வாய் துர்நாற்றத்திற்கு சித்த மருத்துவம்!
பேசும் நபருக்கும், அருகே அமர்ந்து பேசுவதைக் கேட்கும் நபருக்கும் தவிர்க்க முடியாத சிரமமான சூழலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று வாய் துர்நாற்றம் (HALITOSIS).நாம் பேசுகின்றபோது அருகில் அல்லது எதிரில் இருப்பவர்கள் நம்மைவிட்டு விலகி முகம் சுளிக்கிறார்கள் எனில், நாம் பேசும் விஷயம் பிடிக்கவில்லை என்கிற காரணத்தை தாண்டி, நம் வாயிலிருந்து வரும் துர்நாற்றமும் காரணமாக இருக்கலாம். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் நெருக்கமாக இருந்து பேசுவதைத் தவிர்த்து, ஒருவித அசௌகரிய சூழலிலே இருப்பார்கள். சிலருக்கு இது தாழ்வுமனப்பான்மையைக் கூட ஏற்படுத்திவிடும்.
‘‘நன்றாகப் பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று நாம் நினைத்து பல்லை சுத்தமாகத் துலக்கியும் வாய் துர்நாற்றம் வருகிறது என்றால் இது வாயோடு தொடர்புடைய விஷயம் மட்டுமல்ல, வாய் பகுதியை தாண்டி உணவுக்குழாய் மற்றும் இரைப்பை புண்கள், நாட்பட்ட கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் நோய்களினாலும் வாய் துர்நாற்றம் வரும்’’ என்கிறார் சித்த மருத்துவரான மானக்சா.
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் இந்தப் பிரச்னையை சரி செய்ய சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து அவரிடம் பேசியதில்...
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்..?
பல்வேறு காரணங்கள் இருக்கிறது என்றாலும், இயல்பில் உணவு உண்டபின் நன்றாக வாய் கொப்பளிக்காமல் இருப்பது. பற்களின் இடைவெளிகளில் மாட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள். இரவு உணவாய் பூண்டு, பெருங்காயம், மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளை உண்டபின், பல் துலக்காமல் அப்படியே படுப்பது, உறங்குவது. புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்ற போதைப் பழக்கங்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தக் காரணங்களைத் தாண்டி, நமது உடலுக்குள் தோன்றும் மருத்துவ ரீதியான காரணங்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக காலையில் எழுந்தவுடன் இருக்கும் வாய்நாற்றம் பல் துலக்கியதும் மறைந்துவிடும். ஆனால், பல் துலக்கிய பிறகும் நீடிக்கும் வாய் நாற்றத்திற்கு, நாம் முதலில்கவனிக்க வேண்டியது பல் மற்றும் பல்ஈறு பகுதிகளைதான்.
பல் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் (Gingivitis), பல் சொத்தை (Dental carries), பல் ஈறுகளில் ஏற்படும் மஞ்சள் கறைகள் (Plaque), பல் ஈறுகளில் இருந்து கசியும் ரத்தம், நாக்கை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது, வாய்களில் ஏற்படும் புண்கள் (Apthous ulcer) இவைகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் முதலில் இதனை கவனிக்க வேண்டும்.
வயிறு மற்றும் உணவுப்பாதையில் ஏற்படும் புண்கள் (Ulcer), சுகாதாரமற்ற உணவு, குடி தண்ணீர், குளிர்பானங்களில் உள்ள Helicobacter pylori பாக்டீரியாவினால் இரைப்பைக் குடலில் ஏற்படும் புண்கள். குடல்புண்ணால் வருகிற Prevotella intermedia என்ற பாக்டீரியா தொற்றும் இணைந்து வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். உணவுக்குழாய், வயிற்றுடன் இணையும் இடத்தில் LES (Lower Esophageal Sphincter) எனப்படும் ஒரு சுருக்கு தசை உள்ளது. இது உணவு வயிற்றுக்குள் சென்றடைந்தவுடன் சுருக்கிக் கொள்ளும் இயல்புடையது. இது சுருக்காமல் நெகிழ்ச்சி அடைந்தால், நாம் படுக்கும்போது வயிற்றில் சுரக்கும் அமில நீர், உணவுக்குழாய் வழியே தொண்டை மற்றும் வாய்ப்பகுதிக்கு வரும். இதில் பல் ஈறுகள் பாதிப்படைந்து வாய் துர்நாற்றம் ஏற்படும். இதையே மருத்துவத்தில் இரைப்பை அமில எதிரெடுத்தல் நோய் (Gastro esophageal Reflux Disease) என்பர்.
கணையம் இன்சுலினை (Insulin) சரியாகச் சுரக்காத போது சர்க்கரை நோயாளிகளின் உடல் குளுக்கோஸை சக்தியாக பயன்படுத்தாமல் உடலிலுள்ள கொழுப்பை பிரித்து உடலுக்கு சக்தியாக மாற்றும். இதனால் உருவாகும் ‘கீட்டோன்கள்’ (Ketones) வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
அதேபோல், மூக்கின் உட்புறத்தில் வளரும் சதையால் வருகிற சைனல் (sinus) அலர்ஜிகள் (Sinusitis) நாட்பட்டு இருந்தால் அதுவும் வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். நாட்பட்ட கல்லீரல் நோய், சிறுநீரக நோய், நுரையீரல் நோய்களாலும், உமிழ் நீரை சரிவரச் சுரக்காத, உமிழ்நீர் சுரப்பிகளாலும் வாய் உலர்ந்து, வாய் துர்நாற்றம் ஏற்படும். வாய் துர்நாற்றத்திற்கு தீர்வு..?
காலை, இரவு என இரண்டு வேளையும் கட்டாயம் பல் துலக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவு உண்ட பிறகு வாயை நன்றாக தண்ணீர்விட்டு கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
உணவு உண்டு முடித்தவுடன் பல் இடுக்குகளில் தங்கும் உணவுப்பொருட்கள் வாய்ப் பகுதியில் இருக்கும் பாக்டீரியாவுடன் கூட்டு சேர்ந்து நாற்றத்தை உருவாக்கும் காரணத்தினால், பல் இடைவெளி உள்ளவர்கள், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பல் இடைவெளிகளில் மாட்டும் உணவுத் துகள்களை நீக்க பற்களை Flossing செய்யலாம். அதாவது பல் மருத்துவரின் ஆலோசனையில் ‘டென்டல் ப்ளாசிங்’ நூலை வாங்கி, இரண்டு பற்களுக்கு இடையில் செலுத்தி மேலும் கீழும் மெதுவாக இழுக்கும்போது, உணவுத் துகள்கள், கறை, அழுக்கு போன்றவை வெளியேறிவிடும். வாய் துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்க வழி..?
நார்ச்சத்து அதிகம் உள்ள அவரை, மணத்தக்காளி, வாழைத்தண்டு, வாழைப்பூ, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், கோவைக்காய், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பதனால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கலாம். கேரட், வெள்ளரிக்காய், சாத்துக்குடி, தர்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள், சுரைக்காய், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்கனி இவைகளை உணவாக எடுப்பதன் மூலமாக வாய் உலராமல் தடுப்பதுடன், இவற்றில் உள்ள வைட்டமின் சி சத்து, பல் ஈறுகளில் நோய் வராமல் தடுக்கும். தினமும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கொண்டு ஆயில் புல்லிங் செய்து வாயைக் கொப்பளிப்பதன் மூலமாகவும் வாய் உலராமல் தடுக்கலாம்.
மிருதுவான ஈறு மற்றும் வாய்ப்புண் உடையவர்கள் வேப்பங்கொழுந்துடன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா பொடியில் பல் தேய்க்கலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் இந்தப் பொடி கலந்து வாய் கொப்பளிக்கலாம். தொடர்ச்சியாக இதைச் செய்வதன் மூலமாக பல் ஈறுகள் உறுதி அடைந்து வாய்ப்புண் குணமடையும்.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற கூற்றுப்படி துவர்ப்பு நிறைந்த ஆலம் விழுது குச்சிகள் மற்றும் கருவேலங்குச்சிகளால் பல் துலக்கி வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி பல் ஈறு பலப்படுவதுடன் வாய் துர்நாற்றம் நீங்கும். அதேபோல் வேப்பங்க்குச்சியில் பல் துலக்கினாலும் பற்களில் கிருமிகள் அணுகாமல் பாதுகாக்கும். வெளியில் செல்லும்போது கிராம்பு, ஏலம், புதினா இலை இவற்றில் ஒன்றை வாயில் போட்டு மென்று கொண்டே செல்லலாம். வெற்றிலையின் காம்பு நீக்கிவிட்டு, இத்துடன் ஒரு கிராம்பு, ஏலம், ஜாதிபத்திரி, சிறு பாக்குத்துண்டு, சுண்ணாம்பு, சுவைக்காக கொஞ்சமாக குல்கந்து, உலர் பழங்கள் இணைத்து மடித்து வாயில் போட்டு சுவைத்தால், இது எச்சில் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டும். பல் ஈறுகளும் பலப்பட்டு, பற்களும் உறுதிபெறும். அசைகின்ற பற்களைக் கொண்டவர்கள் தாம்பூலத்துடன் சிறிது காய்ச்சுக்கட்டி இணைத்து உண்டால் அசைவுற்ற பற்கள் இறுகும்.
மகேஸ்வரி நாகராஜன்
|