வாசகர் பகுதி-விநாயகர் அவதாரம் எப்படி உருவானது?



ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்தபோது பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது காவலுக்கு யாரும் இல்லையென்பதால் தாம் பூசிக்கொள்ள வைத்திருந்த சந்தனத்தைப் பிடித்து ஒரு உருவமாக்கி, தமது சக்தியால் அதற்கு உயிரூட்டினார். எவரையும் உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாதென சொல்லிவிட்டு பார்வதி நீராடச் சென்றார். 
அப்போது அங்கே வந்த சிவபெருமானை அந்த பிள்ளை அனுமதிக்காததால் கோபம் கொண்ட ஈசன் அவரது தலையை வெட்டினார். நீராடி முடித்து வௌியே வந்த பார்வதி தேவி தலை இல்லாமல் கிடந்த பிள்ளையைக் கண்டு கோபமும், ஆவேசமும் கொண்டாள். காளியாக மாறி மூவுலகிலும் அழிவை ஏற்படுத்தினாள். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

 ஈசன் தனது கணங்களிடம் வட திசையில் சென்று முதலில் தென்படும் ஜீவராசியின் தலையை கொண்டு வரும்படி பணித்தார். அவர்களின் பார்வையில் யானை தென்பட, அதன் தலையை இறைவனிடம் கொடுத்தனர். யானையின் தலையினை வெட்டுண்டு கிடந்த பிள்ைளயின் உடலில் பொருத்தி உயிரூட்டினார். இதனால் பார்வதி சாந்தமடைந்தார். சிவன் அந்த பிள்ளைக்கு கணேசன் எனப் பெயர் சூட்டி தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார். இப்படித்தான் விநாயகரின் அவதாரம் வந்தது.

கோளாறு நீக்கும் விநாயகர்!

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது குபேர லிங்கத்தை அடுத்து வருவது இடுக்குப் பிள்ளையார் சந்நிதி. இங்கே இடைக்காட்டுச் சித்தர் மூன்று யந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த சந்நிதியை படுத்த நிலையில் ஊர்ந்து சென்றுதான் தரிசிக்க வேண்டும். அப்போது பதிக்கப்பட்ட யந்திரங்களின் சக்தி உடலில் பரவி நரம்புத் தளர்ச்சி மற்றும் கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும் என்பது ஐதீகம்.

விநாயகரின் திருக்கோலம்!

மதுரை-திருமங்கலத்தில் உள்ள பேரையூர் செல்லும் வழியில் அமைந்துள்ள மாத்தங்கரை கிராமத்தில் அபூர்வமாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அதே போல திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே நின்ற கோலத்தில் அம்பலவான விநாயகர் அருள்பாலிக்கிறார். பிள்ளையார் தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதை வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவல்லம் கோவிலில் தரிசிக்கலாம்.

மாம்பழத்துக்காக பெற்றோர் சிவன்-பார்வதியை வலம் வந்தார். அதை உணர்த்தும் வகையில் திருவல்லத்தில் துதிக்கையில் மாங்கனியை ஏந்தி வடக்கு திசையில் மூஞ்சூறு மீது அமர்ந்து அழகுற காட்சி தருகிறார். நெல்லை வாசுதேவநல்லூர் தேரில் போர்க்கோலம் பூண்ட விநாயகரை தரிசிக்கலாம். இடுப்புக்குக் கீழே யாளி, ஒரு கையில் வாளும் மறுகையில் கோடரியும் ஏந்தியபடி காட்சி தருகிறார்.

அகஸ்தியர் வழிபட்ட விநாயகர்

திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ள ஸ்ரீசந்தி விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. கயிலையில் சிவ-பார்வதி திருமணம் நடந்த போது பூமி வடக்கே தாழ்ந்தது. பூமியை சமப்படுத்த விரும்பிய சிவபெருமான் அகஸ்திய முனிவரை தென்திசை செல்லுமாறு பணித்தார். பொதிகை மலை நோக்கிப் பயணித்தவர், சந்தி விநாயகர் கோவிலை மாலை நேரத்தில் வந்தடைந்தார். அங்குள்ள கடம்பை நதிக்கரையில் மணலை விநாயகராகப் பிடித்து வணங்கினார்.

இப்படி உருவானதுதான் சந்தி விநாயகர் ஆலயம். மாலை நேரத்தில் உருவானவர் என்பதால் இந்தப் பெயர். வறுத்து அரைத்த பச்சரிசி மாவு, கடலைப்பருப்புடன் வெல்லம் பாகு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியம் பிரசாதமாக  படைக்கப்படுகிறது. மாலை நேரத்தில் முனிவர்கள், தேவர்கள், சித்தர்கள் சந்தி விநாயகரை தரிசிப்பதாக ஐதீகம் உள்ளது.

பிள்ளையாரை எப்படி வணங்கலாம்?

* அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தன்று அரச மரத்தடி விநாயகரை பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் பண வசதி பெருகும்.

* வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை பஞ்ச தீப எண்ணெயை அகல்  விளக்கில் ஏற்றி வழிபட்டு வந்தால் மனதிற்கு ஏற்ற வாழ்க்கை துணை அமையும்.

* ஆல மரத்தடியில் இருக்கும் விநாயகரை தினமும் வணங்கி வந்தால் நினைத்த காரியம் கைகூடும்.

* நெல்லி மரத்தடியிலிருக்கும் விநாயகரை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட உயர்ந்த பதவி கிடைக்கும்.

* வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பால், பன்னீர், இளநீரால் அபிஷேகம் ெசய்து வஸ்திரம் அணிவித்தால் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

* சந்தன மரத்தினால் ஆன விநாயகரை தொழில் நிலையங்கள், வியாபாரத் தலங்களில் வைத்து விநாயகர் கவசம் படித்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் வியாபாரம் விருத்தியாகும்.

* வெள்ளை எருக்கன் வேரில் செய்த விநாயகரை இல்லத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் சேரும். கண் திருஷ்டி போகும்.

* கும்பகோணம் அருகிலுள்ள கோட்டையூரில் உள்ள கோடி விநாயகரை வழிபட கோடி செல்வங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

* ராகு-கேதுவுக்கு அதிபதியான விநாயகர் வயிற்றில் ராகு, கேது எனும் பாம்புகள் பின்னியுள்ள நிலையில் இருப்பது அபூர்வம். இக்கோலத்தில் உள்ள விநாயகரை வணங்கினால் நாகதோஷம் விலகும்.

* லால்குடியில் உள்ள சிவன் கோயிலில் இருக்கும் பிள்ளையார் செவி சாய்க்கும் விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இவர் பக்தர்களின் குறைகளைச் செவி கொடுத்து கேட்டுத் தீர்த்து வைக்கிறார்.

* திருவையாறு கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு ஓலமிட்ட விநாயகர் என்று பெயர். நள்ளிரவில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு வர பிள்ளையார் ஓலமிட்டு தூங்கிக் கொண்டிருந்த ஊர் மக்களை எழுப்பி, பாதுகாப்பான இடங்களுக்கு போகச் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.