மக்கள் மனதில் நான் ‘ராணி’யாகவே இருக்க விரும்புகிறேன்! நடிகை சுபிக்‌ஷாஅன்னக்கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்துவைத்த சுபிக்‌ஷா, கடுகு படத்திற்குப் பின் தமிழில் தனக்கென ஓரிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இப்போது ‘வேட்டை நாய்’ படத்திலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார். “நான் அடிப்படையில் பரதநாட்டிய டான்சர். எங்கள் குடும்பத்தில் அனைவருமே பரதநாட்டிய கலைஞர்கள். மூன்று வயதில் நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதன் பிறகு நிறைய அரங்கேற்றங்கள் செய்துள்ளேன்.

அப்படி ஒரு நிகழ்வில் இயக்குநர் பாலசந்தர் சாரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர், “நீங்கள் சினிமாவில் நடிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் மறுத்தேன். அதற்கு அவர் “சினிமாவில் நடிகையாவதற்கான அத்தனை தகுதியும் உங்களுக்கு இருக்கிறது, முயற்சி செய்யுங்கள்” என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னாலும் அந்த சமயத்தில் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அப்போது எனக்கு ஏற்படவில்லை.

ஒருநாள் இயக்குநர் பாரதிராஜா சார் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. போனேன்…  இயல்பாக அவரிடம் பேசினேன். அந்த இயல்பு அவருக்குப் பிடித்துவிட்டது. “எனக்கு இந்த மாதிரி படபடன்னு பேசுற பொண்ணுதாம்மா வேணும், நீ என் படத்தில் நடிக்கணும்” என்றார். எனக்கு முதலில் ஒன்றுமே புரியல. பிறகு அவர், “நான் இயக்கும் அன்னக்கொடி படத்துல நீ நடிக்கறம்மா” என்று கட்டாயமாகச் சொல்லும்போது இவ்வளவு பெரிய இயக்குநர் சொல்கிறாரே என்று என் பெற்றோருக்கு சந்தோஷம். “சரி பாரதிராஜா சாரே சொல்றார்ல இந்த படத்துல மட்டும் நடிச்சுடு” என்று அவர்கள் சொன்னதும் நடிக்க ஆரம்பித்தேன்.

அன்னக்கொடி படம் நடித்த பிறகு என்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வந்தேன். அந்த நேரத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான  ‘ஒளிப்பொரு’ என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சரி, இந்த ஒரு படத்தில் நடித்த பிறகு நம் வேலையைப் பார்க்கலாம் என்றிருந்தேன். அப்படி இருக்கும்போது தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான ‘மனம் கொத்திப் பறவை’ படத்தைக் கன்னடத்தில் ரீமேக் செய்தார்கள். அதற்கு ஹோம்லியான முகம் கொண்ட பெண் வேண்டுமென்று என்னைத் தேர்வு செய்தார்கள்.

அதில் நடித்த பிறகு மூன்று மொழிகளிலும் ஓரளவுக்கு அறிமுகம் கிடைத்தது. பின் என்னுடைய வேலையோடு நடிப்பையும் தொடர ஆரம்பித்தேன். இதனையடுத்து பாலாஜி சக்திவேல் சார் இயக்கத்தில் ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் சில காட்சிகளை விஜய் மில்டன் சார் பார்த்தாங்க. அதைப் பார்த்து கடுகு படத்தில் நடிக்க வேண்டுமென்று கேட்டார்கள். கடுகு படத்தில் நடித்த பிறகு, கடுகு சுபிக்‌ஷாவாக திரையுலகில் எனக்கான ஓர் அறிமுகம் கிடைத்தது” என்று கூறும் சுபிக்‌ஷா, வேட்டை நாய் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“கணவன்-மனைவிக்கு இடையேயான உறவு பற்றிய கதை. ரொம்பவும் வித்தியாசமான கதைக் களம். இதுவரைக்கும் அது போன்று நான் நடித்ததில்லை. ரொம்ப சவாலான கதாபாத்திரமும்கூட. படம் வெளியானதும் நிறைய பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. எல்லோருக்கும் ராணியை ரொம்ப பிடிச்சிருக்கு. இயக்குநர் கதை சொல்லும் போது என்ன சொன்னாரோ, அந்த பாயிண்டை இப்ப எல்லோருமே சொல்லும் போது அந்த கதாபாத்திரத்திற்காக நான் எடுத்துக் கொண்ட உழைப்பின் பயன் தெரிகிறது. நான்கு ஆண்டுகளாக இந்த படத்துக்கு ஹார்டு ஒர்க் பண்ணினேன். ஸ்கூல் போஷன், கல்யாணத்துக்கு அப்புறம், கர்ப்பிணி என எடை கூட்டி, குறைத்து நிறைய வேரியேஷன் கதாபாத்திரத்திற்காக செய்து இருக்கேன்.

கோலி சோடா ரிலீஸ் ஆகும் போது இன்னெசண்ட் இன்பானு சொன்னாங்க. அதுக்கும் ராணிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ, அதுமாதிரி பாலாஜி சக்திவேல் சாரின் ‘யார் இவர்கள்’ வெளியாகும் போது அந்த ‘ஸ்ருதி’ வித்தியாசமா இருப்பா. பொதுவா நான் தேர்ந்தெடுத்துதான் திரைப்படங்கள் நடித்து வருகிறேன். நாலு பாட்டு, நாலு காட்சி என்றில்லாமல், என் நடிப்பில் ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசம் காட்டி நடிக்கலாம் என்று தேர்வு செய்து நடிக்கிறேன்” என்று கூறும் சுபிக்‌ஷா, அவர் ஏற்கும் கதாபாத்திரங்களோடு எப்படி பொருந்தி போகிறார் என்பது பற்றி கூறினார்.

‘‘திரையில் நான் ராணியாக தோன்றினால் அப்படித்தான் மக்களின் மனதில் நான் பதியவேண்டுமே தவிர, சுபிக்‌ஷாவாகத் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். வெங்கடேஷ் சார் இயக்கியுள்ள ‘நேத்ரா’ படம் பெண்களை மையப்படுத்தி இருந்ததால், சண்டைக் காட்சிகள், பர்ஃபார்மன்ஸ் போன்ற விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தினேன். நேத்ரா சேலஞ்சிங்கான கதாபாத்திரம்.

அதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்தேன். வேட்டை நாய் படத்தில்  வெகுளியான பொண்ணு. படப்பிடிப்பு நடக்கும் கிராமங்களில் உள்ள பெண்களைக் கவனித்து அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு வெளிப்படுத்தினேன். உடல் மொழியிலும் அதிக கவனம் செலுத்தினேன்.

ஒரு திரைப்படத்தில் நாம் நடிக்கிறோம் என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு முழுப் பொறுப்பும் இயக்குநரைத் தாண்டி நமக்கான ஒன்றாக அமைகிறது. அதற்காக நாம் அதிகம் உழைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்ற சுபிக்‌ஷா தான் வேலைப் பார்த்த அனுபவம் மிகுந்த இயக்குநர்களிடம் இருந்து  கற்றுக்கொண்ட விஷயங்களை பற்றி விவரித்தார்.

“ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மில்டன் சார்கூட வேலை பார்க்கும்போது ஒரு நடிகருக்குத் தேவையான கேமரா நுணுக்கங்கள் கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு இந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கும், இந்த காஸ்டியூம்ஸ் நல்லா இருக்கும் என்று நடிப்பையும் தாண்டிச் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

பாலாஜி சார், படத்துக்கான மொத்த ஒத்திகையும் பார்த்துட்டுதான் ஷூட்டிங் போவாங்க. படப்பிடிப்புத் தளத்திற்கு போய் நடிகர்களால் தாமதம் ஆகக் கூடாது என்று மெனக்கெடுவார். எல்லா நடிகர்களுக்குள்ளும் ஓர் இணக்கம் வர வேண்டும் என்பதற்காகவும் இப்படிச் செய்வார்.
இதனால் அவர் குறித்த தேதிக்குள் படப்பிடிப்பை முடிப்பார்.

வெங்கடேஷ் சார் அவர் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிப்பு, தயாரிப்பு என எல்லாத் துறையிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்புத் தளத்திற்கு முக்கியமான ஒரு நபர் வரவில்லை என்றாலும் அல்லது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்து திறம்பட செய்து முடிப்பார். அந்தக் குறைகள் நாம் திரையில் பார்க்கும்போது தெரியாது” என்றவர் நடிகைக்கு உள்ள பொறுப்புகள் பற்றி பேசினார்.

‘‘நடிகை ஆன பின் வித்தியாசம் என்று பார்த்தால் ரொம்ப பொறுப்பான ஆளாக நாம் இருக்கிறோம். ஒரு படம் நடித்திருக்கிறோம் என்றால் அதை எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள்… அதற்கு உண்மையாக நாம் இருக்க வேண்டும். நான் நடனக் கலைஞர் என்பதால் சந்திரமுகி என்னை மிகவும் பாதித்த திரைப்படம். அதில் ஜோதிகா மேம் நடிப்பு, நடனம் என்னை மிகவும் கவர்ந்தது. நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க நீண்ட நாட்களாக ஆசை இருக்கிறது.

அது அமையும்போது மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நடனம், நடிகைத் தாண்டி எனக்கு சில விஷயங்கள் செய்ய பிடிக்கும். நீண்ட தூரப் பயணம். அந்தப் பயணத்தின் சூழலுக்கு ஏற்றாற்போல் பாடல்கள் இசைக்க விடுவது. காரை நானே ஓட்டிச் செல்வது மிகவும் பிடிக்கும். அதோடு நீச்சல். எனக்கு மனதில் ஏதாவது குழப்பம் அல்லது எதிர்மறையான விஷயங்கள் ஏற்படும்போது நீச்சல் அடிப்பேன். அது எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்’’ என்றார் நடிகை சுபிக்‌ஷா.

அன்னம் அரசு