வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!
மதுபனி, தஞ்சாவூர், மியூரல், கலம்காரி என இந்தியாவின் ஒவ்வொரு ஊர்களின் சிறப்புமிக்க ஓவியங்கள் உள்ளன. அந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது
பிச்வாய் ஓவியங்கள். 400 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியங்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளன. தான் வசித்த நகரத்தின் பாரம்பரியமிக்க இந்த ஓவியங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வருகிறார் சென்னையை சேர்ந்த ரச்சிதா. இவரின் ‘ரச் ஆர்ட் ஸ்டுடியோவில்’ இந்த ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலம் அந்தக் கலைஞர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி வருகிறார்.
‘‘நான் இப்போது சென்னையில் வசித்தாலும் என் பூர்வீகம் ராஜஸ்தான். அங்குதான் பிறந்தேன், வளர்ந்தேன். கட்டட துறை குறித்து படிக்க அமெரிக்கா சென்றேன். அதன் பிறகு மும்பையில் சில காலம் வேலை பார்த்தேன்.
அந்த சமயத்தில் ஊருக்கு வந்த போது எங்க ஊரின் பாரம்பரிய ஓவியக் கலையான பிச்வாய் ஓவியங்களை யாரும் வரைவதில்லை என்று கேள்விப்பட்டேன். சரியான வருமானம் இல்லாததால், முதல் தலைமுறையினரைத் தவிர்த்து மற்றவர்கள் இதனை வரைவதில் ஆர்வம் காட்ட விருப்பப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஓவியங்கள் அழிந்து வருவதை கவனித்தேன். அதை மீட்டெடுக்க விரும்பினேன்.
நாம் நம் நாட்டின் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு வெளிநாட்டு பொருளைதான் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். ஆத்தங்குடி டைல்சினை தவிர்த்து மொராக்கன் டைல்ஸ்களை விரும்புகிறோம். நாமே நம் பாரம்பரியத்தை தவிர்த்தால், அவை முற்றிலும் அழிந்துவிடும்.
அதன் முதல் படியாக எங்க ஊரில் உள்ள பிச்வாய் கலைஞர்களை சந்தித்து அவர்களின் ஓவியங்களை நான் வாங்கிக் கொள்வதாக கூறி ஓவியங்களை வரைய தூண்டினேன். இதன் மூலம் அவர்களுக்கு வருடம் முழுதும் ஒரு வருமானம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய திட்டமிட்டேன். அதன் அடிப்படையில் துவங்கப்பட்டது தான் என்னுடைய ரச் ஆர்ட் ஸ்டுடியோ’’ என்றவர், பிச்வாய் ஓவியங்கள் குறித்து விவரித்தார்.
‘‘நான் தற்போது பாரம்பரிய கலைகளின் காப்பாளராக இருப்பதால், இந்த ஓவியங்களை மீட்டு அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை என் முக்கிய வேலையாக செய்து வருகிறேன். பிச்வாய் ஓவியங்கள் பெரும்பாலும் கிருஷ்ணரின் பலவித அவதாரங்களை பிரதிபலிக்கக் கூடியவை.
இந்த ஓவியங்கள் ஒரு பெரிய காட்டன் துணியில் இயற்கை சாயங்கள் கொண்டு வரையப்படுபவை. அவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் முன்பு குறிப்பாக கிருஷ்ணர் மற்றும் கோபிநாத் கடவுளின் சிலைக்கு பின் ஒரு திரையாக தொங்கவிடப்பட்டிருந்தன. 15ம் நூற்றாண்டில் முகலாயர் படையெடுப்பின் போது ஸ்ரீநாத் சிலையுடன் விரிந்தாவனத்தில் இருந்து நத்துவராவிற்கு பிச்வாய் ஓவியங்கள் கொண்டுவரப்பட்டன.
ஒரு நீளமான பருத்தி துணியில் கரித்துண்டினைக் கொண்டு ஓவியத்தின் அவுட்லைன் வரைவார்கள். அதன் பிறகு காய்கறி, பூக்கள், தங்கம், வெள்ளி, மஞ்சள், குங்குமப்பூ போன்றவற்றைக் கொண்டு இயற்கை நிறங்களை உருவாக்கி ஓவியங்களுக்கு வண்ணம் பூசுவார்கள். சில சமயம் விலைஉயர்ந்த கற்களும் இதில் பதிக்கப்படும்.
3 முதல் 4 பேர் சேர்ந்து ஒரு ஓவியத்தை முழுமையாக முடிக்க 4 மாதங்களாகும். பெரும்பாலும் இதில் கிருஷ்ணரின் பலவித அவதாரங்களின் வடிவங்களை வரைவதால், கடவுளின் சிலைக்கு பின் திரையாகத்தான் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் இது வீடு மற்றும் ஓட்டலின் வரவேற்பறையில் அலங்கரிக்கக் கூடிய திரையாக மாறிப்போனது.
நான் அந்த ஊரில் வளர்ந்து வந்ததால், என்னுடைய உறவினர்களே அந்தக் கலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் நான் இணைந்து இன்றைய டிரண்டிற்கு ஏற்ப கிருஷ்ணரை எவ்வாறு வரையலாம், என்ன மோடிவ் டிசைன்களை பயன்படுத்தலாம் என்று கலைஞர்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பிறகு ஒரு அழகிய ஓவியம் ஒன்றை உருவாக்குவோம்.
பிறகு அதனை நான் என் சமூகவலைத்தளத்திலும், வெளிநாட்டில் உள்ள என் நண்பர்களுக்கும் பதிவு செய்வேன். இப்படித்தான் ஒருவர் மூலம் மற்றொருவர் என வாய் வார்த்தை மூலமாக இந்த ஓவியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அடுத்து ஓவியங்களுக்கான வர்க்ஷாப் மற்றும் கண்காட்சி நடத்தினேன். தற்போது வெளிநாட்டினர் பலர் இந்த ஓவியங்களை வாங்க முன்வருகிறார்கள். வெளிநாட்டினர் நம்முடைய பாரம்பரிய கலையினை கொண்டாடி வருகிறார்கள். அதே போல் நம் பாரம்பரியத்தை நாம் ஏன் விட்டுக்கொடுக்கணும். நாமே நம் பாரம்பரிய கலையை செய்ய முன்வராத போது மற்றவர்கள் எவ்வாறு அதற்கு மதிப்பு கொடுப்பார்கள். இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன்.
மக்களும் இதனை புரிந்து கொண்டு, அதனை பாதுகாக்க முன்வருகிறார்கள். இந்த மாற்றத்தைதான் நான் எதிர்பார்த்தேன். குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து தெரியப்படுத்த வேண்டும். மேலும் உலகம் முழுதும் இந்த ஓவியத்தை எடுத்து செல்ல வேண்டும்’’ என்பதுதான் என் நோக்கம் என்றார் ரச்சிதா.
நிஷா
|