பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மாணவி!



உங்களுடைய கனவு எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிய உழைப்பும் அதற்கு இருக்க வேண்டும். தன்னுடைய கனவையும் தன் கடின உழைப்பால் வென்று காட்டியிருக்கிறார் புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி. பொதுவாக ஒருவர் தனக்கான கனவுகளை மட்டும் தான் காண்பார். ஆனால் ஜெயலட்சுமி தன் ஊர் ஒட்டுமொத்த மக்களுக்காக கண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். அதன் அடையாளமாக மாணவர்கள் தங்களின் பாடப் புத்தகத்தில் இவரைப் பற்றி பாடமாக படிக்கும் வரலாறாக மாறியிருக்கிறார்.
 
ஆதனக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தான் ஜெயலட்சுமி படித்தார். அவள் பள்ளியில் படிக்கும் போது கண்ட கனவு, அவர் கல்லூரிக்கு செல்லும் போது நிறைவேறியிருக்கிறது. அதாவது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அவரின் ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதாது ஊரும் என்னுடன் சேர்ந்து வளர வேண்டும் என கரம் நீட்டியுள்ள ஜெயலட்சுமி, அது குறித்து பேசினார்.

“நான் இப்போ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிச்சுட்டு இருக்கேன். எங்க வீட்டுல அம்மா, நான், தம்பி மூணு பேருதான். அம்மா மனநலம் சரியில்லாததால எங்க அப்பா வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். என் தம்பியும் நானும் படித்துக் கொண்டிருக்கிறோம். எங்க ஊர்ல முந்திரி கொட்டை ஃபேமஸ். அதனால வீட்டுல இருக்கும் போது முந்திரியை வாங்கிட்டு வந்து உடைத்துக் கொடுப்பேன். அதில் கிடைக்கும் வருமானத்துல தான் வீட்டு செலவுகள் போக மீதி பணத்தில் நோட் புக்ஸ நானும் தம்பியும் வாங்கிக்குவோம். எந்த அளவுக்கு கடின வேலை செய்கிறேனோ அதே அளவுக்கு படிக்கவும் செஞ்சேன்.

ஒரு நாள் நான் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த போது, பக்கத்துல ஒரு பேப்பர் இருந்தது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாணவி நாசாவிற்கு செல்ல தேர்வாகியிருந்தது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்த கட்டுரையின் கீழ் ஒரு இணையதளத்தின் விலாசமும் இருந்தது. அந்த கட்டுரையை படித்த போது எனக்கும் நாசாவிற்கு போகணும்ன்னு ஆசை ஏற்பட்டது. என் சித்தப்பாவிடம் செல்போன் வாங்கி அந்த  இணையத்தில் என் பெயரை பதிவு செய்தேன். ஆன்லைன் தேர்வு இருந்ததால், அதை எழுதினேன்.

அறிவியல் மற்றும் வரலாறு சம்பந்தப்பட்ட கேள்விகள் என்பதால், பெஸ்ட் பர்ஃபாமராக தேர்வானேன். நாசாவிற்கு செல்ல என் கனவின் முதல் படியை தொட்டுவிட்டேன் என்று நினைத்த போது எனக்கு ரொம்ப ெபருமையா இருந்தது. எனக்கு சிறுவயதிலிருந்தே கலாம் அய்யாவை பிடிக்கும். “ராக்கெட், ஸ்பேஸ் சைன்ஸ்” குறித்த பாடங்களை விரும்பி படிப்பேன். சின்ன வயசுல விண்வெளி வீரர் ஆகணும்னு ஒரு ஆசை இருந்தது. என் வீட்டின் நிலமையினால் அதை வெளியே சொல்லாமல் எனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தேன். அந்த பேப்பரை பார்த்தவுடனேயே நான் கண்டு வந்த கனவுகள் எல்லாம் என் கண் முன்னே மறுபடியும் நின்றது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அதனால் தான் அதற்கு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கான செலவினை தனியார் நிறுவனம் ஏற்றுக் கொண்டாலும் தேர்வாகும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் 1.7 லட்சம் செலவாகும் என்று தெரிந்தவுடன் என் கனவினை அப்படியே எனக்குள் புதைத்துக் கொண்டேன். இது பற்றி தெரிந்த என் ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் எனக்கு உதவ முன்வந்தார்கள். அவர்கள் செய்த பண உதவியுடன் நாசாவிற்கு செல்ல பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அந்த அலுவலகம் சென்றேன்.

அங்கிருந்த அதிகாரி ஒருவர் எதற்காக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கிறீர்கள் என்று கேட்டார். நாசாவிற்கு செல்ல, தேர்வாகி இருக்கிறேன். ஆனால் என்னால் அவ்வளவு செலவு செய்து போக முடியுமான்னு ெதரியாது. என்னால் முடிந்த முயற்சியினை செய்வேன் என்று சொன்னேன். என் நிலமையை உணர்ந்த அந்த அதிகாரி எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தார். பல இடங்களிலிருந்து எனக்கு உதவிகள் வந்ததை உணர்ந்து கனவை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உதவி கேட்டேன். அவரும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் உதவி செய்வதாக உறுதியளித்து ஏற்பாடும் செய்தும் கொடுத்தார்’’ என்றவர் எடை குறைவான செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

‘‘அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் “பே லோடு சேலஞ்ச்-2021” கின்னஸ் சாதனை முயற்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் 100 அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தயாரித்த சிறிய அளவிலான செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முழுவதும் அறிவியலில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் நானும் தேர்வானேன். அதில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை அளவிடும் செயற்கைக்கோளை நான் தயாரித்தேன். இந்த செயற்கைக்கோள்களை பலூன்கள் எடுத்து செல்லும் என்பதால், எடை குறைவாக இருக்க வேண்டும்.

அதனால் நான் அதன் வெளிப்பகுதியை கார்பன் ஃபைபரால் உருவாக்கினேன். அது நான் உருவாக்கிய முதல் செயற்கைக்கோள். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதால், பல தரப்பிலிருந்து எனக்கு நாசா செல்ல நிதியுதவி கிடைத்தது. அந்த சமயத்தில் ‘கிராமாலயா’ என்ற தனியார் தொண்டு நிறுவனமும் எனக்கு உதவி செய்ய முன் வந்தனர். நாசாவிற்கு ெசல்ல போதுமான நிதி கிடைத்துவிட்டதாக அவர்களிடம் நான் கூறிய போது, அவர்கள் வேறு ஏதேனும் உதவி வேண்டுமானால் கேளுங்கள் என்றனர். நான் நாசா செல்ல எனக்கு உதவி செய்த என் ஊர் மக்களுக்கு நான் என்னால் முடிந்த உதவியினை செய்ய நினைச்சேன். எங்க ஊரில் 125 வீடுகள் உள்ளன.

ஆனால் எந்த வீட்டிலும் கழிவறை வசதி கிடையாது. இயற்கை உபாதைக்கு விவசாய நிலப்பகுதிக்கு தான் செல்ல வேண்டும். குறிப்பாக பெண்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத விடியல் மற்றும் இரவு நேரத்தில் தான் செல்வார்கள். அந்த பிரச்னையை நானும் சந்தித்து இருக்கேன். அதனால் கிராமாலயா மூலம் எங்க ஊருக்கு கழிவறை கட்டி கொடுக்க சொல்லி கேட்டேன். எங்க ஊரின் நிலைமையை புரிந்து கொண்ட அந்த தொண்டு நிறுவனத்தினர் எட்டு மாதங்களில் ஆதனக்கோட்டையில் உள்ள 125  வீடுகளுக்கும் கழிவறை கட்டி கொடுத்தனர்.

என் ஊர் மக்களுக்காக நான் செய்த இந்த செயலால், பாடநூல் கழகத்தினர் என்னை தொடர்பு கொண்டு கழிவறை கட்டிய நிகழ்வு குறித்து பாராட்டுகளை தெரிவித்தது மட்டுமில்லாமல் என்னை பற்றிய பாடம் மகாராஷ்டிராவில் உள்ள 7 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ‘கனவு மெய்ப்படும்’ என்ற தலைப்பில் பாடமாக இடம் பெற செய்தனர்’’ என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். நாசாவிற்கு அடுத்த வருடத்தில் செல்கிறேன். அடுத்து வானவியல் துறை பற்றி படிக்க வேண்டும். விண்வெளி வீரர் ஆக வேண்டும் என்று தன் கனவுப் பட்டியலை அடுக்கினார் ஜெயலட்சுமி.   

மா.வினோத்குமார்