எனக்குப் பிடித்தவை! 3 - தயாரிப்பாளர் ஹேமாருக்மணி



‘‘ஒருவர் முதலில் சுவைக்கும் உணவு அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் வீட்டு சாப்பாடு’’ என்று ஆரம்பித்தார் தயாரிப்பாளர் ஹேமாருக்மணி.
‘‘அத்தைகள், அம்மா, பாட்டி என ஒவ்வொருவரும் அவங்க பாணியில் சூப்பரா சமைப்பாங்க. இருந்தாலும் மதுரை கோனார் மெஸ்சின் கறி தோசைக்கு இன்றும் நான் அடிமைன்னு சொல்லணும். எனக்கு சாப்பாடு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அளவாதான் சாப்பிடுவேன்.

அதையே ருசிச்சு சாப்பிடுவேன். எப்போதும் வீட்டு சாப்பாடு தான். கல்யாணமாகி சென்னை வந்து பிசினசுக்குள் நுழைந்ததும் நிறைய வகை உணவுகளை எக்ஸ்புளோர் செய்ய ஆரம்பிச்சேன்’’ என்றவர் தன் வெளிநாட்டு உணவு பயண அனுபவங்களை பகிர்ந்தார்.‘‘ஹாங்காங் தான் நான் முதலில் சென்ற வெளிநாடு. அங்க எல்லா உணவிலும் மீன் எண்ணை சேர்ப்பாங்க.

அங்க பீஃப், போர்க் தான் நிறைய இருக்கும். சிக்கன் ஆர்டர் செய்தா ஒரு மாதிரி பார்ப்பாங்க. அங்க இருந்த மூணு நாட்களில் எப்ப நம்மூர் சாப்பாடு கிடைக்கும்ன்னு தவிச்சிட்டேன். அதன் பிறகு எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் உணவினை தேடி தேடிப் போய் சாப்பிட ஆரம்பிச்சேன். ஊருக்கு கிளம்பும் முன்பே, எந்த இடத்தில் என்ன உணவு இருக்கும்ன்னு ஒரு லிஸ்ட் தயாரிச்சுப்பேன்’’ என்றவர் அவர் சாப்பிட்ட வெளிநாட்டு உணவுகள் குறித்து பகிர்ந்தார்.

‘‘யுரோப்பில் அரிசி சாதம் கிடையாது. ஒரு பிளேட் முழுக்க காய்கறி, கொஞ்சம் இறைச்சி, உருளைக்கிழங்கு அவ்வளவு தான். பிரான்சில் 12 மணி நேரம் ஒரு பெரியபானையில் ஸ்லோகுக்கிங் முறையில் இறைச்சியை சமைப்பாங்க. அவ்வளவு மிருதுவா வாயில் வைத்ததும் வழுக்கிக் கொண்டு போகும். அங்கு பல விதமான பிரட்கள் கிடைக்கும். கொரியாவில் ஜின்செங் சிக்கன் சூப், ஒரு முழு கோழிக்குள் சாதம், ஜின்செங் (ஒரு வகை இஞ்சி), காய்கறி, உப்பு எல்லாம் சேர்த்து கொடுப்பாங்க. ஊறுகாய், சாஸ் சேர்த்து சூப் சாப்பிடணும். மாசிடோனாவில் குடைமிளகாயில் செய்யப்படும் பிண்டூர் சட்னி ஃபேமஸ். செக்கஸ்லோவாகியாவில், கோனில் நட்ஸ், சாக்லெட் புட்டு போல அவிச்சு கேக் ஒன்று தருவாங்க. அவ்வளவு சுவையா இருக்கும். என்னதான் வெளிநாட்டு உணவுகளை சுவைத்திருந்தாலும் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் உணவு பிரியாணி தான்.

என் தோழி ஷப்னம் தான் சென்னையில் உள்ள பெஸ்ட் பிரியாணிகளை எனக்கு அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதுரை தான் உணவுகளின் ராஜா. அங்க பெயர் தெரியாத ஓட்டலுக்கு போனாலும் பரோட்டா சால்னா அவ்வளவு சுவையா இருக்கும்’’ என்று கூறும் ருக்மணிக்கு அவர் அம்மா சமைக்கும் மட்டன் பெப்பர் ஃபிரை ரொம்பவே பிடிக்குமாம்.

நிஷா