எனக்குப் பிடித்தவை! 4 - நடிகர் ஹரீஷ் கல்யாண்



‘‘நான் ரொம்ப ஃபுட்டீ டைப். தேடி தேடிப் போய் சாப்பிடுவேன். பள்ளி மற்றும் கல்லூரியில் என்னுடைய பேவரெட் ஸ்பாட் சாலையோற உணவுகள் தான்’’ என்று தனக்கு பிடித்த உணவு குறித்து பகிர்கிறார் நடிகர் ஹரீஷ் கல்யாண். ‘‘எனக்கு வீட்டு சாப்பாடு பாரம்பரியமா செய்யும் போது ரொம்பவே பிடிக்கும். அசைவ பிரியை என்பதால் பிரியாணி என்னுடைய ஃபேவரெட் ஃபுட். தென்னிந்திய உணவில் தோசை. வெளிநாட்டுக்கு போனா கூட தோசை கிடைக்காதான்னு தேடுவேன். சைனீஸ், தாய் உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன்’’ என்ற ஹரீஷ் தான் சுவைத்த உணவுகள் குறித்து விவரித்தார்.

‘‘ஐத்திராபாத்தில் ராகி சங்கதி, பார்க்க நம்மூர் கேழ்வரகு களி போல இருக்கும். நான் அங்கு போகும் போது எல்லாம் இந்த உணவை சாப்பிடாமல் வரமாட்டேன். இதனுடன் நாட்டுக்கோழி குழம்பு மற்றும் சட்னி சேர்த்து தருவாங்க. மீன் குழம்பு இதற்கு பெஸ்ட் காம்பினேஷன். பட்டக்கோட்டை குமார் மெஸ்சின் எல்லா அசைவ உணவும் பிடிக்கும். எப்படி நம்மூர் உணவுகளில் ஒரு சுவை உள்ளதோ, அதேப்போல் வெளிநாட்டு உணவிற்கும் தனிப்பட்ட சுவையுண்டு. அமெரிக்க நியுயார்க்கில் ஜோயிஸ் பீட்சா கடை வாசலில் எப்போதும் ஒரு பெரிய க்யூ இருக்கும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அதை சாப்பிடாமல் வரமாட்டேன். ஸ்விசர்லாந்தின் மோவன் பிக் ஐஸ்கிரீம். ரொம்ப சாஃப்டா, கிரீமியா இருக்கும்.

 சாப்பிடும் போது பாலின் கிரீமை சுவைக்க முடியும். எனக்கு சாப்பிட பிடிக்கும் என்றாலும் எல்லாவற்றையும் சாப்பிட மாட்டேன். எது எனக்கு பிடிக்குமோ அதை மட்டுமே தேடி தேடிப் போய் சாப்பிடுவேன். அப்ப நான் 11ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். என்னுடைய பள்ளி அருகே சின்ன உணவகம் இருக்கும். அங்க பரோட்டா சில்லி சிக்கன் நல்லா இருக்கும். அதேப்போல் எங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பாய் ஒருவர் பிரியாணி கடை வச்சிருப்பார். அந்த பிரியாணி டேஸ்டைப் போல் இப்ப வரைக்கும் நான் வேற எங்கும் சாப்பிட்டதில்லை. சின்ன வயசில் மட்டுமில்லை இப்பவும் எனக்கு ெபரிய பெரிய ஓட்டல்களை விட சின்ன உணவகத்தில் தான் சாப்பிட பிடிக்கும்’’ என்றவர் அம்மாவின் உணவுக்கு எப்போதும் அடிமையாம்.

‘‘வெளியூர் ஷுட்டிங் முடிச்சு வரும் போது, அம்மா சாதம், பருப்பு வச்சிருப்பாங்க. அந்த பருப்பு நெய் சாப்பாட்டிற்க ஈடு இணை கிடையாது. அதை தால் தட்கான்னு சொல்வோம். பருப்பு தான் கொஞ்சம் குழம்பு பதத்தில் இருக்கும். இதற்கு பெஸ்ட் காம்போ உருளை டோஸ்ட்’’ என்றார் ஹரீஷ் கல்யாண்.

நிஷா