நியூஸ் பைட்ஸ்



செஸ் காய்களாக மாறிய குழந்தைகள்

தமிழகத்தில் செக்கானூரணியில் அமைந்துள்ள கெரன் மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானம் செஸ் சதுரங்கமாக அமைக்கப்பட்டு, அதில் 32 மாணவர்கள் செஸ் போர்டின் வெள்ளை, கருப்பு காய்களாக மாறி லைவ் செஸ் விளையாட்டில் பங்குபெற்றனர். மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் மத்தியில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இப்படி ஒரு வித்தியாசமான போட்டியை உருவாக்கி மாணவர்களையும் பெற்றோரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.

தாலிபான் பிடியில் ஆப்கானிஸ்தான் பெண்கள்

தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றி 11 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், உலகிலேயே பெண்கள் மேல்நிலை பள்ளிக்குச் செல்ல தடைவித்த ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது. பெண்கள் தங்கள் முகத்தை மறைக்க வேண்டும், குடும்பத்தில் இருக்கும் ஆண் துணை இல்லாமல் 78கி.மீக்கு மேல் பயணிக்கக்கூடாது.

மேலும் அமைச்சரவையில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லாமல் மகளிர் உரிமைகளுக்கு குரல் கொடுக்க யாருமே இல்லாமல் பெண்களின் அரசியல் பங்கேற்பையும் தாலிபான் நீக்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் பல ஆண்டுகளாக பெண் விடுதலைக்கு பெண் உரிமைகளுக்கு நடந்த முன்னேற்றங்கள் ஒரே ஆண்டில் காணாமல் போகிவிடுமோ என பல சமூக அமைப்புகள் அச்சம் கொண்டுள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பராமரிப்பு இல்லம்

கேரளாவின் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, கொல்லத்தில் கொட்டாரக்கரையில் உள்ள வெளியம் என்ற பகுதியில் மனநலம் குன்றிய பெண்களுக்கு “ப்ரியா ஹோம்” எனும் பராமரிப்பு இல்லத்தை தொடங்கி வைத்தார். சமூக நீதித் துறையின் மறுவாழ்வு கிராமத் திட்டத்தின் கீழ் இந்த இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், தங்களுக்குப் பின் மகனையோ மகளையோ யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற அச்சத்திலேயே வாழ்கின்றனர். அவர்களின் கவலையை போக்கத்தான் இந்த திட்டம் என அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயர் மட்டுமே போதுமானது!

கேரள உயர் நீதிமன்றம், பிறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களில் தாயின் பெயரை மட்டும் சேர்ப்பது ஒருவரின் உரிமை என ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. நம் நாட்டில் பாலியல் வன்கொடுமையில் கர்ப்பமானவர்கள், குடும்ப வன்முறையால் விவாகரத்தானவர்கள், திருமணமாகாமல் குழந்தை பெறும் பெண்கள்  என பலரும் தங்கள் குழந்தைக்கு ஒரே பெற்றோராக இருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் அந்த குழந்தையை வளர்க்கின்றனர்.

ஆனால் அடையாள அட்டைகளிலும், பிறப்புச் சான்றிதழ்களிலும் தந்தையின் பெயருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் இனி அனைவரும் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் அம்மாவின் பெயரை மட்டுமே இந்த சான்றிதழ்களில் சேர்த்துக்கொள்ளலாம் என நீதிபதி பிவி குன்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஸ்வேதா கண்ணன்