விஜய் படத்தில் மீனாவின் மகள்!



சினிமாவில் மட்டும்தான் இதுபோன்ற சுவாரஸ்ய சம்பவம் நடக்கும். விஜயகுமார் தயாரிப்பில் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய படம், ‘நெஞ்சங்கள்’. இதில் சிவாஜியுடன் இணைந்து நடித்த பேபி மீனாவுக்கு ‘ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பட்டம் கொடுத்து கவுரவித்தனர். பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, ரஜினியுடன் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற படங்களில் நடித்தார். காலம் மாறியது. ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘எஜமான்’ படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியை, ‘ரஜினி அங்கிள்’ என்று அன்புடன் அழைத்த மீனா, ‘எஜமான்’ படத்தில், ‘ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்’ என்று காதலித்து உருகினார்.

நிற்க. காலம் மாறியது. காட்சிகள் மாறின. கண்ணழகி மீனாவுக்கு பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவர் மணமாலை சூட்டினார். அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இன்று அந்தச் சிறுமி யு.கே.ஜி படிக்கிறார். பெங்களூருவில் அல்ல, சென்னையில். கிட்டத்தட்ட மீனாவுக்கு பெங்களூரு வாசம் மறந்து விட்டது. சென்னையிலுள்ள தனது பிரமாண்டமான பங்களாவிலேயே குடியேறி விட்டார்.



‘ராஜா ராணி’ அட்லி இயக்கும் புதுப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில் மூத்த இயக்குனர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் மீனாவின் மகள் நைனிகா அறிமுகமாகிறார். மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று சொன்ன மீனா, இப்போது நடிக்க வைப்பதா என்று தயங்கினார். ஆனால், சினிமா வாய்ப்பு என்பது கடினமானது. கிடைக்கும்போது பயன்படுத்திக் கொண்டால் நல்லது என்ற முடிவுக்கு வந்த அவர், சம்மதித்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நைனிகாவுடன் சென்றார், மீனா. முதல் இரண்டு நாட்கள் அவர் நடிப்பதை கூடவே இருந்து கவனித்து திருத்தினார். பிறகு செல்லவில்லை. இன்று அந்த நைனிகா, டைரக்டர் சொன்னதை டக்கென்று புரிந்துகொண்டு நடிக்கிறாராம். தனது மகள் மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அன்று ரசித்துப் பார்த்து மகிழ்ந்த மீனாவின் தாயார் ராஜ்மல்லிகா, இன்று தனது பேத்தி நைனிகாவின் நடிப்பு பற்றி சொல்லிச் சொல்லி மகிழ்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்ததைப் போல, ஒருவேளை அவரது மகள் எதிர்காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தாலும் நடிக்கலாம். விஜய்யோடு மீனா ஆடிப் பாடிய ‘சரக்கு வெச்சிருக்கேன்’ பாடல், விஜய் ரசிகர்களின் எவர்க்ரீன் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

- தேவராஜ்