைத்த வாய்ப்பில் தன் இருப்பைக் காட்டியிருக்கிறார் வசனகர்த்தா சுகா. குறிப்பாக அப்பாவுக்கும் மகனுக்குமான தொலைபேசி பேச்சில் நெகிழவைக்கிறது வசனம். படத்தில் ஒரே ஒரு பாடல்தான். பின்னணி இசைக்குத்தான் முக்கியத்துவம். அதை உணர்ந்தவராக சர்வதேசத் தரத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். சானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம்.     வேகமாக கதை சொல்லி, மிகச் சிறப்பான மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் டைரக்டர் ராஜேஷ் எம். செல்வா. தமிழ் சினிமா அடுத்த மைல்கல்லை எட்டியிருக்கிறது.