கோச்சிங் செல்லாமலே முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ்.



வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை, குறிக்கோள், திட்டமிடல் என்ற ‘தகுதி’ அவசியம் என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் ஷானாஸ் இலியாஸ் அவர்கள் கைக்
குழந்தையுடன் எந்த கோச்சிங் சென்டருக்கும் போகாமல் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வாகி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெறுவதென்பது மிகவும் அரிதான விஷயம். இந்தப் பெருமையை அடைய அவர் எத்தனை முயற்சிகள் செய்திருக்க வேண்டும். இதைப்பற்றி அவரிடமே கேட்டு விட அவரைத் தொடர்பு கொண்டோம்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது சென்னை, வண்டலூரில்தான். படிப்பும் இங்குதான். அதன் பிறகு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் 2015ல் முடித்தேன். பிறகு ஐ.டியில் வேலை பார்த்தேன். இதற்கிடையில் வீட்டில் எனக்கு திருமணம் பேசி முடிச்சாங்க. குடும்பம், வேலைன்னு என் வாழ்க்கை நகர்ந்த சமயத்தில் தான் நான் கருவுற்றேன். அதனால் வேலையினை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வீட்டில் சும்மா இருக்க முடியாமல், அதை பயனுள்ள முறையில் உபயோகிப்பதற்காக டி.என்.பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்காக படிக்க திட்டமிட்டேன். ஆனால் என்னால் தேர்வு எழுத முடியவில்லை.

காரணம் அந்த நேரத்தில் தான் எனக்கு குழந்தை பிறந்தது. அதனால் முக்கிய தேர்வினை என்னால் எழுத முடியவில்லை. ஆனால் தேர்வுக்காக நான் நன்றாகவே தயார்படுத்தி இருந்தேன். அதைப் பார்த்த என் பெற்றோர் ஒரு மாதத்தில் உன்னால் குரூப் 2 தேர்வுக்கு படிக்க முடியுமென்றால் உன்னால் கண்டிப்பாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் படிக்க முடியும் என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

குழந்தைக்கு 4 மாதங்கள் ஆன போது வீட்டிலிருந்தே படிக்க ஆரம்பித்தேன். முந்தைய வருடங்களுக்கான டாப்பர்ஸோட அடிப்படை புத்தகங்களை மட்டும் படித்தேன். முன்னதாக தேர்வுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே எப்படி படிக்க வேண்டும் என்பதையும், நேரத்தை எப்படியெல்லாம் மிச்சப்படுத்தி படிக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டுக் கொண்டேன்.

அந்தத் திட்டமிடலை சரியாக செயல்படுத்தினேன். நான் எந்த இடத்திலாவது சோர்ந்து போவதாக உணர்ந்தால் அப்போது என்னுடைய முயற்சியையும் செயல்பாடு
களையும் அதிகப்படுத்தினேன். தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். குழந்தைகள் ஆறு மாதம் வரை தூங்கிக்கொண்டே இருக்கும். அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி குழந்தை தூங்கும் நேரத்தில் நான் படிக்க ஆரம்பிச்சேன். குழந்தைக்கு ஒரு வயதான பிறகு எப்போதும் அம்மாவுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பும். அந்த சமயங்களில் குழந்தையுடனே சேர்ந்து படிக்கப் பழகிக் கொண்டேன்.

அப்பாவும் அம்மாவும் எனக்கு உறுதுணையாக குழந்தையை பார்த்துக் கொண்டனர். என் பெற்றோர் என்னை இந்த அளவு ஆதரிப்பதற்கும் நான் சரியான திட்டமிடலுடன் என் இலக்கை அடைந்ததற்கும் நான் படித்த பள்ளியும், விஜயன் சார் அவர்களும்தான் முக்கிய காரணம்’’ என்ற ஷானாஸ் பெண்களுக்கு திருமணமானாலும் தங்களுக்கான பாதையை சரியாக திட்டமிட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.  

‘‘ஆண், பெண் யாராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கை அடைய வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். சிலர் சிறு வயதில் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள். ஆனால் முடியாமல் போயிருக்கும். திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என்று வாழ்க்கை முறையே மாறிவிடும். ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சிறிய வாய்ப்பு கிடைத்தால் கூட அதை பயன்படுத்தி அவர்களின் லட்சியங்களை அடைய வேண்டும்.

போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு போட்டித் தேர்வு எதுவாக இருந்தாலும் பாடப்புத்தகத்தை படித்தாலே போதும் எந்த கோச்சிங் சென்டரும் தேவையில்லை எனவும் பள்ளியில் ஆசிரியர் சொல்லித் தருவதை விட எந்த சென்டரும் சொல்லித் தரப் போவதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். நீங்கள் படிப்பது சரியா என்பதை அறிந்து கொள்ள மாதிரித் தேர்வுகள் எழுதுவதும், முழு நம்பிக்கையுடன் படிப்பதும் மிகவும் அவசியம்’’ என்று அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார்.

ஷானாஸ் கூறியது இவ்வாறு இருக்க அவர் படித்த பள்ளியின் தாளாளரும் முனைவருமான விஜயன் அவர்கள் தனது மாணவி ஷானாஸ் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற எந்த விதமான உத்திகளை வழங்கி உதவி செய்தார் என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு அவரை அணுகினோம்.

ஷானாசின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிற செய்திதான். எனது பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் உலகின் பல பெரிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அதிலும் இது போன்ற அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படக்கூடிய பொறுப்பு மிக்க பதவிகளில் எம்மாணவர்கள் வருவது மேலும் பல மடங்கு மகிழ்ச்சியை சேர்க்கின்றது.

எங்கள் குழுமப் பள்ளிகளில், தரமான கற்றல் கற்பித்தல் செயல்கள் நடைபெறுவது உண்மைதான். அவை ஒருபுறமிருக்க, குழந்தைகளின் எதிர்காலக் கனவைக் கண்டறிந்து அதற்கேற்ப அவர்கள் திறன்களை வளர்ப்போம். சில சவாலான போட்டிகள் நடத்தித் திறமைகளை வெளிக்கொணர உதவி செய்வோம்.

அவர்களின் குறிக்கோள்களைச் செம்மைப்படுத்தி அதில் அவர்கள் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளார்கள் என்பதையும் கண்காணித்து வருகிறோம். ஒன்பதாம் வகுப்பிற்குப் பின் அவர்களின் எதிர்காலக் குறிக்கோள் உறுதிபட்டப் பிறகு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குகிறோம். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை சிறு வகுப்பு முதலே தயார்படுத்துகிறோம்.

குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் குறிக்கோள்களுக்கும் கனவுகளுக்கும் ஏற்ற கல்லூரியையும் அதற்கேற்ற படிப்பையும் தேர்ந்தெடுக்க அறிவுரை கூறி வருகிறேன்.பள்ளிப்பாடங்களை தெளிவாக படித்தாலே இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஷானாஸ் போல பல மாணவ, மாணவியர் எந்த தனிப்பட்ட வெளி பயிற்சிகளும் இல்லாமல் தான் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவர் போல பல மாணவர்கள் சுடர்விட்டுப் பிரகாசிக்க தூண்டுகோல்களாக நாங்கள் எப்போதும் செயல்படுவோம்’’ என்றார் விஜயன்.

தி.ஜெனிஃபா