முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!
முகப்பரு என்பது சருமத்தில் ஏற்படும் சின்ன பிரச்னை. ஆனால் இதை முறையாக கவனிக்காமல் இருந்தால் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், பருக்கள், வீக்கமடைந்த நீர்க்கட்டிகள் மற்றும் தழும்புகளை ஏற்படுத்தும். முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்துவது சவாலானது என்றாலும் அதனை குறைக்கவும், தடுக்கவும் சில குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
*உங்களின் சரும வகைக்கு ஏற்ப சரியான அழகு சாதன தயாரிப்புகளை பயன்படுத்துவது அவசியம். ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்ப அழகு சாதனப் பொருட்கள் உள்ளன. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு பிரச்னை அதிகமாக ஏற்படும். அவர்கள் ரெட்டினோல் கிரீம், சாலிசிலிக் ஆசிட், எக்ஸ்ஃபோலியேட்டிங் டோனர் மற்றும் சாலிசிலிக் ஆசிட் வாஷ் போன்ற தயாரிப்புகளை பயன்படுத்தலாம்.
*உங்கள் முக சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். ஒவ்வொரு சருமத்திலும் சிக்கலான நுண்ணுயிர்கள் உள்ளது. ஆனால் சரும நிபுணர்கள், முகப்பருவிற்கு முதன்மையான காரணம் புரோபியோனிபாக்டீரியம் என்பதை அடையாளம் கண்டுள்ளனர். இது சருமத்தை கொழுப்பு அமிலங்களாக மாற்றுவதன் மூலம் முகப்பருவை ஏற்படுத்துகிறது,
*சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய், வியர்வை மற்றும் அழுக்குகளை நீக்கினால் முகப்பரு ஏற்படாமல் தடுக்கலாம்.
*தரமான மாய்ஸ்சரைசர்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் முகப்பரு ஏற்படாமல் பாதுகாக்கலாம். இருப்பினும் செயற்கை வாசனை திரவியங்கள், எண்ணெய் மற்றும் சருமத்தை எரிச்சலூட்டும் மாய்ஸ்சரைசர்களை தவிர்ப்பது நல்லது.
*தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவும். நீரிழப்பு சருமத்தில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் அதிக எண்ணெய் சுரக்க செய்யும். அதனால் தினமும் குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.
*மேக்கப்பை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். பருக்களை மறைக்க பெரும்பாலானோர் மேக்கப்பினை நாடுகிறார்கள். இது சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து மேலும் பருக்கள் உருவாக செய்கிறது.
*முகத்தில் உள்ள சருமம் மென்மையானது. குறிப்பாக பருக்கள் உள்ள சருமத்தை அழுத்தமாக ஸ்கிரப் செய்யக்கூடாது. இது மேலும் முகப்பருக்களை தோன்ற ஆயுத்தமாக்கும். சிலருக்கு பருக்கள் இருந்த இடம் கரும்புள்ளியாக மாறவும் வாய்ப்புள்ளது. முகப்பரு உள்ளவர்கள், க்ளென்சர் கொண்டு சருமத்தை சுத்தம் செய்து பிறகு மென்மையான பேஷ்வாஷினை பயன்படுத்தலாம்.
*பருக்கள் அழுத்தி அதை வெடிக்க வைப்பதை தவிர்க்கவும். அவ்வாறு செய்யும் போது அந்த இடம் கருமையாக மாறும். பருக்கள் நீங்க சரும நிபுணரின் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம்.
*டாக்டரின் ஆலோசனைபடி சீரம் மற்றும் கிரீம்கள் பயன்படுத்தி வந்தால் முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
*தலைக்கு எண்ணெய் வைத்தால் அதனை உடனடியாக கழுவிடுங்கள், காரணம், தலையில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்குள் ஊடுருவி சென்று மேலும் முகப்பரு ஏற்பட காரணமாகும். வாரத்திற்கு இரண்டு முறை தலையை நன்கு சுத்தமாக வைத்துக் கொண்டால் முகப்பரு ஏற்படுவதை தடுக்கலாம்.
*ரெட்டினாய்டுகளில் வைட்டமின் ஏ உள்ளது. சரும நிபுணர்கள் இதனை பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள். இது சருமத்தில் உள்ள இறந்து போன செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கவும் மேலும் சருமத்தின் துளைகளில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
*டீ ட்ரீ ஆயில் முகப்பரு மற்றும் பருக்களுக்கு ஒரு இயற்கை தீர்வு. இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளைக் கொல்லும். டீ ட்ரீ எண்ணெயுடன் சிறிதளவு மாய்சரைசர் அல்லது கிளன்சரை சேர்த்து பருக்கள் மேல் தடவி வந்தால் குறையும்.
*பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், பால் பொருட்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்க்க வேண்டும்.
*ஹார்மோன் பிரச்னையாலும் சிலருக்கு முகப்பரு ஏற்படும். அதற்கான சிகிச்சையினை முறையாக எடுத்துக் கொள்வதால், முகப்பரு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
*முகப்பரு என்பது சருமத்தில் ஏற்படக்கூடிய ஒரு வகை அழற்சி என்றாலும், அதனை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை முறைகளை பின்பற்றினால் உங்க சருமமும் பொலிவாக காட்சியளிக்கும்.
பிரியா மோகன்
|