மெட்ரோ ரயிலில் சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் ஆட்டம் பாட்டம்!



‘ரஜினிமுருகன்’ படம் இன்னும் ரிலீசாகாத நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள படத்தின் ஷூட்டிங் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. அதற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். பி.சி.ராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார். 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் புட் மேக்கப் போடுகிறார். அவர் மேக்கப் போடும் வேடம், நர்ஸ். இந்த கேரக்டருக்காக சிவகார்த்திகேயன் நிறைய ஹோம் ஒர்க் செய்துள்ளார்.



இப்படத்தின் ஷூட்டிங் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த மாதம் நடந்தது. சென்னை மெட்ரோ ரயிலில் படமாக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமை இப்படத்துக்கு கிடைத்துள்ளது. நயன்தாரா புகழ் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடலுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபடி சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் இணைந்து ஆடி நடித்த காட்சியை பி.சி.ராம் படமாக்கினார். ராஜுசுந்தரம் நடனப் பயிற்சி அளித்தார்.

இதுபற்றி தயாரிப்பாளர் ராஜாவிடம் கேட்டபோது, ‘மெட்ரோ ரயிலில் ஷூட்டிங் நடத்த ஒரு மணி நேரத்துக்கு 4 லட்ச ரூபாய் வாடகை செலுத்தினோம். 15 லட்ச ரூபாய் டெபாசிட் கட்டினோம். ஷூட்டிங் நடக்கும்போது ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ ஏதாவது சேதாரம் ஏற்பட்டால், அந்த டெபாசிட்டில் இருந்து தேவையான பணத்தைப் பிடித்துக் கொள்வார்கள். மெட்ரோ ரயிலில் நடந்த முதல் படப்பிடிப்பு என்ற பெருமை எங்கள் படத்துக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நிமிடமும் விலைமதிக்க முடியாதது என்பதால், இந்தப் பாடல் காட்சிக்கு முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்டது. இதனால், நேர விரயத்தை ஓரளவு தவிர்க்க முடிந்தது. ஒருநாள் முழுக்க, அதாவது, 8 மணி நேரம் ஷூட்டிங் நடத்தப்பட்டது. முத்துராஜ் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றினார்’ என்று சொன்னார்.

- தேவராஜ்