சினிமாக்காரர்களுக்கு முகவரி தரும் வர்கீஸ்!



நடிகர்களுக்கு அவர்கள் நடித்த படங்கள்தான் முகவரி. ஆனால், அந்த முகவரிக்கெல்லாம் முகவரி கொடுப்பவர் ‘வெரைட்டி சினிமா’ வர்கீஸ். சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களில் சிலர் நேரடியாக சினிமா கம்பெனி களுக்குச் சென்று சான்ஸ் கேட்பதுண்டு. பலர் இவர் வெளியிடும் ‘வெரைட்டி சினிமா டைரக்டரி’ மூலம் வாய்ப்பு கேட்பதுண்டு. இந்தத் துறையில் சுமார் முப்பது ஆண்டு காலமாக இயங்கி வரும் வர்கீஸிடம் பேசினோம்.
“உங்களைப்பத்திச் சொல்லுங்க...”

‘‘எனக்கு சொந்த ஊர் சென்னை. அப்பா எம்.வி.ஐப்புரு. அம்மா மேரி. படிச்சது எம்.காம். நடிகர் பாண்டியராஜ் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் என்னுடைய சீனியர். அப்பா மலையாள சினிமாவில் ஏராளமான படங்களுக்கு புரொடக்‌ஷன் கன்ட்ரோலராக வேலை செய்தவர். மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்களின் முன்னோடியான பிரபல நடிகர் ஜெயன் நடித்த ‘கோலிலக்கம்’ படத்துக்கும் அப்பாதான் புரொடக்‌ஷன் கன்ட்ரோலர். அந்தப் படத்துக்காக சோழவரத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் ஜெயன் இறந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.”

“சின்ன வயசுலேருந்தே சினிமாதான் கனவா?”

“பொதுவாக அப்பா போலீஸ் என்றால் மகனுக்கும் போலீஸாகணும்னு ஆசை இருக்கும். என்னுடைய அப்பா சினிமாவில் இருந்தாலும் நானும் அதே துறைக்கு வரவேண்டும் என்று நினைத்ததில்லை. அப்போது எனக்கு சினிமாவைவிட மார்க்கெட்டிங் துறை மீதுதான் நாட்டம் அதிகமாக இருந்தது. அப்போது டெலிஃபோன் டைரக்டரி ஃபேமஸ். அதற்கடுத்து கோயமுத்தூரிலிருந்து இண்டஸ்ட்ரியல் டைரக்டரியும் வரும். அந்த நிறுவனத்துக்காக வேலை செய்தபோது என்னுடைய வேலையைப் பார்த்துவிட்டு சென்னை கிளை பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். பத்து வருடங்கள் அந்தத் துறையில் இயங்கினேன்.”

“அப்புறம் எப்படி சினிமா டைரக்டரி ஆசை வந்தது?”

“ஒருமுறை சாந்தி தியேட்டரை கடக்கும்போது வாசலில் ‘சினிமா பிரபலங்கள் விலாசம்’ என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அது கறுப்பு வெள்ளையில் சிம்பிளாக அச்சடிக்கப்பட்டிருந்தது. கலர்ஃபுல் இண்டஸ்ட்ரியான சினிமா துறைக்கு இப்படி ஒரு புத்தகமா என்று மனதுக்குள் யோசனை ஓடியது. அப்போது உதித்ததுதான் ‘வெரைட்டி சினிமா டைரக்டரி’. தொண்ணூறுகளில் ஆரம்பித்து இன்றுவரை சக்சஸ்ஃபுல்லாக சினிமா டைரக்டரியை வெளியிட்டு வருகிறேன்.

92ல் வெளியான முதல் பதிப்பின் அட்டைப் படத்தில் ‘தேவர்மகன்’ விளம்பரம் இடம் பெற்றது. பின் அட்டையில் ‘ராசுக்குட்டி’ இடம் பெற்றது. வெரைட்டியாக புத்தகம் வெளியிடுவதற்காக ஃபோட்டோஷாப்புக்கு முந்தைய வெஞ்சுரா என்ற சாஃப்ட்வேரைக் கற்றுக்கொண்டு நானே லே-அவுட் பண்ணுவேன்.”

“பிரபலங்களின் ஆதரவு எப்படி?”

“அமோகம். பஞ்சு அருணாசலம்,  பி.பி.சீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தியாகராஜன், பிரசாந்த், நாசர், டாக்டர் ராஜசேகர், ‘பருத்திவீரன்’ சரவணன், டெல்லி கணேஷ், பாண்டு, குமரி முத்து, சார்லி, ஆனந்தராஜ், சரண்ராஜ், கஸ்தூரி, மீனா, மதுபாலா, தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம், தயாரிப்பாளர் ராமா நாயுடு போன்ற சினிமா பிரபலங்கள் என்னுடைய ரெகுலர் க்ளையன்ட்ஸ்.

அப்போது சிலரிடம் விளம்பரப் பணம் கொடுக்க சில நூறு ரூபாய் கூட இருக்காது. அவர்கள் சினிமாவில் ஸ்டாராக விரும்பும் லட்சியத்துக்கு குறுக்கே நிற்காமல் விளம்பரம் வெளியிடுவேன். இன்று அவர்கள் சினிமாவில் ஷைனாகி கோடிகளில் சம்பளம் வாங்குவதுதான் என் பிசினஸுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்.”

“இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான இத்துறை பயணம் எப்படி இருக்கு?”

“என்னுடைய சினிமா டைரக்டரி ஆங்கிலத்தில் வெளிவந்ததால் ஆரம்பத்தில் அதற்கான வரவேற்பு குறைவாக இருந்தது. பின் சில வருடங்களில் என்னுடைய டைரக்டரி இல்லாத சினிமா கம்பெனியே இல்லாதளவுக்கு வளர்ந்தேன்.இது டிஜிட்டல் உலகம் என்பதால் காலத்துக்கு ஏற்ற மாதிரி மொபைல் ஆப், வெப்சைட், யூ-டியூப் சேனல் என்று தளங்களை விரிவாக்கியுள்ளேன். கொரோனாவுக்கு முன்புதான் 26வது எடிஷன் வெளிவந்தது.  

இப்போது டிக்டாக், ஹலோ போன்ற செயலிகள் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் என் டைரக்டரிக்கான வரவேற்பு குறையவில்லை. அன்றும் இன்றும் தென்னிந்திய சினிமாவின் நுழைவு வாயிலாக என்னுடைய சினிமா டைரக்டரி இருப்பது இத்துறையால் எனக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன்.

கடந்த 20 வருடங்களாக ‘ஸ்டார் நைட்’ ஷோவும் நடத்தி வருகிறேன். சினிமாவில் உள்ள முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் எனக்கு பரிச்சயம் இருப்பதால் சினிமாவில் நடிக்கவும் சான்ஸ் வருகிறது. விரைவில் நான் நடிகனாக அவதாரம் எடுத்தாலும் ஆச்சயர்ப்
படுவதற்கு ஒன்றுமில்லை.

என்னுடைய பெஸ்ட் மீடியா நிறுவனத்தின் மூலம் விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள், டாக்குமெண்டரியும் எடுத்து வருகிறேன். எல்லோருடைய வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். என்னுடைய இந்த வெற்றிக்குப் பின்னால் என்னுடைய மனைவி ஷெர்லி வர்கீஸ் இருக்கிறார்’’ என்று மனைவியைப் பார்த்து புன்னகைக்கிறார் வர்கீஸ்.

- எஸ்ஸார்