பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்!



ஒரு காலத்தில் விவசாயம் என்றால் அதற்கான நிலத்தினை கிராமத்தில் வைத்துள்ளவர்கள்தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்று அனைவரும் ஆரோக்கியத்தின் மேல் அதிகளவு கவனம் செலுத்த ஆரம்பித்ததால் என்னவோ, பலரும் படித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஒரு நிலம் வாங்கி அதில் முழுக்க முழுக்க ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார்கள். 
தற்போது, விவசாயிகளைத் தவிர ஐ.டி துறை மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பலர்தான் இதில் முழுமையாக ஈடுபட துவங்கிஉள்ளனர். அதில் ஒருவர்தான் ஈரோட்டினை சேர்ந்த ஜெகதா. இவர் கடந்த ஏழு வருடமாக ஆர்கானிக் முறையில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் உள்ள திருவேங்கடபாளையம் பெருந்துறையில்தான். என் கணவர் சொந்தமாக தொழில் நடத்தி வரார். எனக்கு என் குடும்பத்திற்கு சத்தான உணவுகளை கொடுக்க  வேண்டும் என்பதில் விருப்பம். அதனால் முதல் படியாக எங்களிடம் இருந்த நிலத்தில் ஒரு சென்ட் பகுதியில் மட்டும் சிறிய அளவில் கொத்தமல்லி, கீரை போன்ற வகைகளை பயிர் செய்தேன். அதில் நல்ல விளைச்சல் இருந்ததால், வீட்டிற்கு போக மீதமுள்ள பொருட்களை நான் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்திடுவேன்.

அதைப் பார்த்து அவர்கள், இதையே நீங்க ஏன் பெரிய அளவில் செய்யக்கூடாது என்று கேட்ட போதுதான் எனக்கும் விவசாயம் மேல் ஈடுபாடு இருந்ததால், எங்களின் 5 சென்ட் நிலத்திலும் முழுக்க முழுக்க விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். கீரையில் துவங்கி அடுத்து நெல் பயிர் செய்தோம். 
அதனைத் தொடர்ந்து மஞ்சள், தேங்காய், கேழ்வரகு, தானிய வகைகளில் தட்டப்பயறு, பச்சைப்பயறு, கொள்ளு, உளுந்து எல்லாம் பயிர் செய்ய துவங்கினோம். மேலும் காய்கறியில் கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கை மற்றும் பலவித பழ வகைகளும் நாங்க பயிர் செய்து வருகிறோம்’’ என்றவர், என்னென்ன பயிர்களை எவ்வாறு சாகுபடி செய்கிறார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘ஆரம்பத்தில் நெல்லினை அப்படியே வியாபாரம் செய்தோம். ஆனால் அதில் நாங்க எதிர்பார்த்த வருமானத்தை பார்க்க முடியல. அதன் பிறகு பாரம்பரிய நெல் வகைகளான தூயமல்லி, கருப்பு கவுனி, காட்டுயானம் போன்றவற்றை அரிசிகளாக மட்டுமில்லாமல் கஞ்சி மிக்ஸ் போன்றும் தயாரித்து கொடுக்க ஆரம்பித்தோம். 

அரிசியாக சாப்பிட விரும்பாதவர்கள் கஞ்சி மிக்சினை வாங்கிக் கொள்கிறார்கள். அடுத்து மஞ்சளையும் தூளாக செய்து விற்பனை செய்கிறோம். கொப்பரைத் தேங்காயை காயவைத்து சுத்தமான தேங்காய் எண்ணெய், கேழ்வரகினை மாவாக மட்டுமில்லாமல் கஞ்சி மிக்சாவும் தயாரிக்கிறோம். எள்ளில் எண்ணெயுடன் புண்ணாக்கும் வியாபாரம் செய்கிறோம்.

அதே போல் நிலக்கடலையை காயவைத்து காய்ந்த பருப்பு, எண்ணெய் மற்றும் புண்ணாக்காகவும் விற்பனை செய்கிறோம். பெரும் விவசாயம் மஞ்சள், கரும்பு, வாழை, நெல் பயிர்கள் என்றால் அதில் ஊடுபயிராக தானியங்களையும் விவசாயம் செய்ய துவங்கினோம். மேலும் கொய்யா, சப்போட்டா, மாம்பழம், அத்தி, நெல்லிக்காயும் விளைவிக்கிறோம். 

பழங்களின் சீசன் முடிந்தால் அதில் கம்பு, ராகி, சோளம் போன்ற சிறுதானியங்கள் பயிர் செய்ய பயன்படுத்துகிறோம். விளையும் பயிர்களை அப்படியே விற்காமல், அதனை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி விற்கும் போது, வருமானமும் இரட்டிப்பாக பார்க்க முடிகிறது’’ என்றவர், தன் நிலத்தினை எவ்வாறு இயற்கை முறையில் பராமரிக்கிறார் என்பதையும் விளக்கினார்.

‘‘எங்க தோட்டத்தில் விளையும் பொருட்களை விற்பனை செய்த பிறகு அதில் மீதமாகும் கழிவுகளை உரமாக மாற்றி விடுகிறோம். இதனால் பூச்சிக் கொல்லி போன்ற ரசாயனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதில்லை. 

அதனை நாங்களே இயற்கை முறையில் தயாரித்துக் கொள்கிறோம். செடிகளுக்கு உரங்களாக ஜீவாமிர்தம் பஞ்சகாவியா அமிர்த கரைசல், தேமோர் கரைசல், பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க 3g கரைசல், தலை உரம், மீன் அமிலம்  என அனைத்தும் நம்மாழ்வாரின் முறைகளை பின்பற்றி தயாரிக்கிறோம். செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த உரங்களை பயன்படுத்துவதால், பூச்சியின் தாக்குதல் இல்லாமல், செடிகள் நன்றாக செழிப்பாக வளர உதவுகிறது.

உதாரணத்திற்கு நெல் வளர்ந்து வருவதை பூப்படைத்தல் என்று கூறுவார்கள். அந்த சமயத்தில் ஒரு தடவையும் பூப்படைத்தல் அடைந்த பிறகு ஒரு தடவையும் எங்களின் இயற்கை கரைசலை தெளித்து விடுவோம். இதன் மூலம் நெல் கதிர்கள் பாழடையாமல்  நெல்மணிகளை முழுமையாக சாகுபடி செய்ய முடியும். அவ்வாறு சாகுபடி செய்யப்படும் நெல்களை நாங்க பாலீஷ் செய்வதில்லை. பாரம்பரிய முறையில் தொப்ப தெளிச்சுதான் வியாபாரம் செய்கிறோம்’’ என்றவர், விவசாயத்தில் ஈடுபட்டது குறித்து விவரித்தார்.

‘‘என் விருப்பத்தை கணவரிடம் சொன்ன போது, அவர்தான் எனக்கு பண உதவி செய்து ஆரம்பிக்க சொல்லி ஊக்குவித்தார். ஆனாலும் நான் முதலில் குழப்ப மனநிலையில்தான் ஆரம்பித்தேன். முதலீடு செய்து, அதனை சரியான முறையில் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயந்தேன். அதன் பிறகு சரியான ஆலோசனையின்படி செய்த போது, அதன் வெற்றியை கண்கூடாக பார்க்க முடிந்தது. 

தற்போது விவசாயம் மூலம் மாதம் 35 ஆயிரம் வரை லாபம் பார்க்க முடிகிறது. பணம் சம்பாதிப்பதை காட்டிலும் இதில் எனக்கு கிடைக்கும் மன அமைதி அளவில்லாதது. மேலும் எங்களின் இணையம் மூலம் எந்தவிதமான பொருட்களை விவசாயத்துக்கு பயன்படுத்துறோம். ஒரு பயிரினை எத்தனை நாள் கழிச்சு சாகுபடி செய்ய வேண்டும் என அனைத்து தகவல்களும் அதில் உள்ளது.

என்னை பொறுத்தவரை பெண்கள் இந்த சமுதாயத்தில் பணம் சம்பாதிப்பதில் யாரையும் நம்பியோ எதிர்பார்த்தோ இருக்கக் கூடாது. தானே சம்பாதிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். ஒரு ஆணின் சப்போர்ட் அவசியமில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் ஆணித்தரமான கருத்து’’ என்றவர், தங்களின் பொருட்களை கொரியர் மூலமாகவும் விரும்புபவர்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

திலகவதி