புதுச்சேரியில் பவனி வரும் ஹாட்பேக் கேட்டரிங்



வீட்டுமுறை உணவை வாடிக்கையாளர்களுடைய இடமான வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம்  என தெர்மகோல் ஹாட் பேக்கில் அடைத்து சுடச்சுட டெலிவரி செய்கின்றனர் புதுச்சேரியைச் சேர்ந்த ‘ஹாட் பேக் கேட்டரிங்’ நிறுவனத்தினர். அதன் உரிமையாளர் சிவகாமி தேவநாதனிடம் பேசியபோது...கணவன்-மனைவி என இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்கள், சமையல் செய்ய சிரமப்படுற வயதான தம்பதிகள், படிப்பு மற்றும் வேலைக்காக புதுச்சேரியில் தங்கியிருப்பவர்களே எங்களின் டார்கெட்.
தவிர, பிரான்ஸில் செட்டிலாகி புதுச்சேரியில் தனித்து வாழும் சீனியர் சிட்டிசன்கள் மற்றும்  மருத்துவ மாணவர்கள், அதன் ஊழியர்களும் எங்களின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர் என்றவரிடம், இப்பவெல்லாம் சொமோட்டோ, சுகில ஆர்டர் பண்ணுனாலே உணவு வீடு தேடி வருமே என்ற நம் கேள்விக்கு? அவர்கள் உணவை ஏதோ ஒரு உணவகத்தில் இருந்து பெற்றுக் கொண்டு வந்து நம் கரங்களில் சேர்ப்பவர்கள். எங்களோட ஹாட்பேக் கேட்டரிங் அப்படி அல்ல.

 வாடிக்கையாளர்களின் உடல்நலத்தை பாதிக்காத உணவைத் தர வேண்டும் என்கிற எண்ணத்தில், ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கி நாங்களே அதனை ருசிபட வீட்டுமுறைப்படி சமைத்து தருகிறோம் என்கிறார் இவர்.எங்களது ப்யூர் வெஜிடேரியன். ஒரு ஹாட்பேக் லன்ஞ் என்பது 650 கிராம். ஒரு ஹாட்பேக்  ஒரு நபருக்கு மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெனு இடம் பெறும்.
அத்துடன், ரெகுலர் மெனுவும்  உண்டு. கஸ்டமர் தேவைக்கு ஏற்பவும், அவர்கள் விருப்பம் அறிந்து மெனு ரெடி செய்கிறோம். சாப்பிட்டதையே நாங்கள் தினம் சாப்பிடுகிறோம், எங்களுக்கு போரடிக்கிது என்கிற ஃபீல் வாடிக்கையாளர்களுக்கு வராமலும் பார்த்துக்கொள்வோம். ஒரு நாள் வழங்கப்பட்ட உணவு மறுநாள் மெனுவில் கண்டிப்பாக இடம்பெறாது. ஒரே வறுவல், ஒரே பொரியல்னு பத்து நாளைக்குள் அதை திரும்பவும் இடம்பெறச் செய்வதில்லை.

எத்தனை நாள் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிட்ட உணர்வே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். சாம்பார், காரக்குழம்பு, கூட்டு, பொரியல், வறுவல், ரசம், மோர் குழம்பு, அப்பளம், ஊறுகாய்  என இடம்பெறும் மெனுவில், வாழைத் தண்டு, வாழைப் பூன்னு வீட்டு சமையலில் இடம்பெறும் உணவுப் பொருட்களையும் இணைப்போம். டிஃபனுக்கு ரெகுலரா இட்லி உண்டு. ஆல்டர்நேட்டிவாக சப்பாத்தி, பூரி, கிச்சடி, ஆப்பம், இடியாப்பம், கல்தோசை, செட்தோசை வடைகறி என மாற்றி மாற்றிக் கொடுப்போம். இரவில் இட்லி சப்பாத்தி ரெகுலராக இருக்கும். அத்துடன் பெரும்பாலும் சிறுதானியங்களான குதிரைவாலி, சாமை போன்ற உணவுகளையும் இரவு உணவில் இணைத்து விடுவோம்.

நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 நபர்கள் வரை ஃபுட் டெலிவரி செய்கிறோம். இதில் ரெகுலர் கஸ்டமர்கள் மட்டுமே எங்களிடம் 60 பேர் இருக்கிறார்கள். தவிர இதில் வீக்லி, மன்த்லி கஷ்டமர்களும் உண்டு. புதுச்சேரி முழுவதுமே கவர் செய்கிறோம். 10 கி.மீ. தாண்டி வாடிக்கையாளர் இருந்தாலும் சூடாக அவர்களுக்கு உணவு  வழங்கப்படும். காலை 8 மணிக்குள்ளும் மதியம் 1 மணிக்குள்ளும் இரவு டின்னர் 7 மணிக்குள்ளும் டெலிவரி கொடுக்கப்பட்டுவிடும்.

ஞாயிறு தவிர்த்து எல்லா நாட்களிலும் மூன்று வேளையும், முக்கிய பண்டிகை நாட்களிலும் எங்களிடத்தில் ஹோம் டெலிவரி உண்டு. டெலிவரிக்கு நாங்களே ஆள் வைத்திருப்பதால் சமைத்த உணவு நேரத்திற்கு கஸ்டமர்களை சென்றடைகிறது என்றவர், எந்த ஒரு சூழலிலும், இயற்கை பேரிடரிலும் வாடிக்கையாளர்களிடம் உணவை கொண்டு போய் சேர்க்கும், திறமைமிக்க டெலிவரி நபர்களோடு, எங்கள் கேட்டரிங் சர்வீஸில் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.எங்கள் தயாரிப்பு உணவை உண்பவர்களுக்கு எந்தவிதமான உடல் உபாதையும் வரக் கூடாது, அதே நேரம் டைமுக்கு சூடான உணவை சர்வீஸ் செய்வது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம்.

 குவாலிட்டியையும், ருசியையும் ஒரே மாதிரி மெயின்டெயின் செய்கிறோம். ஆயிலையும், காரத்தையும் உணவில் அதிகமாக சேர்ப்பதில்லை. எல்லாமே மிதமாக திட்டமாக இருக்கும். எங்கள் உணவை சுவைத்தவர்கள் கண்டிப்பாக எங்களை மிஸ் பண்ணவே மாட்டார்கள். இதுவே எங்கள் பிஸினஸ் தாரக மந்திரம் என்றவர், ப்ளாஸ்டிக் தவிர்த்து, உணவை தெர்மோ ஹாட் பேக்கில் பேக் செய்து டெலிவரி செய்தாலும், ஹாட் பேக்கிற்காக வாடிக்கையாளர்களிடம் முன்பணம் எதையும் நாங்கள் பெறுவதில்லை.

திரும்பவும் வாடிக்கையாளரிடத்தில் இருந்து பெறப்படும் ஹாட் பேக்குகளை ஹாட் வாட்டரில் சுத்தம் செய்து,  வெயிலில் நன்றாகக் காயவைத்த பிறகே அடுத்த பேக்கிங்கிற்கு தயாராகும்.

வாடிக்கையாளர்களிடம் வாரத்திற்கு எனில் மூன்று வேளைக்கு 1650ம், மாதம் எனில் 6000ம் பெறுகிறோம். தேவைப்படும் நாட்களில் மட்டும வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்களும் எங்களிடம் இருக்கிறார்கள். ரெகுலர் வாடிக்கையாளர்கள் இடையில் ஊருக்கு செல்ல நேர்ந்தால், அந்த நாட்களை குறித்து வைத்து, அடுத்த மாதத்தில் அட்ஜஸ்ட் செய்து கொடுத்து
விடுவோம்’’ என்றார் சிவகாமி தேவநாதன்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆர்.முபாரக்ஜான்