விஷால் ரூட்டு தனி ரூட்டு!



ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகியோரைப் போல் இனிமேல் ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக சொல்கிறார் விஷால். நடிகர் சங்க செயலாளர் ஆகிவிட்டதால் பொறுப்பு கூடியிருக்கிறது. அதற்கேற்ப தன்னுடைய கேரியரை பார்த்துக் கொள்வதோடு, நடிகர் சங்கப் பணிகளையும் திறம்பட செய்ய வசதியாக இந்த முடிவினை எடுத்திருக்கிறார்.



“எனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் ‘கதகளி’ படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். முதன்முறையாக நானும் அவரும் இணைந்துள்ள இந்தப் படம் த்ரில்லர் கதை கொண்டது. படத்தை ஹிட்டாக்க வேண்டும் என்று கதையில் எந்த காம்ப்ரமைசும் செய்துகொள்ளாமல் பணியாற்றி வருகிறோம். கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி. டிசம்பர் மாதம் ஆடியோ ரிலீசாகிறது. பொங்கலன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இதையடுத்து ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களின் இயக்குனர் முத்தையா டைரக்‌ஷனில் ‘மருது’ படத்தில் நடிக்கிறேன். இதை முடித்தபிறகுதான் அடுத்த படத்தைப் பற்றி யோசிப்பேன்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ‘சண்டக்கோழி’ படத்தின் 2ம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. ‘சண்டக்கோழி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் லிங்குசாமி டைரக்‌ஷனில் நான் நடிப்பதால், படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையும் எனது நிறுவனமே தயாரிக்கிறது. ஒரு படத்தை முடித்தபிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்ற கொள்கையை உறுதியாக இனி செயல்படுத்துவேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தால், அந்த கேரக்டர் பற்றிய கவனம் சிதறிவிடும் என்கிற உண்மை புரிந்ததால்தான் இப்படியொரு முடிவு எடுத்தேன்” என்கிறார் விஷால்.

- தேவராஜ்