கொரோனா காலத்தில் டாக்டர் ஆகிறார் சிவகார்த்திகேயன்!‘கோலமாவு கோகிலா’ என்கிற ஒரே படம் மூலம் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் நெல்சன்.

முதல் படம் நயன்தாரா என்றால் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்கி அமர்க்களப்படுத்துகிறார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தில் ஹீரோயின் பிரியங்கா. இவர் தெலுங்கில் ‘கேங் லீடர்’ படம் மூலமாக அக்கட தேசத்தையே அசர வைத்தவர்.

வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசை அனிருத். ஒளிப்பதிவு விஜய கார்த்திக். தயாரிப்பு கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்.

படத்தைப் பற்றி இயக்குநர் நெல்சனிடம் பேசினோம்.‘‘ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்துமே அடங்கிய கதை இது. இந்த ஜானர் என்று அடக்கிவிட முடியாத ஒரு கதைக்களம். இந்தப் படம் ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்ற எண்ணம் ரசிகர்களிடையே இருக்கிறது. இது வேடிக்கை நிரம்பிய பொழுதுபோக்குப் படம்.

மேலும், கதையில் மருத்துவராக வரும் சிவகார்த்திகேயன், ஆறு பேருடன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார். அவர்கள் அனைவரும் எப்படி அதிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதுதான் படத்தின் ஸ்டோரி. என்னுடைய முந்தைய படத்தை விட இந்தப் படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாக இருக்கும்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும்போதிலிருந்தே சிவகார்த்திகேயனைத் தெரியும். அப்போதிலிருந்து சுமார் பனிரெண்டு ஆண்டு
களாக எங்கள் நட்பு தொடர்கிறது. எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணணும் என்று பேசுவோம். ‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு அவருக்குத் தகுந்த மாதிரியான கதையும் அமைந்தது. கதை அவருக்கு பிடித்திருந்ததால் உடனே ஓ.கே சொல்லிவிட்டார். சிவகார்த்திகேயனிடம் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்தப் படத்தில் இருப்பதால் நம்பிக்கையோடு படம் பார்க்க வரலாம்.

கொரோனாவுக்கு முன்பே பெரும்பாலான காட்சிகளை சென்னை, ஐதராபாத், கோவா ஆகிய இடங்களில் படமாக்கிவிட்டோம். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் படம் நிறைவடைந்துவிடும்.தற்போது இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதால், அதில் தீவிரம் காட்டிவருகிறோம். கொரோனா ஊரடங்கிலிருந்து முழுத் தளர்வு கிடைத்ததும் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு இவ்வாண்டு இறுதிக்குள் படத்தைக் கொண்டு வந்துவிடுவோம்’’ என்றார்.

- ரா