சினிமாவே வாழ்க்கை என வாழ்ந்தவர்!ஷீலா



செல்லுலாய்ட் பெண்கள்-103

‘நம்மடெ சொந்தம்... நம்மடெ கருத்தம்மே... நம்மடெ ஷீலம்மே....’ என்று கேரள மக்களால் கொண்டாடப்படும் ஒருவராக, மக்களால் நேசிக்கப்படுபவராக நடிகை ஷீலா இருக்கிறார். மலையாளத் திரைப்படங்களில் வெளிப்பட்ட அவரது  அற்புதமான நடிப்பு மட்டுமே அதற்குக் காரணம். 60 ஆண்டு கால (1962 - 2022) திரை வாழ்க்கை; மலையாளம், தமிழ், தெலுங்கு என 3 மொழிகளிலும் 573 படங்கள். அது மட்டுமல்லாமல் இயக்கம், தயாரிப்பு என தன் திரையுலக வாழ்க்கையை ஒரு ஆண் கடப்பது என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். ஆனால் ஒரு பெண் ஆளுமை இத்தகைய சாதனைகளைச் செய்தார் என்றால் அது உண்மையில் மதிப்பிடற்கரிய மாபெரும் சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லைதான்.

நடிகர் பிரேம் நசீருடன் மட்டும் இணைந்து 107 படங்கள், சத்யனுடன் ஏராளப் படங்கள், மதுவுடன் 55 படங்கள், தன்னிலும் வயதில் குறைந்த ஜெயன், கமல ஹாஸன் என அனைவருடனும் இணைந்து நடித்தார். இயக்குநர் சேது மாதவன் இயக்கத்தில் மட்டுமே பல பல படங்கள் என புகழின் உச்சத்தில் இருந்த ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமானால் அவர் உறங்குவதற்கும் கூட நேரம் இருந்திருக்குமா என சிந்திக்க வைக்கிறது.

தினசரி நான்கு ஷிப்ட்கள், அதிகாலை 6 மணி துவங்கி அடுத்த நாளிலும் தொடரும் படப்பிடிப்புகள், ஒவ்வொரு ஸ்டுடியோவாக மாறி அங்கேயே நடித்து, அங்கேயே ஓய்வெடுத்து ஸ்டுடியோவே உலகம், வாழ்க்கை என  ஒரு மனித இயந்திரம் போல் இயங்கியதால்தான் ஓராண்டில் மட்டும் அதிகபட்சமாக 28 படங்கள் என்ற உச்சத்தை அவரால் எட்ட முடிந்துள்ளது. இந்தக் காலக் கணக்கில் 18 ஆண்டுகள் நீண்ட இடைவெளி வேறு.

இவற்றில் வெகுமக்கள் ரசனைக்கேற்ற படங்கள், குடும்பக் கதையைப் பிரதானமாகக் கொண்டவை, பொழுதுபோக்குப் படங்கள் மட்டுமல்லாமல் சிறந்த கதையமைப்பு கொண்டவை, கலையம்சம் நிரம்பியவை என பலவும் உண்டு. சில படங்களில் குணச்சித்திர வேடங்கள். மாஸ் காட்டிய பிளாக்பஸ்டர் படங்களும் உண்டு.தமிழில் அதிகம் அறியப்படாத எழுத்தாளர் மேதாவி தொடங்கி ஞானபீட விருது பெற்ற தகழி சிவசிங்கரன் பிள்ளை வரை அவர்களின் கதைகளில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டம் நல்கிய நாயகி.

ரயில்வே அமெச்சூர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகம் திருச்சூர், கணிமங்கலம் ஆண்டனி - கிரேஸி தம்பதியரின் 10 குழந்தைகளில் 2வது மகளாக சிரியன் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர் செலின். அவர்களில் நால்வர் உயிருடன் இல்லை. தந்தையாருக்கு ரயில்வேயில் பணி என்பதால் அடிக்கடி இட மாறுதலும் நிகழ்ந்தது. ஆரம்பக் கல்வியும் திருவனந்தபுரம், திருச்சூர், எடப்பள்ளி, தமிழகத்தின் ஊட்டி, திருச்சி, சேலம், கோவையின் செயின்ட் பிரான்சிஸ் ஆங்கிலோ - இந்தியப் பெண்கள் பள்ளி என மாறிக்கொண்டிருந்தது.

ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர்களால் நடத்தப்படும் அமெச்சூர் நாடகம். அதற்கான ஒத்திகையை ஜன்னல் வழி வேடிக்கை பார்த்து, வசனங்களைக் கூடவே பேசிப் பேசி மனப்பாடம் ஆகியிருந்தது. நாடகத்தில் நடிக்கவிருந்த நடிகை வராமல் போக, திடீர் நாயகியாக செலின் மேடையேற்றப்பட்டார். இப்படி13 வயதில் விளையாட்டாக ஆரம்பித்தது நடிப்பு,நாடகத்திலிருந்து திரைப்படங்களை நோக்கி….

தந்தையார் மாரடைப்பில் காலமாக, குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. மகளின் நடிப்பார்வத்தை மனதில் கொண்டும், குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியும் குழந்தைகளுடன் சென்னைக்கு ரயிலேறினார். நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் முதல் மனைவி பங்கஜம் ஒரு மலையாளி மற்றும் முன்னாள் நாடக நடிகை. அவருடைய சிபாரிசின் பேரில் எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில் இணைந்து  ‘தென்பாண்டி வீரன்’ நாடகத்தில் சிற்பியின் மகளாக நடிக்க ஆரம்பித்தார். இந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்த இயக்குநர் ராமண்ணாவும் எம்.ஜி.ஆரும் செலின் நடிப்பைப் பார்த்து தங்கள் அடுத்த தயாரிப்பான ‘பாசம்’ படத்தில் நடிக்க அழைத்தனர். உடனடியாக அதனை ஏற்று படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

‘பாசம்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக கல்யாண் குமாருக்கு இணையாக நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜயா - வாஹினி ஸ்டுடியோவில் நடைபெற்றுக்ண்டிருக்கும்போதே, பக்கத்து செட்டில் மலையாளப் படப்பிடிப்பும் நடந்துள்ளது.

 மலையாளப் பெண் ஒருவர் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் என்பதை அறிந்து, வேடிக்கை பார்க்க வந்த இயக்குநர் பி.பாஸ்கரன், தங்கள் படத்தின் நாயகியாகவும் உடனடியாக ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்துள்ளார். ‘பாசம்’ வெளியாவதற்கு முன்னதாகவே மலையாளப் படமான ‘பாக்ய ஜாதகம்’ 1962ல் வெளியாகிப் பெயரையும் புகழையும் ஷீலாவுக்கு கொண்டு வந்து சேர்த்தது. நடிகர் சத்யன் இணையாக ஷீலா நடித்திருந்தார்.

தமிழ்ப்படங்களின் கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து வானம்பாடி, கற்பகம் என பல தமிழ்ப் படங்களில் நடித்தபோதும் குறிப்பிடும்படியான கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை. இரண்டாவது நாயகி, வில்லி, நகைச்சுவை நாயகி இப்படித்தான் வாய்ப்புகள் வந்தன. அறிமுகமான பாசம், பணத்தோட்டம், புதிய பூமி என எம்.ஜி.ஆருடன் 3 படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் எந்தப் படத்திலுமே நடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 நடிகர் ரவிச்சந்திரனுடன் காதல் வயப்பட்டு அவரை மணந்து கொண்ட பின், ரவிச்சந்திரன் ‘மஞ்சள் குங்குமம்’ என்ற படத்தைத் தயாரித்து நாயகனாக நடித்தார். அது முற்றிலும் கதாநாயகிக்கு முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்ட படம். மிகச் சாதாரணமான கதை என்றபோதும், நாயகியாக ஷீலா மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

‘கௌரி கல்யாணம்’ படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புள்ள நல்லதோர் பாத்திரம். இப்படத்தில் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடி இடம் பெற்ற ‘வெள்ளைக் கமலத்திலே’ என்ற பாரதியார் பாடலுக்கு வாயசைத்து நடித்தார். பி.சுசீலா, சூலமங்கலம் இணைந்து பாடிய மற்றொரு பாடலான ‘திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்’ பாடலும் அவ்வளவு பிரசித்தம்.
கவிஞர் கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்திலும் நல்ல பாத்திரம் அவருக்கு வாய்த்தது. குறைந்தபட்சம் 25 படங்களுக்கு மேல் அவர் தமிழில் நடித்துள்ளார்.

ஆனால், நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தது குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே. இந்தத் தருணத்தில்தான் 1964ல் எம்.ஜி.ஆர். படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. அதே நேரம் ‘செம்மீன்’ பட வாய்ப்பும் சேர்ந்து வந்தது. தேர்வு செய்யும் உரிமையை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் ஷீலா. ‘செம்மீன்’ படத்தில் நடிப்பதெனத் துணிந்து இறங்கினார். அதற்கான பரிசாகக் கேரளத் திரையுலகம் அவரை முழுமையாக ஏற்றுக் கொண்டது.

இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவையே மலையாளத் திரைப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த படம். முற்றிலும் ஒப்பனையின்றி நடித்த படமும் கூட. கருத்தம்மாவாக ஷீலா இதில் நடித்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார். விருது பெற்றதால் மட்டுமல்ல, மலையாள சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த மிக முக்கியமான படம். இதன் பிறகே கலைப்படங்களின் ஆட்சி மலையாளத்தில் தொடங்கியது. அதன் பின்னர் பல படங்கள் வெற்றிகளையும் விருதுகளையும் வாரிக் குவித்தன.

பாரப்புரத்து எழுதிய ‘அரை நாழிகை நேரம்’. சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்நாவல் இது கேரள மாநில அரசின் மூன்று விருதுகளைப் பெற்றுத் தந்தது. இக்கதையில் இடம்பெற்ற பல்வேறு பாத்திரங்களின் வாழ்க்கையில் அரை நாழிகை நேரத்தில் மட்டும் ஏற்படும் நிகழ்வுகள் எவ்வாறு ஒவ்வொருவர் வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்து விளையாடுகிறது எனும் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கும் இந்தப் படத்தில் சத்யன், பிரேம் நஸீர், அம்பிகா சுகுமாரன், ராகினி, ஷீலா எனப் பலரும் நடித்திருந்தாலும் நாயகன், நாயகி என யாருமில்லை. 90 வயது பிரதான பாத்திரம் ஏற்று நடித்த கொட்டாரக்கார தரன் நாயர் தான் நாயகன். படம் நெடுக வரும் பாத்திரமும் அவரே.

‘வாழ்வே மாயம்’ (தமிழ்ப்படம் அல்ல) படத்தில் சத்யன் - ஷீலா நாயக பிம்பங்கள். திருமணமாகி தனிக் குடித்தனம் புகும் இணைகள் மத்தியில் நாயகனுக்கு ஏற்படும் சந்தேகம் எனும் பேய் புகுந்து வாழ்க்கையைச் சீரழிக்கும் பழைய மொந்தைக் கதையாக இருந்தாலும், கணவனின் சந்தேக நோயால் சுயமரியாதை இழந்து தாய் வீடு திரும்பும் நாயகியை, நாயகியின் தந்தை (அடூர் பாஸி) நாயகியே விரும்பினாலும் சந்தேகப் பேய் பிடித்த மருமகனுடன் (சத்யன்) குடும்பம் நடத்த அனுப்ப மறுப்பதுடன் கண்ணியமான, மனைவியை இழந்த குடும்ப நண்பருக்கு மறுமணம் செய்து வைக்கிறார். உச்சக்கட்ட காட்சிகளில் நாயகியின் தந்தை (அடூர் பாஸி) மற்றும் மறுமணம் புரிந்து கொண்ட கணவன் (சங்கராடி) எடுக்கும் முடிவுகள் மலையாள சினிமாவுக்கே உரிய புரட்சிகரமானவை. இதில் ஷீலா ஏற்றவை தாயும் மகளுமாக இரட்டை வேடங்கள்.

70களில் வெளியான ‘கள்ளிச் செல்லம்மா’ ஷீலாவின் நடிப்புத் திறனுக்கு வாய்ப்பை அள்ளித் தந்த மற்றுமோர் குறிப்பிடத்தக்க படம். தாய், தந்தை யாருமற்றவளாகத் தனித்து கிராமத்தில் வாழும் பெண் செல்லம்மா (ஷீலா). கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவள். தனித்து வாழ்பவள் என்பதால் துணிச்சலும் அடாவடித்தனமும் உடன் பிறந்தவை என்பது போல் துடுக்குத்தனம் மிக்கவளாகக் காட்சிப்படுத்தப்பட்டவள். அப்படிப்பட்ட அவளும் கூட ஒரு பிரச்சனையிலிருந்து தன்னைக் காப்பாற்றும் ஒருவனிடம் (பிரேம் நஸீர்) அவன் யார், எப்படிப்பட்டவன் என்பதை எல்லாம் அறியாமல் மயங்கித் தன்னைப் பறி கொடுக்கிறாள்.

ஆனால், அவனோ ஒரு வேலையின் பொருட்டு அந்த கிராமத்துக்கு வருபவன்; தன் வேலைகள் முடிந்தவுடன் ஊரை விட்டுக் கிளம்பிச் செல்கிறான். கர்ப்பிணியான செல்லம்மா ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறாள்.

குழந்தையையும் பறி கொடுத்து மீண்டும் அவனைச் சந்திக்க நேரும்போதுதான் தெரிய வருகிறது அவன் ஏற்கனவே மணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளவன் என்று. மனதளவில் நொறுங்கிப் போகிறாள் செல்லம்மா. படத்தின் முடிவு துயரகரமானது. இப்படத்தில் நடித்த ஷீலா கேரள மாநில அரசின் விருதினை முதன்முறையாகப் பெற்றார். மது, பிரேம் நஸீர் இருவருமே எதிர்மறை நாயகர்களாகத்தான் இப்படத்தில் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

மற்றும் ‘ஒரு பெண்ணின்டெ கதா, ஜீவிக்கான் மறந்நு போய ஸ்திரீ, காவ்ய மேளா, ‘யக்‌ஷகானம்’ என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி வண்ணமயமான பல்வேறு பாத்திரங்களுக்கு உயிரோட்டமான நடிப்பை அளித்தவர் ஷீலா.  இயக்குநராகவும் வென்றவர்‘யக்‌ஷகானம்’ (தமிழில் ஆயிரம் ஜென்மங்கள்) படத்தில் காதல் மறுக்கப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப்படும் காதலி (உஷா நந்தினி) தன் காதலனின் மனைவியின் உடலில் புகுந்து, காதலனை அடைய முயற்சிக்கும் கதை என்றாலும். உச்சக்கட்ட காட்சியின் முடிவு ரசிகர்கள் யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமானது. பொதுவாக இதுபோன்ற ஆவிகளைக் கதாநாயகன் தனது மனோவசியத் திறமையால் மயக்கி நாயகியின் உடலிலிருந்து வெளியேற்றியோ அல்லது மாய மந்திர தந்திரங்களையோ, கடவுள் நம்பிக்கையையோ பயன்படுத்தி அவளது கணவனைக் காப்பாற்றி விடுவதாகத்தான் பெரும்பாலும் காட்சிகள் அமைக்கப்படும்.

ஆனால், இப்படத்திலோ ஆவி மிகவும் புத்திசாலித்தனமாகத் தன் காதலனைத் தன்னுடன் கொண்டு செல்வதில் வெற்றியடைந்து விடுகிறது. இதில் ஆவி புகுந்த பெண்ணாக ஷீலா,  கணவனாக மது, ஷீலாவின் அண்ணனாகவும் மனோதத்துவம் தெரிந்த மருத்துவராகவும் கே.பி. உம்மர் நடித்திருப்பார்கள். ஒரு இயக்குநராக  ‘யக்‌ஷ கானம்’ படம் மூலம் ஷீலா பெரும் வெற்றி பெற்றார். தமிழகத்தின் பத்திரிகையாளர் ‘மதி ஒளி’ சண்முகம் தயாரித்த இப்படமும் அபார வெற்றி அடைந்தது. ஆனால், தமிழில் படத்தின் முடிவையே மாற்றி அமைத்திருந்தார்கள் என்பதுதான் சோகம்.
‘சிகரங்கள்’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஷீலா. இதில் ஷீலாவுடன் இணையாக நடித்தவர் ரவிச்சந்திரன். அவர் மேலும் பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக ஜெயன் நடித்திருந்தார்.

நடிப்புக்கு ஓர் நீண்ட இடைவேளை 1964 முதல் 1981 வரை அவரது திரைப்பயணம் என்பது மிக மிக பிஸியாக, இடைவெளியின்றித் தொடர்ந்தது. இரு முறை மண வாழ்வில் ஈடுபட்டும் இரண்டுமே மணமுறிவில் முடிந்தன. எத்தனை எத்தனையோ பிரச்சனைகளுக்கு இடையிலும் அவர் நடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. ஷீலாவை நம்பி மிகப்பெரிய குடும்பம்  இருந்தது. தம்பி, தங்கைகளின் கல்வி, திருமணம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று அனைவரையும் கரையேற்றி விட்டவர் அவர். மலையாளத்தில் முதலில் அறிமுகமான ‘பாக்ய ஜாதகம்’ தொடங்கி ஓய்வின்றி நடித்தவர்.

திருமணத்துக்குப் பின் கர்ப்பமான நிலையிலும் 9 மாதங்கள் வரை தொடர்ந்து நடிப்பு... நடிப்பு.. நடிப்புதான். மகன் பிறந்த பின் மூன்று மாதங்கள் ஓய்வு, அதற்குள்ளாகவே 9 படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து விட்டன. அதன்பின் ஓய்வென்பதே இல்லை. பச்சிளம் குழந்தை, அதைப் பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸ் என்று 9 மணி முதல் 5 மணி வரை படப்பிடிப்பு என மீண்டும் முழுமூச்சாக நடிப்புத் தொழிலை மேற்கொண்டவர் ஷீலா. அதன்  பின் மகனின் கல்விக்காக முற்றிலும் நடிப்பைத் துறந்து ஊட்டியில் குடியேறினார். மகன் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை சினிமா பற்றி அவர் நினைக்கவேயில்லை.

அமர்க்களமாய் மறுபிரவேசம் மகனின் வற்புறுத்தலால் மீண்டும் 2002 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் முதிய பெண்ணாக வேடமேற்று நடித்த ‘மனசினக்கரெ’ படம் அவரின் மறு பிரவேசமாக அமைந்தது. வயதில் மூத்த அம்மாச்சி மிடுக்காகவும் அதிகார தோரணையிலுமாக ஷீலா அமர்க்களப்படுத்தினார். அதே நேரம் அன்புக்காக ஏங்குபவராகவும் நடித்துக் கேரள ரசிகர்களின் ஒருமித்த வரவேற்பை மீண்டும் பெற்றார். இருபதாண்டுகள் இடைவெளியில் அடுத்தடுத்த தலைமுறைகள் உருவானபோதும் யாரும் அவரை மறக்கவில்லை. படம் நன்கு பேசப்பட்டதுடன் சிறந்த படத்துக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றது.

அடுத்து அவர் நடித்த ‘அகலெ’ படத்திலும் வயது முதிர்ந்த ஆங்கிலோ - இந்தியப் பெண்ணாக ஊனமுற்ற மகளின் எதிர்காலம் குறித்து கவலை கொள்பவராக ஒவ்வொரு ஃபிரேமிலும் மிளிர்ந்தார். இவ்வளவு ஆண்டு காலத்தில் கிடைக்காத தேசிய விருது இப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதாக அவருக்குக் கிடைத்தது. ஷீலா மீண்டும் நடிக்க வந்த பின் பலரும் நடிக்க விரும்பி அழைத்தாலும் தனக்கு நடிப்பதற்கான கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே நடிப்பது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். எய்ட்ஸ் நோயாளியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிக்க வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு இருந்தபோதும் அம்மாதிரியான பாத்திரம் இன்னமும் அமையவில்லை.

பன்முகத்தன்மை கொண்ட திறனாளர்நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், ஓவியர், இண்டீரியர் டெகரேட்டர் என பல முகங்கள் ஷீலாவுக்கு உண்டு. தமிழ், மலையாளத்தில் பல சிறுகதைகளை எழுதியவர். ‘குயிலின்டெ கூடு’ என்ற நாவலையும் எழுதியுள்ளார். சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர் விருது, தேசிய விருது மற்றும் கேரள அரசின் உயரிய விருதான ஜே.சி.டானியல் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என பல விருதுகளையும் பெற்றவர்.

மலையாளச் சின்னத்திரையிலும் தன் முத்திரையைப் பதித்தவர். இப்போதும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். மிக நீண்ட காலம் மலையாளப் படங்களில் சிறப்பான நடிப்பை அளித்த அவரைத் தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை. சினிமாவே வாழ்க்கை, வாழ்க்கையே சினிமா என வாழ்ந்த ஷீலாம்மே கேரளத்துக்கு மட்டும் சொந்தமானவரல்ல, அவர் அனைவருக்கும் உரியவர்.

ஷீலா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

பாசம், பணத்தோட்டம், வானம்பாடி, கற்பகம், சித்ராங்கி, கருப்புப் பணம், இரவும் பகலும், காட்டு ராணி, இதயக் கமலம், வல்லவன் ஒருவன், கௌரி கல்யாணம், பால் மணம், புதிய பூமி, சத்தியம் தவறாதே, மூன்றெழுத்து, ஓடும் நதி, பெண்ணை வாழ விடுங்கள், மஞ்சள் குங்குமம், அம்மா அப்பா, செந்தூர தேவி, சந்திரமுகி, சீடன், பாலக்காட்டு மாதவன், மற்றவன்.

செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் இடம்பெறும் கட்டுரைகள் காப்பிரைட் உரிமை பெற்றவை. இக்கட்டுரைகளிலிருந்து எந்த ஒரு பகுதியும் கட்டுரை ஆசிரியரின் ஒப்புதல் பெறாமல் அச்சு வடிவிலோ, யூ டியூப் சானல்களிலோ எடுத்தாளப்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஸ்டில்ஸ் ஞானம்