நடைபாதையில் புத்தகாலயங்கள்



புத்தகங்கள் படிக்கும் பழக்கம் சிறிது சிறிதாக நம்மிடையே குறையத் தொடங்கி விட்டது. நம் உற்ற நண்பனாகக் கருதப்பட்ட புத்தகங்களை பின்தள்ளியுள்ளது கைபேசிகள். இன்றைய விஞ்ஞான முன்னேற்றங்கள் நம் கைக்கு வரும் முன், புத்தகங்கள் மூலம்தான் அறிவை பெருக்கிக் கொண்டோம்.
இன்று அனைத்தையும் ‘கூகுள்’ சொல்லித் தருகிறது. இவையெல்லாம் நிறைந்து காணப்பட்டாலும், மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சியாட்டலில் புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றும் நிலையாக உள்ளது. ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்குக் கூட அங்கு புத்தகம் பார்த்து கதை சொல்கிறார்கள். அதற்கு காரணம் அங்குள்ள நடைபாதை புத்தகாலயங்கள்.

வீட்டு வாசலில் அழகான தோட்டம் தான் பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் இங்கு ஒவ்வொரு வீட்டு வாசலில் தோட்டம் இருக்கிறதோ இல்லையோ அங்கு அழகான சிறிய அளவில் புத்தக அலமாரிகளை பார்க்கலாம். தோட்டத்திற்குள் ஒரு புத்தக அலமாரி இருந்தால் பார்க்கும் போதே கண்களுக்குப் பசுமையாகவும், மனதிற்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
கண்ணாடி பேழைக்குள் விதவிதமான புத்தகங்கள். யார் வேண்டுமானாலும் திறந்து எடுத்துப் படிக்கலாம். அதே சமயம் நம்மிடம் பயன்படுத்திய புத்தகங்கள் இருப்பின், அதையும் கொண்டு வைக்கலாம். அங்கு யாரும் அநாவசியமாக எந்த பொருளையும் தொடுவது கிடையாது. புத்தகம் படிக்க எடுத்துச் சென்றாலும், அதை திருப்பி கொண்டு வந்து வைத்துவிடுகிறார்கள்.

குழந்தைகள் இதை ஒரு பழக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் புதிய புத்தகங்களை எடுத்துப் படிக்கிறார்கள். படங்களை மையமாகக் கொண்டு, வண்ணத்தால் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படுகிறது. படிக்கத் தெரியாத பருவத்தில் படங்களால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் வளர வளர புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை வளர்த்துக் கொள்கிறார்கள்.

 மேலும் எழுத்துக்களை வண்ணமயமாக்கி  புத்தக வடிவில் பார்க்கும் போது, அதில் உள்ள படங்கள் குழந்தைகளின் மனதில் எளிதாக பதிந்துவிடுகிறது. இது எழுத்துக்கான வார்த்தைகளையும் பிள்ளைகள் மனதில் பதிய செய்ய உதவுகிறது. இதன் மூலம் புத்தகம் படிப்பதன் முக்கியத்துவம் நமக்கு நன்றாகவே புரிகிறது.

இங்கு நடைபாதையில் மட்டுமில்லாமல் பயணம் செய்யும் வண்டிகளிலும், புத்தகங்கள் காணப்படுகின்றன. நம் ஊரில் எப்படி அங்கங்கே “பஸ் ஸ்டாப்”கள் இருக்கிறதோ,  அதேபோல் நடைபாதையிலும் புத்தகாலயங்களைப் பார்க்கலாம். இங்கு புத்தகங்களுக்காக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கிடைக்கும் புத்தகங்களை எடுத்துப் படித்தாலே போதும். வயதிற்கேற்ற, தொழிலுக்கேற்ற, பதவிக்கேற்ற, பொது அறிவு சம்பந்தப்பட்ட அனைத்து புத்தகங்களும் இங்குள்ளது. இங்குள்ள குழந்தைகள் புத்தகங்களை பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். அவர்கள் வளர்ந்தவுடன் சிறுவயதில் படித்த புத்தகங்களை நன்கொடையாக அளித்து விடுகிறார்கள். வசதி கொண்டவர்கள்  வீட்டிற்கு அருகே அழகான அலமாரியில் புத்தகங்களை வைக்கிறார்கள். பொதுவாக நாம் வீட்டில் சேரும் பழைய பொருட்களை இரண்டாவது விற்பனைக்குத் தருவது வழக்கம்.

ஆனால் சில நாடுகளில், நல்ல பர்னிச்சர்கள் முதல் வீட்டுப் பொருட்கள் வரை வீட்டு வாயிலில் வைத்து ‘இது இலவசம்’ என்று எழுதி ஒட்டி வைத்து விடுகிறார்கள். யாருக்குத் தேவையோ எடுத்துச் செல்லலாம். வெளி நாடுகளிலிருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நண்பர்களாகவோ, ஒரே ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலோ, அவர்களுக்குள் சொல்லி வைத்துக் கொண்டு இலவசமாக பொருட்களை ஒருவருக்கு தந்து உதவிக் கொள்வர். தொழிற் கல்விக்கான புத்தகங்கள் விலை அதிகமென்பதால், பெரும்பாலானோர் புத்தகாலயங்களையே அதிகம் நாடிச் செல்வர். முடித்த மாணவர்கள் இலவசமாகவே கொடுத்து உதவிக் கொள்வர்.

வசதி குறைந்தவர்கள் விற்க நினைத்தாலும், குறைவான விலையை குறிப்பிட்டு வலைத்தளத்தில் எழுதுவார்கள். வேண்டியவர்கள் நேரில் சென்று தொகை கொடுத்து பெற்றுவருவர். ஆக புத்தகங்கள் மட்டுமல்லாது, அனைத்திலுமே ஒரு நியாயமான சலுகை தென்படுகிறது.பிள்ளைகள் விளையாடும் பூங்காவிற்குச் சென்றால், அங்கும் நமக்கு சில புதிய விஷயங்கள் தென்படுகின்றன. பூங்காவின் ஒரு பகுதியில் விளையாட்டுப் பொருட்கள் குவிக்கப்பட்டு இருக்கும்.

அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை யார் வேண்டும் என்றாலும் விட்டு செல்லலாம். புதிதாகவும் வாங்கி வைக்கலாம். ஆறு மாதக் குழந்தை முதல் பத்து வயது சிறார்கள் வரை விளையாடுவதற்கான பல்வேறு பொருட்கள் அங்கு நிறைந்திருக்கும். குழந்தைகள் விளையாடி முடித்தபின் அவற்றை அங்கேயே விட்டு செல்வார்கள். வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென விரும்பினால், எடுத்தும் செல்லலாம். நமக்குத் தெரியாமலே பொருட்கள் காணாமல் போகும் இக்காலத்தில் இத்தகைய ஏற்பாடுகள் நம்மை ஈர்க்கக் கூடியவைதானே!

பிள்ளைகள் விளையாட்டில் கூட நிறைய புதுமைகள் காணப்படுகின்றன. நாம் சிலவற்றைக் கூடாது என்போம். ஆனால் அவை மிகச் சிறந்தவையாக கருதப்பட்டு
பிள்ளைகளுக்கு ஊக்கப்படுத்தப்படுகிறது. சோப்பு நுரையில் விளையாடுவது, தண்ணீரை ஒருவர் மேல் அடித்து விளையாடுவது என பிள்ளைகளை அவர்கள் போக்கில் விளையாட செய்கிறார்கள். வீட்டு வாசலில் தோட்டம் அமைப்பது போல் இம்மாதிரி வசதிகளையும் செய்து கொள்கிறார்கள்.

கோடைகால விளையாட்டுக்கள், குளிர் கால விளையாட்டுக்கள் என தனித்தனியாக உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றின் ஆதாரமாகத் திகழ்வது புத்தகங்கள்தான். உதாரணத்திற்கு சாதாரண ஒரு ரயில் பெட்டி என்றாலும், அதன் சிறப்பு குறித்த புத்தகங்களை பார்க்க முடியும். ஆக, புத்தகம் படித்தலில் ஆரம்பித்து, வண்ணப் படங்கள் மூலம் பெயர்களை நினைவில் கொண்டு, அதை நடைமுறையில் பயன்படுத்தும் பொழுது நிறையவே கற்றுக் கொள்கிறார்கள்.

பிள்ளைகள் அடம் பிடித்தால் கையில் கைப்பேசியை திணித்து விடுகிறோம். சிறு வயதில் ஓடியாடி, கூடி விளையாட சந்தர்ப்பம் இல்லாமல் ஒவ்வொன்றிற்கும் பணம் செலவழித்து வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தான் ‘விளையாட்டு’ என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம், சிறிது மாற்றிப் பார்த்தால், குழந்தைப் பருவம் குதூகலமாக மாற வாய்ப்புள்ளது. அதன் முதல் படி புத்தகங்களை படிக்க பழக்குவது. பின் அவர்களே புத்தகம் கேட்க ஆரம்பிப்பார்கள்.

கதைப் புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டாலே பாடப் புத்தகங்களும் அவர்களின் மனதில் எளிதாக கிரகித்துக் கொள்ள பழகிடும். வீட்டில் முழுவதும் நேரத்தை கைப்பேசியில் படம் பார்க்கச் சொல்லிவிட்டு, பாடங்களை ‘படிபடி’ என சொன்னால் பிள்ளைகள் அலுத்துத்தான் போவார்கள். நாமே அவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் போதும், இன்னும் எத்தனையோ சாதனைகளை புரிவார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர் யாருமே வீழ்ச்சியை கண்டதில்லை. சோதனைகளைக் கூட சாதனைகளாக மாற்றுவது புத்தகங்கள் மட்டுமே!

சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்