ஆன்லைன் போதையால் அவதி -என்ன செய்வது தோழி ?



அன்புடன் தோழிக்கு,எனக்கு வயது 35. நான் ஒரு மென்பொருள் பொறியாளர். அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துக்காக இந்தியாவில் இருந்தபடியே 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். பெரிய நிறுவனம், அதற்கேற்ப பதவி என்று நல்ல சம்பளமும் கிடைக்கிறது. என் கணவர் ஒரு கட்டுமான பொறியாளர்.
அவரும் பெரிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார். வெளிநாடு, வெளிமாநிலம் என்று அடிக்கடி மாறி, மாறி பணியாற்றுகிறார். நானும் வெளிமாநிலத்தில்தான் வேலை செய்கிறேன். அதனால் பல நாட்கள் நாங்கள் தனித்தனியே வசிக்கும் சூழல். இன்னும் கொஞ்சம் சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊரில், சொந்தமாக தொழில் செய்து கொள்ளலாம் என்பது அவரது இலக்கு.

அவர் அப்படிச் சொல்லி சொல்லி எனக்கும் சொந்த தொழில், சொந்த ஊரில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் எங்கள் பிள்ளைகள். நாங்கள் ஆளுக்கொரு இடத்தில் வேலை செய்வதால், பிள்ளைகள் அவரது அப்பா, அம்மாவிடம் வசிக்கின்றனர். நான் மட்டும் நேரம் கிடைக்கும் போது மாதம் இருமுறையாவது வார இறுதி நாட்களில் பிள்ளைகளை பார்க்கப்போய் விடுவேன்.

அவர் வெளிமாநிலத்தில் இருந்தால் மாதம் ஒருமுறை, வெளிநாட்டில் என்றால் 3,4 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் வந்து பிள்ளைகளை பார்த்து விடுவார். அரிதாக நாங்கள் இருவரும் ஒரே ஊரில் வேலை செய்து இருக்கிறோம். எத்தனை நாட்கள் இப்படி தனிமையில் இருப்பது பிள்ளைகளை விட்டுவிட்டு இருப்பது போன்ற காரணங்களால் நானும் அவரைப்போல சொந்த ஊர், சொந்த தொழில் என்ற எண்ணத்துக்கு வந்து விட்டேன்.

அதனால் வெளியூரில் இருப்பதால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வேன். ஓய்வு நேரங்களில் மற்ற நிறுவனங்களுக்காகவும் வேலை செய்தும் சம்பாதிப்பேன். அதனால் பொருளாதாரப் பிரச்னை எப்போதும் இருந்ததில்லை. கூடவே மாமியார் வீட்டிலும் சரி, எங்கள் வீட்டிலும் சரி எல்லோரும் அரசுப் பணியாளர்கள். மேலும் பூர்வீக சொத்துகள் என வசதிக்கு குறைவு இல்லை. இருந்தாலும் ‘சொந்தக்காலில் நிற்க வேண்டும்’ என்று அவரைப் போலவே எனக்கும் எண்ணம் உண்டு. அவர் சம்பாதிக்கும் பணத்தை எனக்கு அனுப்பி விடுவார். அதை நான்தான் மாமனார், மாமியாருக்கு அனுப்புவது, பிள்ளைகளுக்கு செலவு செய்வது, என் சம்பளத்துடன் சேர்த்து முதலீடுகள் செய்வது போன்றவற்றை கவனிப்பேன்.

இந்த நேரத்தில்தான் கொரோனா பரவல் வந்தது. அதனால் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே நேரத்தில் நான் தலைமை பொறுப்பில் இருப்பதால் அவ்வப்போது அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. அதனால் நான் வெளிமாநிலத்திலேயே தங்கி இருக்கிறேன். கொரோனா பரவலால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக வேலைகள் குறைந்து விட்டன. அதனால் சிலரை வேலையை விட்டு அனுப்பி விட்டனர். நான் உட்பட முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பிரச்னை வரவில்லை. அதனால் எனது அலுவலக வேலை மட்டும்தான். அதுவும் கண்காணிப்பது, வழிகாட்டுவது மட்டும் என்பதால் அதிக வேலை இல்லை.

அந்த நேரத்தில் நிறைய ஆன்லைன் விளையாட்டுகள் அறிமுகமாகின. பொழுது போக்குக்காக நானும்  விளையாடத் தொடங்கினேன். ஆரம்பத்தில் ஆட்களை கண்டுபிடிப்பது, வண்ணம் தீட்டுவது, அணி சேர்ப்பது போன்ற சாதாரண விளையாட்டுகளில் ஈடுபட்டேன். அதற்கெல்லாம் கட்டணம் ஏதுமில்லை. ஒருமுறை விளையாட்டாக கட்டணம் செலுத்தி ஆன்லைன் ரம்மி விளையாடினேன். அதில் வெற்றி பெற்று காசு கிடைக்கவே அடுத்த முறையும் விளையாடினேன். அதிலும் வெற்றிதான். சிறப்பாக விளையாடி பணம் ஜெயிக்க ஆரம்பித்தேன். அதனால் அலுவலக வேலைக்கு இடையில் விளையாடி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தேன். பின்னர் வெற்றி, தோல்விமாறி, மாறி வந்தன.

ஆனாலும் அடிக்கடி வெற்றி கிடைத்ததால் விளையாடுவதை விடவில்லை. கொஞ்ச நாளில் வெற்றி குறைய ஆரம்பித்தது. அதனால் விளையாடுவதை குறைக்க முயன்றேன், முடியவில்லை.  
அலுவலக வேலையை விரைவாக முடித்து விட்டு ஆன்லைன் விளையாட்டில் இறங்கிவிடுவேன். அதற்கேற்ப விதவிமான விளையாடடுகள் அறிமுகமாகி கொண்டே இருந்தன. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் வேறு அதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் விளையாடும் ஆர்வம் அதிகரித்தது. ஒருக்கட்டத்தில் கையிருப்பு கரைவது தெரிந்தது. ஆனாலும் மீண்டும் மீட்டு விடலாம் என்று மனம் தளராமல் விளையாடினேன். ஆனால் பலனில்லை.

எனது சேமிப்பு உடன், கணவரின் சேமிப்பையும் இழக்க ஆரம்பித்தேன். எப்படி பணம் போகிறது என்பது உடனடியாக தெரியாது. கணக்கில் மிச்சம் எவ்வளவு என்று சோதிக்கும் போதுதான் வேதனையில் சிக்கி இருக்கிறோம் என்பது தெரியும். தவறு செய்கிறனே் என்று புரியும். ஆனால் நிறுத்த முயிற்சிப்பேன். ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிப்பேன். மீண்டும் விளையாட ஆரம்பித்து விடுவேன். மீறி  சமாளிக்க முயன்றாலும் ‘உங்களுக்கு போனஸ் வந்திருக்கிறது’ என்று ‘மெசேஜ்’ வரும். அத்துடன் கணிசமான தொகை நமது கணக்கில் சேரும். அவ்வளவுதான் கட்டுப்பாடுகள் காற்றி பறக்கும். மீண்டும் விளையாட ஆரம்பித்து விடுவேன்.

இப்படி சுமார் ஒன்றரை ஆண்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து விட்டேன். கடந்த 2 மாதங்களாக கடன் வாங்கி விளையாடுகிறேன். அப்படி விளையாடா விட்டால் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன. ஒரு மாதிரி பதட்டம் வந்து விடுகிறது. விளையாட்டை தவிர வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. எதையோ பறிகொடுத்த மனநிலையில் இருக்கிறேன். கணவரிடம், பிள்ளைகளிடம் பேசுவது குறைந்து விட்டது. அவர்களிடமும் , என்னிடம் வேலை செய்பவர்களிடம் அடிக்கடி கோபப்படுகிறேன். சண்டை போடுகிறேன். மற்ற  எதையும் விட அந்த  ரம்மி விளையாட்டுதான் முக்கியம் என்று தோன்றுகிறது. மற்றவர்களை அலட்சியம் செய்கிறேன்.

பிள்ளைகளை பார்க்க ஊருக்கு போய் 3 மாதங்கள் ஆகின்றன. அந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி விட்டேன் என்று புரிகிறது. அதுமட்டுமல்ல கணவரின், எனது சேமிப்பு எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன் என்ற விஷயம் வெளியில் தெரிந்தால் என்னவாகுமோ என்று பயம் வேறு என்னை வாட்டுகிறது. என்ன செய்வது என்றே புரியவில்லை. சிறு வயதிலேயே உயர் பதவிக்கு வந்தேன் என்று பெயர் வாங்கிய நிறுவனத்தில் கூட எனக்கு இப்போது கெட்ட பெயர். அடிக்கடி மெமோ வாங்குகிறேன்.

இத்தனை வேகமாக உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத காரணம் சில நாட்களுக்கு முன்பு ‘தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடிய பிரச்னையில் ஒருவர் மனைவி, குழந்தைகளை கொன்று விட்டதாக’ செய்தி கேள்விப்பட்டிருந்ததில் இருந்து பயமும், பதட்டமும் அதிகமாகி விட்டது. ஊருக்கு போவதற்கு கூட பயமாக இருக்கிறது.

யாருக்காவது இந்த விஷயம் தெரிந்தால் என்னை கேவலமாக நினைப்பார்களே என்ன செய்வது? என்று அவமானமாக உள்ளது. அதுவும் என் பிள்ளைகளுக்கு தெரிந்தால்..... நினைத்தாலே நடுங்குகிறது... ‘ஒழுக்கமானவள்’ என்று பெயர் எடுத்தவள். என் பிள்ளைகளுக்கும் அப்படிதான் சொல்லி வளர்த்தேன். பேசாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா? என்ற எண்ணம் கூட அடிக்கடி வருகிறது.

என்ன செய்வது குழப்பமாகவும், பயமாகவும் உள்ளது தோழி. இந்த ஆன்லைன் விளையாட்டு வலையில் சிக்கியுள்ள நான் அதில் இருந்து விடுபட முடியுமா? அதற்கு என்ன செய்வது? ஏனென்றால் அதற்காக பலமுறை விளையாடக் கூடாது என்று முயற்சித்தும் என்னால் முடியவில்லை...?  நான் பழைய நிலைக்கு மீள முடியுமா? இந்த கடிதத்தை என்னால் இதற்கு மேல் எழுத முடியவில்லை. கடிதத்தை சீக்கிரமாக எழுதி முடித்து விட்டு, விளையாட போக வேண்டும் என்று கையும், மனமும் துடிக்கின்றன. அதனால் தான் மீண்டும் கேட்கிறேன் தோழி. இந்த படுகுழியில் இருந்து என்னால் மீண்டு வர முடியுமா? என் கணவர் என்னை புரிந்து கொள்வாரா? என்ன செய்வது? எனக்கு நல்ல வழி காட்டுங்கள் தோழி?இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,
உங்களின் கஷ்டம் புரிகிறது தோழி. நிச்சயமாக உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் சொல்லியதை வைத்துப் பார்க்கும் பொழுது ‘ஆன்லைன் கேம்ஸ்’ எனப்படும் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பது புரிகிறது. அதுவும் ஒருவிதமான போதைதான். மது போன்ற போதை பொருட்கள் எவ்வாறு மூளையை மழுங்கடித்து போதையை உருவாக்குகிறதோ, அதைப்போன்றே ‘இணையவழி விளையாட்டு’ என்ற போதையும் நம்மை அடிமையாக்குகிறது. இப்படி செயல்பாடுகளின் மீதான அதீத ஈடுபாடுகளை  ‘நடத்தை போதை’ (Behavioural Addiction) என்று கூறுவார்கள். 

அதாவது அளவுக்கு அதிகமாக சூதாடுவது, கம்ப்யூட்டர், செல்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது, தொடர்ந்து ஆன்லைனில் விளையாடுவது, சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவது, ஆன்லைனில் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்குதல் போன்றவையும் இதில் அடங்கும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையும் இந்த வகையைச் சார்ந்தது தான். இந்த ஒரு காரணத்தினால் தான் ஏற்படுகிறது என்று எதையும் குறிப்பிட்டு  சொல்லிவிட முடியாது.  உயிரியல்,  உளவியல் சமூக ரீதியான காரணங்கள் மற்றும் அவை ஒன்றுடன் ஒன்று சார்ந்து இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மதுவைப் போலவே ஆரம்ப நிலையில் நாம் இதை செய்யும் பொழுது நமக்கு அதிகப்படியான மகிழ்ச்சி கிடைக்கும். பின்னர் அந்த மகிழ்ச்சிக்காக அடிக்கடி அதை செய்யத் தோன்றும்.  காலப்போக்கில் அதை நாம் செய்யாமல் இருக்கும்பொழுது அதிகப்படியான கோபம், எரிச்சல், தூக்கமின்மை, பதற்றம், கை கால் நடுக்கம், குழந்தைகளிடமும் கணவரிடமும் அன்பை செலுத்த முடியாமல் போவது என,  நாம் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படும். சில நேரங்களில் தற்கொலை எண்ணங்களும் ஏற்படும். நம் சிந்தனை, செயல் அனைத்தும் அதை ஒட்டியே இருக்கும். மற்ற எந்த விஷயங்களிலும் மனம் செல்லாது.

நாள் முழுதும் மனம்  அதையே நினைத்துக் கொண்டிருக்கும். நாம் அதை செய்தே தீர வேண்டும் என்று அதிகப்படியான ஆசை எழும். நீங்கள் செய்யும் வேலையும்,  நீங்கள் வேலை செய்யும் இடமும் அதற்கான சூழலை இன்னும் அதிகப்படுத்துகிறது. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது ‘வேண்டுமென்றே ஆன்லைன விளையாட்டுகளில்  ஈடுபடவில்லை’ என்பதைதான்.

இயல்பாக ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பித்தது, உளவியல் சமூக காரணங்களால் அது அளவுக்கு அதிகமாகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பாதிப்பு உங்களுக்கு மட்டும் தான் ஏற்பட்டுள்ளது என்று நினைக்க வேண்டாம். இது சமூகத்தில் கணிசமான நபர்களை தாக்குகிறது.

உங்களைப் பொறுத்தவரை நீங்கள் அதை புரிந்து கொண்டுள்ளீர்கள். அதன் பாதிப்பை உணர்ந்து உள்ளீர்கள். அதுவே பெரிய விஷயம். அதுதான் இந்த போதையிலிருந்து நீங்கள்  மீள முதல் வழி. இதில் வெட்கப்பட தேவையில்லை. அசிங்கப்பட ஒன்றுமில்லை. ஆனால் நீங்களாக  விளையாடுவதை கட்டுப்படுத்திக்கொண்டு மீண்டு வருவது சற்று கடினம். ஏனெனில் உங்களுக்கு பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இந்த கேள்வியை கேட்கும் நேரத்தில் கூட உங்களால அந்த விளையாட்டின் மீதான இச்சையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓரிரு நாட்களில் இது மாறிவிடாது. நாள்பட்ட சிகிச்சை முறை அவசியம். மனநல மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறுவதும்,  உளவியல் சிகிச்சை முறைகள் எடுத்துக் கொள்வதும் அவசியம்.

அப்படி எடுத்துக் கொண்டால் நிச்சயம் இதிலிருந்து நீங்கள் விரைவாக எளிதில் மீளலாம். இதற்கான உரிய சிகிச்சைகளை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் குறையும்... இயல்பாக இருக்க முடியும்... குடும்ப உறுப்பினர்களிடமும் அன்பாக நடந்து கொள்ள முடியும். நான் உங்களுக்கு கூறியவற்றை உங்கள் கணவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் பெற்றோரிடமும் பேசலாம். அவர்கள் நிச்சயம் உங்களை புரிந்து கொள்வார்கள். உங்கள் சிகிச்சைக்கு குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரமும், அரவணைப்பும் அவசியம். தைரியமாக இருங்கள். இதிலிருந்து நீங்கள் கூடியவிரைவில் விடுபட்டு, பழைய நிலைமைக்கு வருவீர்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...