யுடியூப்பை கலக்கும் சோனியா மகி- கார்ட்டூன் சேனல்



என் அம்மா வீட்ல ரொம்ம்ம்ம்ம்ப ஸ்டிட். நானும் சும்மாவே இருக்க மாட்டேன். நல்லா வாய் பேசிக்கிட்டு ஜாலியா சுத்துவேன். அதுனாலயே அம்மா என்ன ஏசுவாக. சில நேரம் எஞ்சேட்ட தாங்காம அடிக்கவும் செய்வாக என திருநெல்வேலி, கன்னியாகுமரி கலந்த வட்டார மொழி வழக்கில் நம்மை சிரிக்க வைத்துப் பேசும் சோனியா, கடந்த இரண்டு ஆண்டுகளாய் “சோனியா மகி” என்கிற பெயரில் வட்டார வழக்கு “யு டியூப் கார்ட்டூன் சேனல்” ஒன்றை நடத்தி வருகிறார்.

பெண்களுக்கு பஸ் டிக்கெட் இலவசம் என தமிழக அரசு அறிவித்த நேரம் அது. ‘எங்க அம்மா கறியில உப்பு இருக்கான்னு பார்க்க வரச் சொன்னாக...அதான் வந்தே’ என பெண்களின் பஸ் பிரயாணத்தை கிண்டலடித்து சோனியா போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அப்போதைய வைரல்.

யு-டியூப்பில் இருந்து மிகச் சமீபமாதான் என் கார்ட்டூன் வீடியோக்களை ஃபேஸ்புக், இன்ஸ்டா பேஜ்னு போட ஆரம்பிச்சேன். இப்ப எனக்கு இன்ஸ்டாவில் 7000 வியூவர்ஸ். ஃபேஸ்புக்கில் 30 ஆயிரம் வியூவர்ஸ் என்றவர், யு டியூப் சேனல் ஆரம்பித்த ஓராண்டில் ஒரு லட்சம் சப்ஸ்க்ரைபரோடு வெள்ளி பட்டனை தட்டியதுடன், இன்று நான்கு லட்சம் சப்ஸ்க்ரைபர்களை வைத்திருக்கிறேன் என்கிறார்.

இவரது சேனலில் “ஸ்கூல் பரிதாபங்கள், லேடீஸ் ஹாஸ்டல் அட்ராசிட்டி, பக்கத்துவீட்டுக்காரி அலப்பறைகள், ஃபெஸ்டிவல் செலிபிரேஷன்ஸ், அக்கா தங்கை அலப்பறைகள், கலாட்டா கல்யாணம்” என கன்டெட்டுகள் அனைத்தும் அதகளம்தான். இதற்குள் 400க்கும் மேற்பட்ட கார்ட்டூன் எபிசோட் வீடியோக்களை அப்லோட் செய்து வைத்திருக்கிறார்.

‘அம்மா என்ன வீட்ல வேல செய்ய சொல்லி ஏசுவாக. அதுக்காகவே காலேஜ் போனேன்’ என்றவர், எம்.ஏ.எம்ஃபில்.பிஎட். முடித்திருக்கிறார். படிப்பு முடிச்சதுமே கல்யாணம் ஆச்சு. அவரு வழக்கறிஞர். கூடுதலா கவுன்சிலராகவும் இப்ப இருக்காரு. எம்.ஏ.வரை மட்டும் படிச்சுருந்த என்ன கல்யாணத்திற்கு பிறகு, எம்ஃபில். பிஎட் படிக்க வச்சாரு. எனக்கு லக்ஷித் மகி, தினோஷித் மகின்னு இரண்டு குழந்தைகள். சும்மா வீட்ல உக்காராம, தெரிஞ்ச பள்ளிக்கூடத்துல சோஷியல் சயின்ஸ் டீச்சரா வேலைக்குப் போனேன். இரண்டாவது மகன் பிறந்த நேரம் அதுக்கும் போக முடியல. இந்த நேரத்தில கொரோனா பரவி லாக்டவுனா மாறுச்சு.

என் நிலமையோ மொத்தமா வீட்டுக்குள்ளாறயே இருக்குறமாதிரி ஆகிப்போச்சு. எம் பசங்க இருவரும் எப்பவும் கார்ட்டூன்ல மூழ்க, வேற வழியில்லாமல் நானும் அவுகளோட சேர்ந்து கார்ட்டூன் பார்க்க, அதுவே எனக்கும் புடிச்சுபோச்சு. கார்ட்டூன் கேரக்டர் என்ன சொன்னாலும் பசங்க எடுத்துக்குறாகன்னும் புரிஞ்சது.

ஸ்கூல்ல படிச்சத அவுக மறந்துடக்கூடாதுன்னு, டாக்கிங் டாம் வச்சு கார்ட்டூன் கேரக்டர் மூலமாக ரைம்ஸ் பாட வச்சேன். பசங்களும் அதப்பார்த்து நல்லா சிரிக்க ஆரம்பிச்சாக. அப்படியே தமிழ் பாட்டுகளையும் கார்ட்டூன் கேரக்டர் மூலம் பாடவச்சேன். அப்பதான் இதுக்காகவே சில கார்ட்டூன் மேக்கிங் அனிமேஷன் ஆப்கள் மொபைலில் இருப்பது தெரிய வந்துச்சு. அதிலிருந்து ஒரு நாலஞ்சு ஆப்களை இன்ஸ்டால் செஞ்சுக்கிட்டேன்.

அனிமேஷன் ஆப்களில் வேலை செய்ய செய்ய கேரக்டர் செலக் ஷன் ஆப்ஷன், பேக்ரவுண்ட் செலக் ஷன் ஆப்ஷன், ஃபேஸ் ரியாக் ஷன் ஆப்ஷன், கேரக்டர் மூவிங் ஆப்ஷன்கள் இருக்கிறதையும், அவற்றை பயன்படுத்துறதையும் தெரிஞ்சுக்கிட்டேன். ஸ்டோரிக்கு ஏற்ற கேரக்டரை செலக்ட் செய்து, ஆப்பில் உள்ள சில ப்யூச்சர்ஸ் மூலமே வாய்ஸ் மாடுலேஷனும் செய்யலாம் என்ற சோனியா, என்னோட  எபிசோட்டில் அதிக வியூவ்ஸ் அள்ளுறது ‘கலாட்டா கல்யாணம்’ தொடர்தான் என்கிறார் பெருமிதத்துடன்.

ஸ்கூலில் முதல் ரேங்க் வாங்கி படிச்ச பிள்ளைகளுக்கு ஸ்கூல் லைஃப் ஞாபகம் இருக்குமான்னு தெரியல. ஆனால் என்னபோல லாஸ்ட் பெஞ்சருக்கு ஸ்கூல் லைஃப்ல நடந்த ஒவ்வொரு நிகழ்வும் நல்லாவே ஞாபகம் இருக்கும்.  ஏன்னா நிறைய சேட்டைகள நாமதான் பண்ணுவோம் எனச் சிரித்தவர், என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாமே அப்படித்தான்.

என் வீடியோகளை சிநேகிதிகள் பார்க்கும்போது, பழைய ஞாபகத்துக்குள்ளாற டிராவல் பண்ணி கீழ வந்து எனக்கு கமெண்ட் போடுறாக என்கிறார். நான் 90ல் பிறந்தவள். திருநெல்வேலி மாவட்டத்தின் கடைக்கோடியும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தொடக்கமும் சேரும் ஆவரைக்குளம் கிராமம்தான் ஏ ஊரு. என் கிராமத்த ஒட்டியிருக்க ஏழெட்டு கிராமமுமே இந்த வட்டார மொழியதான் பேசுவாக.

துவக்கத்தில் இருந்தே என் கிராமத்து பள்ளியிலே +2 வரை படிச்சேன். நான் படிச்சது தமிழ் மீடியம். படிப்புல ஆவ்ரேஜ்தான் நான். ஏ ஊரில் மொத்தமே மூவாயிரம் வீடுகதான். அதுலயும் இருக்கவுக பூராம் சொந்தக்காரவுகதான். யார் வெளியில போனாலும், எங்க நின்னாலும், யாரு யாரோடு பிள்ளன்னு நல்லாவே தெரிஞ்சுடும். தெரு முழுக்க சொந்தக்காரவுகளா இருப்போம். எல்லாருமே கூட்டுக் குடும்பம். சித்தப்பா சித்தின்னு வேறுபடுத்தி பார்க்க மாட்டோம்.

அவுகளும் அம்மா அப்பா மாதிரிதான் நம்மகிட்ட நடந்துக்குவாக. கல்யாணமும் ஊருக்குள்ளேதான் பண்ணிக் கொடுப்பாக என்றவர், இதுவரை நான் டிரெயின்ல ஒரு வாட்டிதான் பயணிச்சுருக்கேன் என நமக்கு அதிர்ச்சி கொடுத்து மேலே தொடர்ந்தார். ஏன்னா எங்க ரிலேஷன் யாரும் தள்ளியே இல்ல. ஒன்னுக்குள்ள ஒன்னு பக்கத்துலே ஒரே ஊருக்குள்ள குண்டு சண்டியிலதான் குதிர ஓட்டுறோம். நான் மட்டும்தான் கன்னியா…..குமரிவரை கல்யாணம் பண்ணி வந்துருக்கேன். இதுவே எங்களுக்கு தூரம் என நீட்டி முழக்கி சிரிக்கிறார்.

என் கிராமத்துல தோட்டம் தொரவுன்னு, கிராமத்த சுத்தி பூந்தோட்டம் ஆறு கொளம்னு இருக்கும். ஆத்துல கொளத்துல குளிக்கிறது. தோட்டத்துக்கு போயி பூ பறிக்கிறது. அதுக்கு பிறகு ஸ்கூல் போறதுன்னு ஹேப்பியான வாழ்க்கை என்னுது.  நான் படிக்கிற பொண்ணும் கிடையாது. எப்பவும் தொனதொனன்னு எதையாவது பேசிக்கிட்டு, ஃப்ரெண்ட்ஸோட க்ளாஸ்ல சாப்புடுறது, லாஸ்ட் பெஞ்சுல சிரிக்கிறது, வெளியில சுத்துறதுன்னு படிக்கிறத தவிர எல்லாத்தையும் செய்வேன்.

துறுதுறுன்னு இருப்பேன். இதனாலயே வெளியில நிற்கிறது, அடி வாங்குறதுன்னு நிறைய பனிஷ்மென்ட் டீச்சர்கிட்ட வாங்குவேன். அதனாலயே ஒரு சின்ன கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்குள்ள, நான் வளர்ந்த சூழலை, நான் அனுபவிச்ச விசயங்களை என் வட்டார மொழி வழக்கில் கார்ட்டூன் கேரக்டர்ஸ்ல கொண்டு வந்தேன். எனக்கு நடந்தது, இது எனக்கு நடந்தா நல்லாருக்கும்னு நான் நினைச்சது என கலந்துகட்டி, அதில் சுவாரஸ்யங்களும்  காமெடிகளுமே இருக்கும்.

கார்ட்டூன்களில் வர்ற பல கேரக்டர்கள் நானேதான். அம்மா இட்லிக்கு அரிசி ஊறவச்சா அதை எடுத்து தின்னுட்டு அம்மாக்கிட்ட ஏச்சு வாங்குறது, கூட்டாளியோட சோறு பொங்கி சாப்புட வீட்டுக்கு தெரியாம மாசாலா சாமான், அரிசின்னு எடுத்துட்டுப்போயி அடிவாங்குறதுன்னு ஒரே அமர்க்களம்தான். என் கூட பிறந்தவுக ஆறுபேர்.

மூணு பொண்ணு. மூணு பையன். என் வீடு பெரிசுன்னாலும் எல்லாரும் ஒரே ரூம்ல தரையில பாய் விரிச்சு ஒருத்தர் மேல ஒருத்தர் கைய போடுறது கால போடுறதுன்னு எங்க லைஃப் கலாட்டாவா இருக்கும். அப்ப வீட்ல நமக்குன்னு ரூம், நமக்குன்னு மொபைல் எல்லாம் தனியா கிடையாது. அம்மா எப்பவும் நம்ம கூடவேதான் இருப்பாக.

நம்மள அணுஅணுவா தெரிஞ்சு வச்சுருப்பாக. அம்மாவுக்கு தெரியாம எத செஞ்சாலும் பக்கத்தில் இருந்து கண்டுபிடிச்சுருவாக. அப்பவும் அடிதான்.நான் பார்த்த என் அம்மா, என் அக்கா, என் சித்தி, என் அத்தை, பெரியம்மா, தம்பி, மாமா, ஃப்ரெண்ட்ஸ் என எல்லாத்தையும் கார்ட்டூன் கேரக்டரா கொண்டு வந்துருவேன்.

கேரக்டர்களின் வாய்ஸ் ஒரே மாதிரி இருக்கக் கூடாது என்பதற்காக, ‘வீட்டுல அம்மா ஏசுனா பாவம்போல ஒரு வாய்ஸ் வச்சுருப்போம்ல’ அது மாதிரியான வாய்ஸ்ல தொடங்கி, எல்லா வாய்ஸ் மாடுலேசனும் நானே கொடுத்துருவேன். முகம் சுழிக்கிற விசயங்கள், கெட்ட வார்த்தைகளை நான் சேர்ப்பதே இல்லை. வீடியோ எனக்கு திருப்தியா இருந்தா மட்டுதான் அப்லோட் செய்வேன்.

என்னோட “கல்யாண கலாட்டா” கார்ட்டூன் வீடியோஸ் அனைத்தும் என் வீடுகளில் நடந்த கதைதான். அதை பார்க்குறவுங்க தங்கள் வீட்டு கல்யாணத்தோட கனெக்ட் பண்ணிக்குவாக. உறவுக்காரவுக பக்கத்துலே இருந்ததால் நானும் என் வீட்டுக்காரரும் கல்யாணம் வர ஒரு வார்த்தை பேசிக்கல. கல்யாணம் பண்ணிக்கப் போறவுக என்ன பேசுவாகன்னு ஃப்ரெண்ட்ஸ்ட கேட்டும், என் கற்பனைக்கு எட்டுனதையும் கதையில் வச்சேன். கல்யாணவீட்ல குடும்பத்துக்குள் அன்றாடம் நடக்குற சுவாரஸ்யம், பள்ளியில் நடந்த காமெடி, என்னோட கல்லூரி ஹாஸ்டல் வாழ்க்கையில் நடந்த காமெடினு எல்லாம் கலந்து ரசிக்கிற மாதிரி எல்லா கார்ட்டூன் கேரக்டரும் இருக்கும்.

ஸ்கூலில் நான் படித்தபோது எங்கெல்லாம் பிட் வைத்து பரீச்ச எழுதுனேன்னு நான் டீச்சரா இருந்தப்ப ஞாபகம் வந்தது. அதனால என் ஸ்டூடன்ஸ்கிட்ட எங்க பிட்டு இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்னு சவுண்டா எக்ஸாம் ஹால்ல சொல்ல பிள்ளைகள் பயப்படும் என சிரித்தவர், நான் வீடியோ போடலைன்னா என் வியூவர்ஸ் வீடியோ போடுங்கன்னு கமெண்ட்டில் வந்து கேக்குறாக என்கிறார் பெருமையுடன்.

இந்த வட்டார மொழியால் அசிங்கப்பட்ட நிகழ்வுகளும் எனக்கு நடந்திருக்கு என்றவர், என் கிராமத்தை தாண்டி நான் திருச்செந்தூர், கன்னியாகுமரின்னு போனது காலேஜ் படிக்கதான்.  என் பேச்சு வழக்க டீச்சரும், பிள்ளைகளும் சுத்தி நின்னு கேட்டு ரொம்பவே சிரிச்சுக்கிட்டு கிடப்பாக. அப்புறந்தான் தெரியும் நாம பேசுறத கேட்டு சிரிக்காகன்னு. திருமணம் ஆன புதிதில் நான் வாயாடுற பிள்ளைமாதிரி தெரிஞ்சதால அவர் வீட்டிலயும் முதலில் பயந்தாக.

பிறகு அவிக, இவிக, ஏட்டி, ஏசுவாகன்னு என் பேச்சு வழக்க கேட்டு  சிரித்து கிண்டலடித்து, என் மாமியாரிடத்தில்  ‘மாமி என் பிள்ள அழுகான்’ என்பேன். இதையெல்லாம் கேட்டு சிரித்தவர்களிடம் அப்படியே கனெக்ட் ஆயிட்டேன். மாமி, மாமனார், அவரோடு பிறந்தவர்கள் என எல்லோருமே இப்ப என்மேல் பிரியமாயிட்டாக. நம்மச் சுத்தி இருக்கவுக எல்லாம் நல்லவுகதான். நாம எடுத்துக்குறதுலதான் எல்லாமே இருக்கு என்று நமக்கு பன்ஞ் கொடுத்த சோனியா, திருமணம் ஆன புதிதில் என் வீட்டுக்காரரும் நான் பேசுறதைக் கேட்டு சிரிச்சுக்கிட்டே இருப்பாரு என்கிறார்.

லாக்டவுன் சமயத்தில் எனக்கு பேச யாரும் கிடைக்காம இந்த கார்ட்டூன் ஆப்பில் பேசி பேசி இப்ப இதுகூடவே வாழுற மாதிரி ஆகிப்போச்சு. என்ன பண்றது உள்ள போயிட்டேன். இத விட்டு வெளியில வரவும் முடியல. ஆனால் இன்னைக்கு என் வட்டார பேச்ச ரசிக்கவே நிறைய பாலோவர்ஸ் எனக்கு இருக்காங்க எனும் சோனியா, லாஸ்ட் பெஞ்சரும் ஜெயிக்க முடியும்
என்பதை நிரூபித்திருக்கிறார்.

மகேஸ்வரி நாகராஜன்