இந்திய நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு?
நாட்டின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வடிவமைப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இந்தியாவில் நிலவும் பெண்களின் பாதுகாப்பற்ற சூழல் மிகவும் துரதிருஷ்டவசமானது. மேற்கு வங்க மாநில பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை. உத்தரகாண்ட் மாநில செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை. உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைக்குள் வைத்து செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை. கேரளத்தில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் என நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நொடிக்கு நொடி அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.பாலியல் துன்புறுத்தலில் குழந்தை களும் விதிவிலக்கில்லை என்பதை சமீபத்திய நிகழ்வான கிருஷ்ணகிரி பள்ளி ஒன்றில் நடந்த சம்பவமும், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சம்பவமும் மீண்டும் நமக்கு உணர்த்தியிருப்பதுடன், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து, வீடு, பொது இடங்கள் என, அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதையே ஒவ்வொரு சம்பவமும் நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 48.42 சதவிகிதம் இருக்கும் நிலையில், கல்வி கற்பதற்காகவும், அலுவலகப் பணி நிமித்தமாகவும், சொந்த வேலைகள் காரணமாக வெளியில் எங்கு சென்றாலும் பாதுகாப்பற்ற ஒரு சூழலே இந்தியாவில் நிலவுகிறது.
2023ம் ஆண்டு நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் முதன்மைத் துறையான உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் NCRB எனப்படும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம், IPC எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் SLL (special and local law) எனப்படும் சிறப்பு மற்றும் உள்ளூர்சட்டத்தின் அடிப்படையில், குற்றங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்து, பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை 2023 டிசம்பரில் வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரத்தில் முதல் இடத்தில் ‘‘சிட்டி ஆஃப் ஜாய்'' எனப் படும் கொல்கத்தா இடம் பிடித்துள்ளது.
நிபுணர்கள் கூற்றுப்படி, கொல்கத்தா பெண்கள் படிக்கவும், வேலைக்குச் செல்லவும், வாழ்வதற்கு உகந்த இடமாகவும், காவல்துறையின் செயல்பாடுகள், மக்கள் அணுகக்கூடிய இடத்தில் வெளிப்படையானதாக இருக்கிறது என்கின்றது.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரத்தின் வரிசையில் சென்னை இரண்டாம் இடத்தையும், கோயம்புத்தூர் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. சென்னையின் சட்ட அமலாக்க ஏஜென்ஸிகள், இரவு பகலாக சாலைகளில் ரோந்து சுற்றுவதாகவும், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதை தவறாமல் செய்கின்றன என்கிறது இது.
வேலையில்லாத் திண்டாட்டத்தில் பூஜ்ஜியத்திலும், பெண்களின் பாதுகாப்பில் நான்காவது இடத்தையும் குஜராத் மாநிலத்தின் சூரத் பிடித்துள்ளது. சூரத் காவல்துறையின் வழக்கமான ரோந்து பணிகள், நகரைச் சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் போன்றவை இங்கு மிகவும் சிறப்பாக இருக்கின்றதாம்.
தகவல் தொழில்நுட்பங்களின் மையமாக வேகமாக முன்னேறி வரும் மகராஷ்டிரா மாநிலத்தின் புனே, பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு தங்கும் விடுதிகளும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதுடன், வீதிகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறது. ஏராளமான வேலை வாய்ப்புகளையும், உயர் வாழ்க்கைத் தரத்தையும், குறைந்த குற்ற விகிதத்தையும் கொண்ட, மகிழ்ச்சி நகரமாக அடையாளப்படுத்தப்படும் தெலுங்கானா மாநிலத்தின் முத்து நகரான ஹைதராபாத், பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப்படும் அழகிய நகராகவும், சாஃப்ட்வேர் மற்றும் ஸ்டாட்அப்களுக்கு பெயர்போன கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, பெண்கள் பாதுகாப்பில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
ஜவுளி ஆலைகளின் வருவாய் காரணமாக இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் 8வது இடத்தில் இருக்கின்றது.சமூக ஊடகங்களின் பக்கங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தீவிரமாக பதிலளிப்பதன் மூலம், மும்பை காவல்துறை ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன்களில் வலுவான இருப்பிடத்தைக் கொண்டுள்ளது. இதனால் பரபரப்புக்குப் பெயர் போன மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகர், பெண்களின் பாதுகாப்பில் இந்திய அளவில் 9வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
கடவுளின் தேசமாகவும் அறியப்பட்டு, அதிகமான கல்வி அறிவைக் கொண்ட கேரளா மாநிலத்தின் கொச்சி, காவல்துறைக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான சிறந்த உறவின் மூலமாகவும், சிறிய வழக்காக இருந்தாலும் மக்கள் விரைந்து, காவல்துறைக்கு புகாரளிப்பதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பில் 10வது இடத்தைப் பிடித்திருக்கிறது.கல்வி கற்பவராக, பணியாற்றுபவராக, தொழில்முனைவோராக, குறிப்பிட்ட நகரம் ஒன்றில் நிரந்தரமாய் குடியிருப்பவராக, நாம் வாழுகிற நகரம் எத்தனை பாதுகாப்பானதாய் நமக்கு இருக்கிறது என்பதை எப்போதும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பின் அடிப்படையில் பல்வேறு சவால்களைக் கையாளும் இன்றைய சூழலில், இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள், பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து வந்தாலும், இந்த நகரங்களை மென்மேலும் பாதுகாப்பான ஒன்றாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டாகச் செயல்படுவதே மிக முக்கியம்.
மணிமகள்
|