அப்பா இசையில் மகள் வாங்கிய விருது!



இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி, பள்ளிப்படிப்பின்போதே தனது பாட்டுச்சாலைப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். அப்பா, அண்ணன்கள் கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா என வீடே இசைமழை பொழிந்துகொண்டிருக்க, பவதாரிணிக்கும் அந்த ஆர்வம் இயல்பாகவே வந்துவிட்டது. தனக்கு கர்நாடக சங்கீதம் கற்றுத்தந்த இசைமேதை தட்சணாமூர்த்தியிடமே பவதாரிணியை பாலபடம் கற்கவைத்தார் இளையராஜா. பின்னர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம்  பயிற்சி நடந்தது. அப்பா இசையில் நிறைய பக்திப்பாடல்கள் பாடிய பவதாரிணிக்கு திருவண்ணாமலை ஆல்பம், திசையெங்கும் புகழ் வாங்கித் தந்தது.

பிரபுதேவா நடித்த ‘ராசய்யா’  படத்தில் வாலி எழுதி, இளையராஜாவின் இசையமைப்பில்  ‘மஸ்தானா மஸ்தானா நீதான் எனக்கு மச்சானா…’ பாடலை அருண்மொழியுடன் இணைந்து பாடி, தனது பாட்டுச்சாலைப் பயணத்தைத் தொடங்கினார் பவதாரிணி. சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசியவிருது பெற்ற இளம்பாடகி என்கிற பெருமை, பவதாரிணியின் பாட்டுவரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘பாரதி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு…’  என்கிற மயக்கும் தரும் பாடலுக்காக 2001ஆம் ஆண்டில் தேசியவிருது பெற்றார். இளையராஜா, கார்த்திக்ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகியோரது பாடல் ஒலிப்பதிவின்போது, உடனிருந்து இசையமைப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு இவருக்கு இலவசமாகவே அமைந்தது.



‘அழகி’ படத்தில் ‘டமக்கு டமக்கு டம்’, ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து பாடிய ‘தென்றல் வரும்…’, ஃபாசில் இயக்கத்தில் வந்த ‘ஒருநாள் ஒரு கனவு’ படத்தில் இளையராஜா, ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் கூட்டணியில் பாடிய ‘காற்றில் வரும்…’ ‘அனேகன்’ படத்தில்  வைரமுத்து வரிகளுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ், திப்பு, அபய் ஜோத்புர்கர் கூட்டணியில் பாடிய ‘ஆத்தாடி ஆத்தாடி...’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் வாலியின் வரிகளில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜாவித் அலியுடன் பாடிய ‘தப்புத் தண்டா…’ ‘பிரியாணி’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் தன்வி மற்றும் விலாசினியுடன் பாடிய ‘பிரியாணி …’, அமிதாப்பச்சன் நடித்த ‘பா’ படத்தில் இளையராஜா இசையில் ஷ்ரவன் ரஹோத்துடன் பாடிய ‘கம் சம் கம்…’, விஜய் மில்டன் இயக்கத்தில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடிய ‘இலையுதிர் காலம்…’ மற்றும் அவருடன் இணைந்து பாடிய ‘கனவே கலைகிறதே…’,  ‘தீனா’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வாலி எழுதிய ‘நீ இல்லையென்றால்…’ பாடலை முருகன் ஐயருடன் இணைந்து பாடியது, ‘தாமிரபரணி’ படத்தில் ஹரிஹரனுடன் பாடிய ‘தாலியே தேவையில்ல…’, ‘இரும்புக்குதிரை’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாடிய ‘பெண்ணே பெண்ணே…’, ‘உல்லாசம்’ படத்தில் கமல்ஹாசன், ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடிய ‘முத்தே முத்தம்மா…’ மற்றும் மணிரத்னத்தின் ‘அஞ்சலி’யில் ‘சம்திங் சம்திங்…’, ‘இரவு நிலவு…’, ‘மொட்டமாடி மொட்டமாடி…’, ‘வானம் நமக்கு…’, ‘அஞ்சலி அஞ்சலி…’பாடல்களில் பவதாரிணியின் குரல் பரவசப்படுத்தும் வகையில் பரவிக்கிடக்கிறது.



‘கோவா’ படத்துக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இளையராஜா பிறந்த பண்ணைபுரத்துப் பெருமையைப் பறைசாற்றும் ‘ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி…’ என்ற பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. இசையமைத்தவர் யுவன்ஷங்கர் ராஜா. அந்தப்பாடலை கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பவதாரிணி என குடும்பப் பாடகர்களே பாடியது, திரைப்படப் பாடல் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.

பவதாரிணியின் இசைத் திறனை உணர்ந்திருந்த நடிகை ரேவதி தனது இயக்கத்தில் உருவான ‘மித்ரு மை ஃபிரண்ட்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘பிர் மிலஞ்ச்’ படத்துக்கும் பவதாரிணி இசையமைத்தார். ‘அவுனா’ தெலுங்குப்படம், ‘கீய்யா கீய்யா’ கன்னடப்படம் என பிறமொழித் திரைப்படங்களிலும் இசைப்பணியாற்றி பெயர் வாங்கியிருக்கிறார் பவதாரிணி. ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’,  ‘போரிடப் பழகு’, ‘வெள்ளச்சி’ ‘காக்கி’ என பவதாரிணியின் இசையமைப்புப்பணி தொடர்கிறது.
அடுத்த இதழில்… பின்னணிப்பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்