என் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும்! ‘பூம்புகார்’ விஜயகுமாரி வேண்டுகோள்
ஐம்பது அறுபதுகளின் தமிழ் சினிமாவில் சக்சஸ்ஃபுல் ஜோடியாகத் திகழ்ந்தவர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி. நிஜவாழ்க்கையிலும் ஜோடியாக ஊர், உலகம் மெச்ச வாழ்ந்தவர்கள்.விஜயகுமாரிக்கு பொலிவான முகத்தோற்றம். தன் கணவரைப் போலவே கணீரென தமிழ் உச்சரிப்பு. வசனங்களுக்கு பெருமை சேர்த்த நாயகியென்று அக்காலத்தில் எழுத்தாளர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டவர்.
கடைசியாக பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம் நடித்த ‘காதல் சடுகுடு’ படத்தில் நடித்தார். அதோடு நிறைவான ஐம்பது ஆண்டுகள் சினிமா வாழ்வு போதுமென்று ஒதுங்கி, சென்னை கிழக்கு கடற் கரைச் சாலையில் நிம்மதியாக வசித்துவருகிறார்.
எம்.ஜி.ஆருடன் ஏன் ஜோடி சேரவில்லை, சினிமாவில் நடிப்பதை ஏன் நிறுத்திக் கொண்டார் என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதிலையும், தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“கொரோனாவால் ஊரே முடங்கியிருக்கு. எப்படி மேடம் இருக்கீங்க?”
“எனக்கு இந்த தனிமை வாழ்க்கை பல ஆண்டுகளுக்கு முன்பே பழகிவிட்டது. அனாவசியமாக வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன். சென்னையில் மால் எதுக்கும் நான் இதுவரை போனதே இல்லைன்னா பார்த்துக்கங்க. ஆனா, மக்ககள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. கொரோனா எப்போது ஒழியும் என்று தெரியாதபோது மனதுக்கு கலக்கமாகவும் இருக்கிறது. காலையில் நான்கு நான்கரை மணிக்கெல்லாம் எழுந்துகொள்வேன். பூஜை முடித்துவிட்டு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஸ்லோகம் எழுதி முடிப்பதற்குள் மணி பத்தாகிவிடும். அப்புறம்தான் டிபன். சமையலுக்கு ஆட்கள் இருந்தாலும் நானே சமைத்துச் சாப்பிடுகிறேன்.”
“உங்க குரல் இந்த வயசிலும் ‘பூம்புகார்’ கிளைமேக்ஸில் ஒலிச்சமாதிரியே இருக்கே?”
“கடவுள் கொடுத்த வரம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது. எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் அளவுடன் இருக்கும். சிறுவயது முதல் அதுதான் பழக்கம். சினிமாவில் பிஸியாக இருந்தபோது அதிகாலை மூன்று நான்கு மணிக்கெல்லாம் பீச்சில் சேண்ட் வாக் போவேன். அங்கேயே உடற்பயிற்சி, யோகா, பூஜை முடித்துவிட்டு போர்ன்விட்டாவுடன் என்னுடைய வீட்டுக்காரரை எழுப்புவேன். சிறு வயது பழக்கம்தான் என்னை சுறுசுறுப்பாக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது.”
“உங்க பழைய சகாக்களை பார்க்குறீங்களா?”
“சரோஜாதேவி, லதா, ஷீலா ஆகியோருடன் தொடர்ந்து பேசுவேன். சரோஜாதேவி சென்னை வந்தால் என் வீட்டுக்கு வருவார். எங்களுக்குள் எல்லாம் எப்பவுமே போட்டி, பொறாமை இருந்ததில்லை.அப்போது அளவான நடிகர், நடிகைகள் இருந்தார்கள். இப்போ சினிமாவுக்கு நிறைய பேர் வருகிறார்கள். வந்த வேகத்திலேயே காணாமல் போகிறார்கள். எங்க காலத்தில் ஃபீல்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பல்லாண்டுகள் சினிமாவில் நீடித்திருந்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி ஆகியோருடனும் நடித்தேன்.
அடுத்த ஜெனரேஷனான ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம்.ராஜன் ஆகியோருடனும் நடித்தேன். மூன்றாவது ஜெனரேஷனான பிரபு கூடத் தான் நடிக்கவில்லை. கார்த்திக்குடன் சன் டி.வி. நிகழ்ச்சியொன்றில் நடித்தேன். அந்த வகையில் கார்த்திக் என்னுடைய கடைசி ஹீரோ என்று ஜாலியாக சொல்வதுண்டு.”
“இப்போ ரிலீஸாகிற படங்களை பார்க்குறதுண்டா?”
“டிவியில் வர்ற படங்களை பார்க்குறேன். டிவிதான் எனக்கு தோழன். விக்ரமின் ‘காதல் சடுகுடு’தான் நான் நடித்த கடைசிப் படம். அந்தப் படத்திலேயே யூனிட்டில் உள்ளவர்களுக்கு பரிசு கொடுத்து ஃபேர்வேல் பார்ட்டியை முடித்துவிட்டேன். உடன் நடித்த நம்பியார் அண்ணன் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கி ரிட்டயர்மென்ட் வாங்கிக் கொண்டேன். நம்பியார் அண்ணன், ‘சினிமாதான் உனக்கு அடையாளம், நடிக்கிறதை விட்டுடாதே’ என்றார்.
நான், ‘அமைதி தேவைப்படுகிறது அண்ணே’ என்று சொல்லிவிட்டு படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கிக்கொண்டேன்.” “நீங்க தவறவிட்ட வாய்ப்புகளில் நடிச்சவங்க பெரிய நடிகையா பேரெடுப்பாங்கன்னு உங்களைப்பத்தி ஒரு சென்டிமெண்ட் இருந்தது இல்லையா?” “ஆமாம். முக்கியமா ‘கற்பகம்’, ‘இரு கோடுகள்’, ‘ஒளிவிளக்கு’, ‘இதயக் கமலம்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, கே.பாலசந்தரின் ‘தாமரை நெஞ்சம்’ ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். ‘ஒளிவிளக்கு’ படத்தில் என்னை கமிட் பண்ணிய பிறகுதான் செளகார் ஜானகியை கமிட் பண்ணினார்கள். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் தேவிகா கமிட்டானபிறகும் என்னை நடிக்கச் சொல்லி தர் சார் கேட்டார்.”
“முதல்பட இயக்குநர்களின் சாய்ஸாவும் நீங்க இருந்தீங்க...?”
“பி.மாதவன், தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற பிரபல இயக்குநர்களின் முதல் படத்தில் நான்தான் கதாநாயகியாக நடித்தேன். இயக்குநர்களைப் பொறுத்தவரை கதை என்பது அவர்கள் குழந்தை மாதிரி. அவர்களுக்கு குழந்தையை எப்படி தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டும் என்று தெரியும். அதனால் முதல் பட இயக்குநர்களின் படத்தில் தைரியமாக நடித்தேன்.
‘சாரதா’ படத்தில் கே.எஸ்.ஜி. மிக அற்புதமாக வேலை வாங்கினார். அது என்னுடைய நடிப்புக்கு பெரிய புகழை வாங்கிக் கொடுத்தது. ‘சாரதா’ இந்தி ரீமேக்கில் என்னுடைய கேரக்டரில் மாலா சின்ஹா நடித்தார். மாலா சின்ஹாவிடம் தமிழ்ப் படத்தைப் பார்த்து அப்படியே எக்ஸ்பிரஷன் கொடுக்கச் சொன்னார்களாம்.
என்னைப்பொறுத்தவரை பெரிய இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என்று பார்க்கமாட்டேன். எல்லாருக்கும் ஒரேவிதமான ஒத்துழைப்பு கொடுப்பேன். இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்வேன். புது இயக்குநர்கள் படத்தில் நடிக்கும்போது வித்தியாசமான நடிப்பை வெளிக்கொண்டுவரமுடியும்.”
“உங்களுடைய மாஸ்டர்பீஸ்?”
“எல்லாருமே ‘பூம்புகார்’ படத்தைத்தான் சொல்லுவாங்க. அந்தப் படத்தோட ஆன்மாவே கலைஞரின் வசனங்கள்தான். ஏற்கனவே கண்ணாம்பா, கண்ணகியா நடிச்சி அந்த காவிய நாயகியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தாங்க. அவங்க நடிப்பை ஒருமுறை பார்க்கச் சொல்லி சொன்னார் கலைஞர். ஆனா, நான் பார்க்கவே இல்லை. அவங்க தாக்கம் எனக்குள்ளே வந்துடுமோன்னு பயம். கண்ணாம்பாவிடம் ஆசீர்வாதம் மட்டும் வாங்கிட்டு நடிச்சேன்.
சிலம்பை உடைக்கும் தர்பார் காட்சியை கோல்டன் ஸ்டுடியோவில் எடுத்தார்கள். அது வெயில் காலம் என்பதால் சிரமப்பட்டுத்தான் அந்தக் காட்சியில் நடித்தேன். அந்தக் காட்சியை எடுக்க மட்டுமே ஒரு வாரம் ஆனது. அப்போது ‘நானும் ஒரு பெண்’ படத்துக்கான விருது நிகழ்ச்சிக்காக டெல்லி சென்று திரும்பியிருந்தேன். இயக்குநர் ப.நீலகண்டன் வசனங்கள் அடங்கிய பேப்பர் கட்டை கொடுத்ததும் அரண்டுபோனேன். ப.நீலகண்டன் தைரியம் கொடுத்தார். செட்டுக்குப் போனால் கலைஞர், முரசொலி மாறன் இருந்தார்கள்.
‘கலைஞர், மாறன் வெளியே இருந்தால்தான் என்னால் இயல்பாக நடிக்க முடியும்’ என்று ப.நீலகண்டனிடம் சொன்னேன். இந்த விஷயத்தை அப்படியே கலைஞர் காதில் போடவே கலைஞர் என்னிடம் வந்து ‘இயக்குநரிடம் என்ன சொன்னீங்க’ என்றார். ‘நான் ஒண்ணும் சொல்லவில்லையே’ என்று மழுப்பிவிட்டு அந்தக் காட்சியில் நடித்தேன். எனக்கு நாடக அனுபவம் கிடையாது. சினிமா பின்னணி கிடையாது. நான் ஒரு பட்டிக்காடு. ஆனால் சிலம்புக் காட்சியில் எப்படி நடித்தேன் என்பது இன்றுவரை எனக்கே அது ஆச்சர்யம்.”
“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”
“நான் வந்தது தமிழ் சினிமாவின் பொற்காலக் காலக்கட்டம். ஏவி.எம்.மில் வாய்ப்பு கேட்கும்போது எனக்கு பதிமூன்று வயது. செட்டியார் ஐயா ‘பாட்டு பாடத் தெரியுமா, டான்ஸ் ஆடத் தெரியுமா’ என்று கேட்டார். ‘எதுவும் தெரியாது’ என்றேன். ‘எந்த தைரியத்தில் வாய்ப்பு கேட்கிறாய்’ என்றார். ‘எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை.
என்னுடைய முகம் சினிமாவுக்கு ஏற்ற முகம் என்று டீச்சர்ஸ் சொன்னார்கள். அதனால் நடிக்க வந்தேன்’ என்றேன். அப்போது ‘பராசக்தி’ படத்திலிருந்து கலைஞர் எழுதி நடிகர் திலகம் நடிச்ச ‘ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ என்ற டயலாக்கை பேசச் சொல்லி டெஸ்ட் வைத்தார்கள். அப்படி கிடைத்த வாய்ப்புதான் என் முதல் படமான ‘குலதெய்வம்’.
ஒருவேளை செட்டியார் சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் ஊரில் அப்பா, அம்மா கை காட்டின மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டியிருப்பேன்.” “எம்.ஜி.ஆர்., சிவாஜி?”
“எம்.ஜி.ஆருக்கு ஜோடியா நடிச்சதில்லை. ‘விவசாயி’ படத்தில் சகோதரியாக வருவேன். ‘காவல்காரன்’ படத்தில் நான் கதாநாயகியாக நடிக்க வேண்டியது. ‘தம்பி பெண்டாட்டியுடன் ஜோடியாக நடிக்க சங்கடமாக இருக்கிறது’ என்று அவரே சொன்னார்.சிவாஜியைப் பற்றி சொல்லணும்னா ஒரு புத்தகமே எழுதணும். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்.”
“உங்க வாரிசு?”
“என்னுடைய மகன் ரவி ‘கெளரி’ என்ற படத்தில் ஏ.சி.திருலோகசந்தர் டைரக்ஷனில் நடித்தார். ஆனால், சினிமா அவனுக்கு சரிப்பட்டு வரவில்லை. அதுக்கெல்லாம் பிராப்தம் வேண்டும். இத்தனைக்கும் அவனுடைய உடம்பில் எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரி ரத்தம் ஓடுது...”
“உங்க வாழ்க்கையை படமா எடுத்தா யார் நடிச்சா நல்லாருக்கும்?”
“ஜோதிகா. அந்தப் பொண்ணு முகத்தில் அஷ்டாவதானம் தாண்டவமாடுது...”
- சுரேஷ்ராஜா
|