சட்டங்கள் அறிவாய் பெண்ணே ! வழக்கறிஞர் அதா



திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை நான் இங்கே கேலி செய்ய போவதில்லை. ஆனால், இரு மனங்கள் ஒன்று கூடுவது மட்டுமே இங்கே திருமணத்தை நிர்ணயிக்க போதுமானதாக இருப்பதில்லை. நமது கலாச்சாரமும் அதற்கு ஒத்துழைப்பதாக தெரியவில்லை.
சாதி, மதம், குலம், கோத்திரம், அந்தஸ்து, ஜாதகம்  என இரண்டு நபர்கள் சேர்ந்து வாழ எதுவெல்லாம் தேவையில்லையோ அதையெல்லாம் வைத்து, இணையப்போகும் அந்த இரு நபர்களையும் அதுதான் தேவை என்று நம்பவைத்து நடத்தப்படும் ஒரு அற்புத சம்பவம்தான் “திருமணம்.” அத்தகைய திருமணத்தை நிச்சயிக்கும் இன்னொரு காரணியாக இருப்பது இந்த “வரதட்சணை.’’

இந்தியாவில் வரதட்சணை பெறுவதும் தருவதும் 1961லிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை தடைச் சட்டம், 1961ன் படி  இது ஒரு தண்டனைக்குரிய  குற்றமாகும்.  இந்த சட்டத்தையே மணப்பெண்கள் தங்களுக்கு புகுந்த வீட்டில் ஏற்படும் கொடுமைகளுக்கான கேடயமாக பயன்படுத்தி வந்தனர். இருந்த போதிலும் வரதட்சணை சாவுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான வரதட்சணை சாவுகள் (கொலை, தற்கொலை) தொடர்ந்து இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து பெண்கள் இதைத் தவறுதலாக பயன்படுத்துவதாக ஆண்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆகையால், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திருத்தங்கள் ஆண்களைப் பாதுகாக்கும் விதத்திலும் இச்சட்டத்தை பெண்கள் தவறாக உபயோகிக்காமலும் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த சட்டத்தில் என்னென்ன திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன மற்றும் அதை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த சட்டத்தின் படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக மணப்பெண்ணுக்கு கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பாத்திர பண்டங்கள் போன்ற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும். வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும். குற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம்.

பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். பெண்ணால் வர இயலாத பட்சத்தில், அந்த பெண்ணுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும், அவரின் சார்பாக புகார் செய்யலாம். தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்ட திட்டங்கள் இயற்றி உள்ளது. வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு, ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும். வரதட்சணையை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்படும்.

வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும். ஒரு பெண்ணின் கணவனோ அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

1961ல் நிறுவப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் 1983 மற்றும் 1986ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப்படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது.

முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304 பி என்ற பிரிவு வரதட்சணை சாவு குறித்து கொண்டு வரப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சணை கொடுமைகள் நடந்திருந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் பதிவு செய்யப்படும்.

கொடுமை செய்த கணவனும், அவர் உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். அறிவியல் விரோதமாக ஸ்டவ் வெடித்து மருமகள் மட்டும் சாகிற பிரச்னைக்கு இவ்வாறாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

மரண வாக்கு மூலத்துக்கு மாஜிஸ்திரேட் வர வேண்டும் என்ற அவசியமில்லை. மருத்துவரே போதும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டது. 2005ல் வந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் வரதட்சணையைக் குற்றமாக்குகிறது. 1961ல் சட்டத்தில் திருமணத்துக்காக கொடுக்கப்படுவதே வரதட்சணை என்று இருந்தது, 1984ல் திருமணம் தொடர்பாக எது கொடுத்தாலும் அது வரதட்சணை என்று மாற்றப்பட்டது.

இந்தியப் பெண்களின் நிலை குறித்து விவாதிக்க ஏற்படுத்தப்பட்ட குழு, ‘படித்த இந்திய இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை ஒரு அவமானமாகக் கருதாமல், வெட்கமே இல்லாமல் அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது எந்தவிதத்திலும் நன்மை பயப்பதில்லை’ என்று தெரிவித்தது. இளைஞர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் அவர்களே இங்கு மாற வேண்டிய அல்லது மாற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

(தொடரும்!)