ஃபேஷன் A-Z



மாறிவரும்  ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

குழந்தைகளும் இப்போது ஆடவர் போல் உடை அணிய விரும்புகிறார்கள். கடந்த இதழில் குழந்தைகளின் உடையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொண்டோம். இந்த இதழில் இவர்களுக்கான உடைகள் என்னென்ன... அதனை எவ்வாறு அணியலாம் என்பதைப் பார்ப்போம். பொதுவாக குழந்தைகளுக்கான உடைகள் பெரும்பாலும் பெரியவர்களின் உடைகளை விட மிகவும் சாதாரணமாகத்தான் அமைக்கப்பட்டு இருக்கும். காரணம் அவர்கள் பெரியவர்கள் போல் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள்... அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருப்பார்கள். அதனால் அவர்கள் விளையாடுவதற்கு வசதியாகவும் அதே சமயம் அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படாத வண்ணம் தான் உடைகள் வடிவமைக்கப்படுகிறது.

ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தின் ஆதிக்கம் காரணமாக குழந்தைகளும் பெரியவர்கள் போல் உடை அணிய விரும்புகிறார்கள். இதில் பிரபலமானவர்கள் முதல் டிசைனர்கள் வரை அனைத்து வர்கத்தை சேர்ந்தவர்களும் தங்களின் குழந்தைக்கு புதிதாக உடை அணிந்தால், அதை உடனே படம் பிடித்து இணையத்தில் பதிவு செய்துவிடுகிறார்கள். இதைப் பார்த்து மற்றவர்களும் தங்களின் குழந்தைகளுக்கும் அதேப்போல் உடையினை வடிவமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் தரமான உடைகளை தேடிப் போய் வாங்குகிறார்கள். இதனாலேயே பெரியவர்களை விட குழந்தைகளின் உடைகள் பல வித ஃபேஷன்களில் அறிமுகமாகிறது. அது மட்டுமில்லாமல் சிறுவர்கள், சிறுமியர்களுக்கு ஏற்பவும் உடைகள் வடிவமைக்கப்படுகின்றன.

குழந்தைகளின் உடைகளைப் பொறுத்தவரை விசேஷம் மற்றும் சாதாரண நாட்களுக்கு ஏற்ப சரியான முறையில் வடிவமைக்க வேண்டும். அப்போது தான் அது உலகளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. குழந்தைகளின் உடலை வருத்தக்கூடாத வகையில் உள்ள துணி வகைகள், அவர்கள் எளிதாக அணியக்கூடிய வகையிலும், சரியான அளவிலும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் உடைகள் வடிவமைப்பதில் மிகவும் முக்கியமான விஷயம். மேலும் ஒரு டிசைனர் பார்வையில் குழந்தைகளுக்கு உடை வடிவமைக்கும் போது, கவனிக்க வேண்டியது, அவர்கள் வளரும் போது, அவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்பவும் வடிவமைக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

இன்று இருக்கும் காலக்கட்டத்தில் பல விஷயங்கள் மாற்றமடைந்துள்ளன. இதில் குழந்தைகள் உடைகளும் விதிவிலக்கல்ல. குழந்தைகளுக்கான உடை அமைத்த காலத்தில் இருந்தே, அவர்களின் பாலினத்திற்கு ஏற்ப உடையின் நிறங்கள் வடிவமைக்கப்பட்டன. குறிப்பாக பழங்காலத்தில் சிறுவர்களின் உடைகளும் சிறுமியர்கள் போல் வடிவமைக்கப்பட்டால், அவர்களின் உடைகளை நிறங்களைக் கொண்டு வேறுபடுத்தப்பட்டன. பெண்கள் பிங்க் நிற உடையினை அணிந்தனர், ஆண்கள் நீல நிற உடைகளை தேர்வு செய்தனர். கடந்த காலங்களில் இதனை எவ்வாறு பின்பற்றினார்களோ, அதேப்போல் தான் இன்றைய காலக்கட்டத்தலும் பின்பற்றி வருகிறார்கள்.

ஃபேஷன் குறித்த வரலாற்றினை பின்னோக்கி பார்க்கும் போது சிறுவர், சிறுமியர்களின் உடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததில்லை என்று தான் சொல்லணும். அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து சிறுவன் யார் சிறுமி யார் என்று உடைகளைக் கொண்டு கண்டறிய முடியாது. அவர்களின் தலைமுடியின் நீளத்தைக் கொண்டே அடையாளம் காண முடியும். சிறுமியர்கள் நீளமான தலைமுடி வைத்திருப்பார்கள். சிறுவர்கள், தங்களின் முடியினை நன்கு வெட்டி இருப்பார்கள். ஆனால் காலம் மாற மாற பெண் குழந்தைகள் ஆண்கள் அணியும் பேன்ட் உடையினையும் அணிய ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்லணும்.

இன்றைய மாடர்ன் உலகில் ஆண்கள் போல் பெண்கள் உடைகளை அணிந்தாலும், ஆண்கள் பெண்களின் உடையினை அணிய முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் 19ம் நூற்றாண்டில் சிறுவர்களும் சிறுமியர்கள் போல் கவுன் போன்ற உடையினை அணிந்திருந்தார்கள். மேலும் அந்த காலத்தில் சிறுமியர்கள் ஆண் குழந்தைகள் போல் பேன்ட் அணிய மாட்டார்கள். இல்லை என்றால் இருவருக்கும் வித்தியாசம் கண்டிருக்க முடியாது. இரண்டாம் உலகப்போர் காலம் வரை பெண் குழந்தைகளின் உடைகள் கவுன், பான்டலெட்ஸ், ஸ்மாக்ஸ் மற்றும் பின்னஃபோர் போன்ற உடைகளின் தொடர்புடையதாகத்தான் இருந்து வந்தது.

கவுன் போன்ற உடைகள் : கவுன் மற்றும் ஃபிராக் அமைப்பு கொண்ட உடைகளை டிரசெஸ் என்று பொது அடைப்பில் குறிப்பிடுவது வழக்கம். அழகான ஸ்கர்ட் வடிவத்தில் அதற்கு மேட்சிங்கான மேலாடைகள் கொண்டு வடிவமைக்கப்படுவது தான் கவுன் உடைகள். இவை பெரும்பாலும் ஒரே செட் உடையாகத்தான் இருக்கும். இவை பல வடிவங்கள் கொண்டு வரும். சில உடைகள் முட்டிக்கால் வரை நீளமாக இருக்கும்.

சிலது கால் வரை நீண்டு இருக்கும். அதேப்போல் முழுக்கை, ஸ்லீவ்லெஸ், மெல்லிய ஸ்டார்ப் அல்லது ஷார்ட் ஸ்லீவ் கொண்டு இருக்கும். இந்த உடையின் அமைப்பு ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனை, விருப்பம் மற்றும் அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப மாறுபடும். இந்த உடை தான்  இரண்டாம் உலகப் போர் வரையிலான பெண்களின் அடிப்படை ஆடையாக இருந்து வந்தது. காரணம் உலகப்போர் துவங்கும் காலம் வரை பெண்கள், பேன்ட் அல்லது ஷார்ட்ஸ் அணிவது அன்றாட நிகழ்வு அல்ல.

ப்ளூமர்ஸ் : 19ம் நூற்றாண்டின் போது பெண்களுக்கு  மிகவும் கட்டுப்பாடாக இருந்த ஃபேஷன் உணர்வு மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்ட உடைகள் தான் ப்ளூமர்ஸ். 1818 - 1894ல் பிறந்த அமெரிக்க சீர்திருத்தவாதியான அமெலியா ப்ளூமர் என்பவர் தான் இந்த உடைகள் பெண்களுக்காக அமைக்கப்பட முக்கிய காரணம் என்று கூறலாம். ஆனால் ப்ளூமரின் கருத்தினை கவனத்தில் கொண்டு அதை அழகான உடையாக பெண்களுக்கு வடிவமைத்த சிறப்பு எலிசபெத் ஸ்மித் மில்லர் என்பவருக்கே சாரும். இவர் தான் ப்ளூமர் என்ற உடையினை அழகாக வடிவமைத்தார். இந்த வகை ஆடைகள் அந்த சமயத்தில் பெரியளவு பெண்கள் மத்தியில் வரவேற்கப்படவில்லை.

ரோம்பர்ஸ் : ஷார்ட் மற்றும் ஷர்ட் வடிவத்தில் ஒரோ உடையாகவோ அல்லது இரண்டு உடையாக வடிவமைக்கப்பட்டது தான் ரோம்பர்ஸ் உடை. இதை ப்ளேசூட் என்றும் அழைக்கலாம். குட்டை கை மற்றும் பேன்ட் அமைப்பில் கான்ட்ராஸ்ட் நிறங்கள் கொண்ட ஜம்ப்சூட் உடை. 1900ம் ஆண்டு அமெரிக்காவில் தான் ரோம்பர்ஸ் அறிமுகமானது. ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு ஏற்றது போல் இது வடிவமைக்கப்பட்டு இருப்பதால் சிறுவர் முதல் சிறுமியர் வரை அனைவரும் இந்த உடையினை விரும்பி அணிந்தனர். 19ம் நூற்றாண்டு விக்டோரியா காலத்தில் உடலை இருக்கி பிடித்து அணிந்த உடைக்கு மாறாக லேசாகவும், உடலை இருக்கி பிடிக்காத வண்ணம் இந்த உடை சிறார்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

இந்த உடைகளின் டிசைன்கள் ஒவ்வொரு நாட்டின் மரபு மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடும். பிரான்சில் இந்த உடை பல ஆண்டு காலம் ஆடவர்கள் மட்டுமே அணிந்து வந்தனர். அதற்கு பின்னர் பெண்களும் இதனை அணிய ஆரம்பித்தனர், குறிப்பாக விளையாடும் தருணங்களில். இரண்டாம் உலகப்போரின் முடிவில் ரோம்பர்ஸ் உடைகள் பெண்களின் கப்போர்ட்களின் முக்கிய உடையாக இடம் பெற்றது. மேலும் ஜிம் செல்லும் பெண்களுக்கு ரோம்பர்ஸ் யுனிஃபார்ம் உடையாகவே மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மாக்ர்ஸ் : பல ஆண்டுகளாக ஸ்மாக்ர்ஸ் என்பது குழந்தைகளின் ஆடைகளாக மட்டுமே இருந்து வந்தது. இந்த உடை பொதுவாக பலரால் அணியப்பட்டு வந்ததால் இது பல வித ஸ்டைல் மற்றும் டிசைன்களில் வடிவமைக்கப்பட்டது. பல வண்ண நிறங்களில் உள்ள இந்த ஸ்மாக் உடைகளில் முக்கிய வேறுபாடே அதில் உள்ள பட்டன் அமைப்புகள் தான். சில உடைகளில் முன் பக்கம் பட்டன்கள் அமைந்திருக்கும்.

சிலவற்றில் பின்புறம். ஒரு சில உடைகளில் பக்கவாட்டில் இருக்கும். 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சில பகுதிகளில் ஆடு மாடு மேய்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற வேலையாட்கள் அனைவரும் வெளிப்புறமாக அணியும் பாரம்பரிய உடையாகத்தான் இருந்து வந்தது. இன்று இந்த உடையினை பெரும்பாலான பெயின்டிங் வேலையில் ஈடுபடுபவர்கள் தங்களின் உடைக்கு மேல் அணியும் வெளிப்புற உடையாக பயன்படுத்தி வருகிறார்கள்.

பாரம்பரிய முறையில் இந்த உடைகள் லெனின் அல்லது கம்பளியால் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த உடையின் உயரம் தொடை அல்லது முட்டிக்கு கீழ் நீளம் கொண்டு வடிவமைக்கப்பட்டு வந்தது. இந்த உடை கழுத்து வரை முழுமையாக மறைக்கப்பட்டு கைப்பகுதியில் சுறுக்கமாகவும், தேனடை வடிவத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்டு, எம்பிராய்டரி மற்றும் பிரில் கொண்டு டிசைன் செய்யப்பட்டு இருக்கும். சில ஸ்மாக்ஸ் உடைகள் காலர் டிசைன்கள், டை, பாக்கெட் வசதி மற்றும் பெல்ட் கொண்டும் வடிவமைக்கப்படுகிறது. 1950களில் அம்மாக்கள் தங்களின் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக இந்த உடையினை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

பின்னஃபோர்ஸ் : யுரோப் மற்றும் அமெரிக்காவில் பெண்கள் விரும்பிஅணியும் உடைதான் பின்னஃபோர்ஸ். இந்த உடை கண்டிப்பாக இவர்களின் அலமாரியில் இடம் பெற்று இருக்கும். பின்னஃபோர்ஸ் ஸ்மாக் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், பின்னஃபோர்ஸ் உடைகளில் ஸ்லீவ் மற்றும் கழுத்து வரை மறைக்கப்பட்டு இருக்காது. பின்னஃபோர்ஸ் ஏப்ரான் உடைகளின் மறுபிரதி என்று குறிப்பிடலாம். பின்னஃபோர்ஸ் என்பது சட்டை அல்லது பிளவுஸ்களில் மேல் அணியப்படும் ஸ்லீவ் இல்லாத உடை. பின்னஃபோர்ஸ் மற்றும் ஜம்பர் இரண்டுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் இதில் முதுகு பக்கம் பெரிய அளவு மறைக்கப்பட்டு இருக்காது.

பான்டாலெட்ஸ் : சிறுவர், சிறுமியர் இருவரும் விரும்பு அணியும் உடை. சிறுவர்கள் எந்த ஒரு டிசைன் இல்லாத பிளைன் பான்டாலெட்சை அணிவார்கள். சிறுமிகள் அதையே வேலைப்பாடு செய்து ஃபேஷனாக அணிந்து வந்தார்கள். ஆனால் இதில் ஒரு சில சிறுவர்கள் ஃபேன்சி பான்டாலெட்ஸ் அணியவும் செய்தார்கள். 19ம் நூற்றாண்டு துவக்கத்தில் பிரான்சில் தான் முதல் முறையாக பான்டாலெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன் பிறகு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த உடை பிரபலமடைந்தது. இது லெக்கிங்ஸ் அல்லது நீளமான குழாய் வடிவ உடை. இது ஒரே பேன்டாக இருக்கும். அல்லது ஒவ்வொரு காலுக்கும் தனித்தனி பேன்டாக இருக்கும். தனித்தனியாக ஒவ்வொரு கால்களிலும் அணிந்து இடுப்பு பகுதியில் நாடா அல்லது பட்டன் கொண்டு இதனை இணைக்க வேண்டும். பெரும்பாலும் லெனின்  உடைகளில் அணியப்படும் பான்டாலெட்சில் லேஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

பெண்கள் கணுக்கால் வரை நீளமான பான்டாலெட்சை அணிந்து வந்தார்கள். சிறுமியர்கள் முட்டிக்கு கீழ் முதல் கணுக்கால் வரை நீளம் கொண்ட பான்டாலெட்சை அணிந்தார்கள். 19ம் நூற்றாண்டு இடையே வரை இளம் வயது ஆடவர்கள் பெண்களின் உடைக்கு தொடர்பான கவுன் மற்றும் பான்டாலெட்ஸ் உடையினை தான் அணிந்திருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் இது பெண்களுக்கான உடை என்பதை புரிந்து கொண்டு அணிவதை தவிர்க்க ஆரம்பித்தனர்.

செய்லர் சூட்ஸ் : இது ஆண்களுக்கான உடையாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது, காலப்போக்கில் பெண்களும் இந்த உடையினை அணிய ஆரம்பித்தனர். 1870களில் சித்திரங்கள் மூலம் இந்த உடையின் அமைப்பைப் பற்றி தெரிந்து கொண்டு பல நாடுகளில் இருபாலினருக்குமான ஃபேஷன் உடையாக மாறியது.

சில மேற்கத்திய கார்ட்டூன் மற்றும் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் இந்த உடையினை தங்களின் டிரேட் மார்க் உடையாக பதிவு செய்தது. உதாரணத்திற்கு பாப்பாய், டொனால்டு டக் மற்றும் ஃபிட்லர் பிக். ஆஸ்ட்ரியா, வியன்னாவை சேர்ந்த பேண்ட் குழுவில் இந்த உடையினை அணிந்து தான் மாணவர்கள் பாடல் பாடுவதை வழக்கமாக ெகாண்டிருந்தனர். 20ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பெண்களுக்கான மாலுமி உடைகள் மிகவும் ஃபேமஸானது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியா