என்னைப்போல் ஒரு சிறிய வட்டத்துக்குள் அவள் அடைந்துவிடக்கூடாது!



ஸ்கேட்டிங் என்பது பொதுவாக அயல்நாடுகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு விளையாட்டு. வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஸ்கேட்டிங் விளையாடுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருக்கும்.
அதிலும் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு. இப்படி இருக்கையில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கமலி, வெறும் காலில் ஸ்கேட்டிங்கில் பயிற்சி பெற்று பல சாதனைகளை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மொஹாலியில் நடைபெற்ற 59வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றுள்ளார் கமலி.

“அம்மா மகாபலிபுரம் பீச்சில் ஒரு கடை வச்சிருக்காங்க. ஸ்கேட்டிங் பத்திலாம் பெருசா ஏதும் தெரியாது. மாமா கோவா போய் சர்ஃப்பிங் கத்துட்டு வந்தாங்க. ஆரம்பத்தில் அவர் சொல்லிக் கொடுத்த சர்ஃப்பிங் மட்டும் பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரத்துல அவருடைய ஃப்ரண்ட் வேலு மாமா, ரோட்டில் ஏதோ ஒன்னு வச்சு பண்ணிட்டு இருந்தாங்க.

அதை பார்த்து நானும் சும்மா ட்ரை பண்ணேன். ரொம்ப பிடிச்சு போச்சு. அதில் ஆர்வமும் அதிகமானது. ஸ்கேட்டிங் ஆரம்பிக்கும் போது எனக்கு ஐந்து வயசு இருக்கும். ஸ்கேட்டிங் ரோட்ல எல்லாம் பண்ணக் கூடாதுனு, என்னுடைய ஆர்வத்தை பார்த்து ஹோலி ஸ்டோக்னு ஒரு கம்பெனிக்காரங்க, சின்னதா ஒரு ரேம் கட்டி கொடுத்தாங்க. ஸ்கேட்டிங் தனியா யாரும் எனக்கு சொல்லிக் கொடுத்தது கிடையாது.

யூ டியூபில் வீடியோ எல்லாம் பார்த்து என்னென்ன பண்றாங்க, போட்டிகளுக்கு போற இடங்களில் வந்தவங்க எல்லாம் என்னென்ன பண்றாங்கனு எல்லாமே நுணுக்கமா பார்ப்பேன். அந்த ட்ரிக் வரவரைக்கும், அதையே திரும்ப திரும்ப செய்து பார்ப்பேன். அது நன்றாக பழகியதும், அதைக் கொண்டு எனக்கான ஒரு ட்ரிக்கினை தனியாக உருவாக்குவேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா நான் கற்றுக் கொண்டேன். இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் சிறுமி கமலி.

சில ஆண்டுகளுக்கு முன் கமலி வெறும் காலில் ஸ்கேட்டிங் செய்த புகைப்படத்தை சர்வதேச ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் (Tony Hawk) சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திருந்தார். அவ்வளவுதான் மகாபலிபுரத்தில் சாதாரண ஒரு இடத்தில் வசித்து வந்த அந்த ஒன்பது வயது சிறுமியான கமலி உலக ஃபேமஸ் ஆகிவிட்டார். இதனையடுத்து நியூசிலாந்தைச் சேர்ந்த ஷஷா ரெயின்போ என்ற இயக்குநர் முதல்முறையாக இந்தியாவுக்கு வரும்போது `வைல்ட் பீஸ்ட்ஸ் ஆல்பா ஃபீமேல்ஸ் (Wild Beasts Alpha Female) என்ற பாடலுக்காக கமலி மற்றும் சில ஸ்கேட்டிங் பெண்களை வைத்து ஒரு பாடலை உருவாக்கினார். கமலியின் தாய் சுகந்தியின் உறுதி மற்றும் அவரின் கருத்தியல், ரெயின்போவை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதனால் கமலியின் வாழ்க்கையை உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும் என நினைத்த அவர் `கமலி’ என்ற பெயரிலேயே சிறுமியின் வாழ்க்கையைக் குறும்படமாக எடுத்தார்.

கமலியின் தாய் சுகந்தி தன் 34-வது வயதில் திருமண வாழ்க்கையின் முடிவை எதிர்கொள்கிறார். அதன் பிறகு தன் வாழ்க்கையில் அவர் பல பிரச்னைகளை சந்திக்க நேர்கிறது. அதை எல்லாம் தனி ஆளாக நின்று எதிர்கொண்டு கமலியை வளர்த்து வருகிறார். சுகந்தி தன் மகளுக்குச் சிறந்த கல்வியை மட்டுமே கொடுக்க வேண்டும் என எண்ணியுள்ளார். அப்போது அவர்களின் வாழ்க்கையின் திருப்பமாக சுகந்தி தம்பியின் நண்பர் ஒருவர் கமலிக்கு ஸ்கேட்டிங் போட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

அதுவே தற்போது கமலியின் வாழ்க்கையாக மாறியுள்ளது. தன் மகளுக்கு உள்ள ஸ்கேட்டிங் ஆசையை இந்த சமூகம் ஒப்புக்கொள்ள மறுக்கவே அவை அனைத்தையும் மீறி அவளைச் சர்வதேச ஸ்கேட்டராக உருவாக்க வேண்டும் என உழைத்து வருகிறார் சுகந்தி. கமலி குறும்படத்தில் இதைப் பற்றித்தான் கூறியிருப்பார் ரெயின்போ. 24 நிமிடங்கள் ஓடும் இந்தக் கமலி குறும்படம் அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மும்பையில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குநராக `கமலி’ படத்தை இயக்கிய ரெயின்போ தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கும் இந்தப் படம் தகுதி பெற்று கலந்து கொண்டது.

இக்குறும்படம் மற்றும் தன் மகள் கமலியை பற்றி பெருமையோடு பகிரும் சுகந்தி, “நான் சிங்கிள் மதர். திருமண வாழ்வில் நிறைய கஷ்டப்பட்டேன். பெருசா படிப்பும் இல்லை. இது எல்லாம் இருந்தாலும் என் ஆசை, என் குழந்தைகளை நல்லா கொண்டு வரணும். கமலி போற பாதை நல்லதாக இருந்தது. விருப்பப்பட்டது செய்றது மாதிரி இருந்தது. அது அவளுக்கு கிடைக்கணும். அதற்காக தான் நான் மிகவும் போராடி அவளுக்காக உறுதுணையாக இருந்து அவளை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கேன்” என்கிறவர், தன் வாழ்
நிலையை பற்றி பகிர்ந்தார்.

“மகாபலிபுரம் பீச்ல ஒரு சோடா கடை வச்சிருக்கேன். வருஷத்தில் ஆறு மாசம் தான் இருக்கும். திடீர்னு தண்ணீர் வரும். இன்னிக்கு கடையில பொருள் கட்டி வச்சுட்டு வந்து அடுத்த நாள் போய் பார்த்தா இருக்குமானு கூட தெரியாது. அப்படி கடல் மாதிரி ஒரு நிலையற்ற வாழ்க்கை தான் எங்களுடையது.

இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் பசங்களோட ஆசை தான் தெரிந்ததே தவிர, மற்ற விஷயங்களில் ஏதும் கவனத்தை அதிகம் எடுத்துக்கல. ஸ்கேட்டிங்கில் கமலி முதல் முறையா பெங்களூர் போய் போட்டியில் கலந்து கொண்டாள். என் பொண்ணு மூலமாதான் நானே முதல் முறையா சென்னையை தாண்டி வேறு மாநிலத்துக்கு போனேன். அந்த நேரத்தில் தான் ஒரு சிங்கிள் மதரா இருந்துட்டு பொண்ண இந்த அளவு கொண்டு வந்திருக்காங்கணு ஒரு ஆவணப்படம் எடுத்தாங்க.

கமலியின் வாழ்க்கையைப் படமாக எடுக்கப் போறோம்னு அவங்க சொல்லும் போது என் பெற்றோர்களும், ஊர்க்காரங்களும் ஒத்துக்கல. கடுமையா விமர்சிச்சு பேசுனாங்க. கமலியோட கை, கால்களை நான் உடைக்க நினைக்கிறேனு சொன்னாங்க. அது எல்லாம் கொஞ்சம் கூட பொருட்டா நான் எடுத்துக்கல.

நான் தொடாத உயரத்தை என் மகள் தொட வேண்டும் என்பதுதான் என் கனவு. என்னைப்போல ஒரு சிறிய வட்டத்துக்குள் அவள் அடைந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பொதுவா எல்லோரும் பெற்றவங்க பின்னாடி குழந்தைகளை கூட்டிட்டு போவாங்க. நான் அப்படி இல்லை. என்னுடைய குழந்தைங்க முன்னாடி போறாங்க. அவங்க பின்னாடி இருந்து என்னோட சப்போர்ட் கொடுத்துட்டு போய் ஒவ்வொரு படிக்கட்டா ஏற வைக்கிறேன். அது தான் என்னுடைய முயற்சியே தவிர வேறு ஏதும் இல்லை” என்கிற சுகந்தி, தேசிய அளவில் கமலி கலந்து கொண்ட அனுபவம் பற்றி பேசினார்.

‘‘கடந்த மாதம் 17ம் தேதிதான் போட்டி. ஆனால் நாங்க 13ம் தேதியே போயிட்டோம். சரியான குளிர் வேற. ஏன் முன்கூட்டியே போனோம்னா இங்க ஸ்கேட்டிங் பண்றதுக்கான ரேம்ப் வசதி இல்லை. பெங்களூரில் தான் பெரிதாக இருக்கிறது. சென்னையில் கூட சின்னதாதான் இருக்கு. எங்க வீட்டு பக்கத்துல அவங்க கட்டி கொடுத்ததும் உடஞ்சு போச்சு. அதனால அங்க ரேம்ப் எப்படி இருக்கும்ன்னு தெரியாது.

அதனால் அங்கே பயிற்சி எடுக்கலாம்ன்னு தான் போனோம். மொஹாலி போய் நல்லா பிராக்டீஸ் செய்து தேசிய அளவில் இரண்டாம் இடம் வெற்றி பெற்றாள். சில்வர் பதக்கம் கிடைச்சிருக்கு அவளுக்கு. நல்ல ஒரு ஸ்பான்சர் கிடைச்சா உலக அளவில் ஒரு வெற்றியாளரா இருப்பாள். கமலியின் கனவே ஒலிம்பிக்கிற்கு போகணும். அதுக்காகத்தான் தீவிரமா இயங்கிட்டு இருக்கா. கமலிய பார்த்து நிறைய பெண் குழந்தைங்க வெளியே வராங்க. சொல்லிக் கொடுக்கவும் இங்கு ஆட்கள் தாராளமா இருக்கோம். ஆனால், எந்த இட வசதியும் இல்லை... என்ன செய்ய முடியும்?” என்கிற கேள்வியை முன் வைக்கிறார் கமலியின் தாய் சுகந்தி.

அன்னம் அரசு