ஹாலிவுட் வெப்சீரிஸில் கலக்கும் தமிழ்ப்பெண்!
கொரோனா காலத்தில் சினிமாக்காரர்களுக்கு கைகொடுப்பது ஓடிடி தளங்கள். அப்படி ஒரு தளத்தின் வழியாக ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப் பெண். பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். அவருக்கு பதினெட்டு வயதுதான் ஆகிறது. அதற்குள் எட்டுத்திக்கும் அவர் புகழ்க் கொடி பறக்க ஆரம்பித்துள்ளது.
மைண்ட் கலிங் இயக்கியுள்ள தொடர் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’. அந்தத் தொடரில் நடித்த அனுபவம் பற்றி நம்மிடம் கூறினார் மைத்ரேயி.‘‘அந்தப் படப்பிடிப்பில் ஒரு பள்ளியின் வகுப்பறையில் இருப்பது போல்தான் நான் உணர்ந்தேன். பெரிய வித்தியாசமாக எனக்குப் படவில்லை. முதல்நாளே அடுத்தநாள் நடிக்கவுள்ள காட்சிக்கான பிரதிகளைக் கொடுத்துவிடுவார்கள்.
அதனால் இரவெல்லாம் வசனங்களை மனப்பாடம் செய்தேன். கேமரா முன் இருக்கும் போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு காட்சி சரியாக வரவேண்டும் என்றால் அவர்கள் சமரசம் ஆகமாட்டார்கள். அப்படி ஒரு காட்சியை அவர்கள் இருபத்தைந்து தடவை கூட எடுத்தனர்’’ என்ற வரிடம் ஹாலிவுட் வாய்ப்பு, ஆங்கிலம் பேசவேண்டிய நடிகை என்ற வகையில் உங்களது பெயரை மாற்றி விடுவீர்களா? என்று கேட்டபோது,‘‘நான் கனடிய தமிழ்ப் பெண். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள் நான்.
அந்த அடையாளத்தை நான் இழக்க மாட்டேன். அதனால் என் பெயரை மாற்ற மாட்டேன்’’ என்றவர் தொடர் அனுபவத்தைத் பற்றி மேலும் பேசும் போது,‘‘அந்தத் தொடரில் நடித்தபோது கூட இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தமிழ் தம்பதிகளின் மகளாகத்தான் நடித்தேன். அதனால் இலங்கைத் தமிழ் பேசி நடிப்பதைவிட அதை ஒரு சிறு சவாலாகவும் மகிழ்ச்சியாகவும்தான் உணர்ந்தேன்.
அமெரிக்க இந்திய தமிழ்ப்பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் அடையாளச் சிக்கலுக்கு ஆளாவது, தன்னை நிரூபிக்கப் பாடு படுவது என்று கதை போகிறது. அந்தப் பெண்ணுக்குத் தாயார், நண்பர்கள் என்று பிரச்சினைகள். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவள் என்ன செய்கிறாள் என்று செல்கிறது கதை’’ என்கிறார் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.
- ராஜா
|