கோடைக்கு இதம் தரும் மோர்



வாசகர் பகுதி

கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர் தந்து உபசரிக்கிறோம்.

*கோடையில் தாகம் தணிப்பது மட்டுமின்றி, நாவறட்சிக்கும் இதமானது. புரோட்டீன் மற்றும் தாது உப்புகள் மோரில் ஏராளமாக இருப்பதால், வியர்வை மூலம் வெளியேறும் உப்பை மோர் மூலமாக சுலபமாகப் பெறலாம்.இதில் உள்ள லாக்டோ பாசிலஸ், உடலில் வியர்வையால் வரும் கெட்ட வாடையை தடுக்கும்.

*உடல் குளிர்ச்சியாகவும், வேர்க்குரு வராமல் பாதுகாக்கும்.

*ஒரு கப் பாலில் உள்ள கால்சியத்தைவிட ஒரு கப் மோரில் அதிக கால்சியம் உள்ளது.

*உடலுக்கு புது தெம்பையும், தாகத்தையும் தீர்க்கும் சக்தியையும் கொண்டது மோர்.

*மோரில் உள்ள லெசிதீன் சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவைகளை பலப்படுத்தும்.

*மூளைச்சூடு உள்ளவர்கள், ரத்தநாள துடிப்பு உள்ளவர்கள் மோரை அதிகமாக பருக வேண்டும்.

*வெயிலில் அலைபவர்கள் தினமும் மோர் குடித்தால் சிறுநீர் பிரச்னை ஏற்படாது.

*பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியை துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சம்பழச் சாறையும் சேர்த்து பருகினால்
உடலுக்கு நல்லது.

*மோரின் புளிப்புத்தன்மை ரத்தக் குழாய்களில் இருக்கும் அழுக்கை கரைக்கும் சக்தி உடையது. நரம்புத் தளர்ச்சியை போக்கும் வைட்டமின் ‘பி’ சத்து மோரில் உள்ளது.

*மோரில் உள்ள லாக்டிக் அமிலம் செரிமான சக்தியை அதிகரிக்கும். வயதானவர்கள் கோடையில் மோர் குடிப்பது நல்லது.

*தினமும் இரண்டு கப் மோர் சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

*குடலில் உருவாகும் நச்சு பாக்டீரியாக்களை அழித்து, வாய்ப்புண், தொண்டைப்புண் வருவதை தவிர்க்கிறது.

*மோரில் வெந்தயப்பொடி ஒரு டீஸ்பூன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

*கஞ்சி வைத்து அதில் மோரைக் கலந்து குடித்தால் வெயிலால் ஏற்படும் உடல் சூடு தணியும்.

*மோரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால் வாய்வு குறையும். வயிற்றுவலி நீங்கும். வயிற்று உப்புசம் நீங்கும்.

*மோரில் கொஞ்சம் கொத்தமல்லி பொடியாக நறுக்கி தூவி அதில் ஒரு தக்காளியை நசுக்கிப்போட்டு ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து குடித்தால் வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பு சரியாகும்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.