என்ன செய்வது தோழி?பேரப் பிள்ளைகளால் அம்மாவுக்கு கஷ்டம்!



அன்புடன் தோழிக்கு, நாம் இருவர். நமக்கு இருவர் என அளவான, கூடவே ஆச்சாரமான குடும்பம் எங்களுடையது. நாங்கள் 2 பேரும் பெண்கள். கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக அப்பா பணியாற்றினார். அப்பாவுக்கு கிடைத்த சம்பளத்தில் குடும்பத்தை கவனித்து, எங்களையும் கரையேற்றியது அம்மாவின் வேலை. டிகிரி படிக்க வசதியில்லாவிட்டாலும் டிப்ளமோ படிக்க வைத்தார்.

அதிலும் என் தங்கை படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகு எங்கள் குடும்பத்தின் நிலைமை மாறியது. வேலை செய்து கொண்டே அடுத்தடுத்து படித்தும், திறமையாலும் வெளிநாடு சென்று வேலை செய்யும் அளவுக்கு உயர்ந்தாள்.இடையில் நான் காதல் கல்யாணம் செய்து கொண்டேன். அது கலப்பு திருமணம் என்பதால் எங்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. எனக்கு மகள் பிறந்த பிறகு நிலைமை கொஞ்சம் மாறியது. எனது வீட்டுக்காரரை குறிப்பாக என் அம்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நானும், மகளும் மட்டும் வீட்டுக்கு போய் வருவோம். என் மகளை அம்மாதான் வளர்த்தார். முதல் பேத்தி என்பதால் என் மகள் மீது அம்மாவுக்கு மிகுந்த அன்பு. இருவரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். எங்காவது வெளியில் போனால் கூட பேத்தியை உடன் அழைத்துச் செல்வார். அவளும், பாட்டியை விட்டுவிட்டு இருக்க மாட்டாள்.

இந்நிலையில் என் தங்கையும் உடன் வேலை செய்பவரை காதலித்தாள். என் தங்கையை போல அவரும் மென் பொருள் துறையில் நன்றாக சம்பாதிப்பவர். ஆனாலும் அவரும் வேறு சாதி என்பதால் என் அம்மாவுக்கு வருத்தம் இருந்தது. என்றாலும், அவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவே பிரமாண்டமாக நடந்தது.இளைய மருமகனிடம் அம்மா நன்றாக பேசுவார். மரியாதையாக நடந்து கொள்வார். அவரும் என் அம்மாவை பாசமாக நடத்துவார். என் கணவரை போல் முன்கோபி அல்ல. என் கணவரிடம் பேச சில நேரங்களில் எனக்கு கூட எரிச்சலாக
இருக்கும்.

தங்கைக்கு ஒரு மகள், ஒரு மகன். அந்த குழந்தைகளிடமும் அம்மாவுக்கு பாசம் அதிகம். தங்கை வெளிநாட்டில் இருக்கும் போதுதான் குழந்தைகள் பிறந்தன. அதற்காக அம்மா வெளிநாட்டுக்கு சென்று மாதக் கணக்கில் தங்கி இருந்தார். அப்போது என் மகளுக்குதான் கஷ்டமாக இருந்தது. பாட்டி இல்லாமல் ஏங்கிப் போனாள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எனது அப்பா இறந்து விட்டார். அதன் பிறகு அம்மாவுடன் என் மகள்தான் இருந்தாள். நானும் அதே பகுதியில் வசிப்பதால், என கணவர் வேலைக்கு சென்றதும் அம்மா வீட்டுக்கு சென்று விடுவேன். குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் என் தங்கையும் இங்கு வந்து விட்டார். அம்மா தங்கை வீட்டில் தங்கிவிட்டு வருவார். என் வீட்டுக்கு வந்ததில்லை. நானும் கூப்பிட்டதில்லை. காரணம் சின்ன வாடகை வீடு என்பதால், இன்னொருவர் தங்குவதும் சிரமம்.

இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். எனது மகள் கல்லூரியில் படிக்கிறாள். தங்கையின் மகள் 8ம் வகுப்பும் மகன் 5ம் வகுப்பும் படிக்கின்றனர். மூவருக்கும் தங்கள் பாட்டியிடம் பாசம் அதிகம். அதுதான் என் மகளுக்கு பிரச்னையாகி விட்டது. கல்லூரிக்கு சென்ற பிறகு மகள் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் காட்டுகிறாள்.

கண்ணாடி முன் நீண்ட நேரம் நிற்கிறாள். அதெல்லாம் எங்கம்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ‘படிக்கத்தானே போற... எதுக்கு இப்படி அலங்காரம் பண்ணிட்டு போற’ என்று அவர் கிண்டலாக கேட்டாராம். என் மகளுக்கு எரிச்சலை தந்துள்ளது. அவளும் ‘இந்த வயசுல அலங்காரம் பண்ணாம... உன்ன மாதிரி கெழவி ஆனப்பிறகுதான் அலங்காரம் பண்ணணுமா... ’ என்று பதிலுக்கு கேட்கிறாள்.

மேலும் அவள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பது, காலையில் தாமதமாக எழுவது, எப்போதும் மொபைலும் கையுமாக இருப்பது என்று எனது மகளை குறை சொல்ல காரணங்கள் இருக்கின்றன. அதையும் ‘மொபைலுக்கு வலிக்கும்... கொஞ்சம் ரெஸ்ட் குடு’ என்று கிண்டலாக தான் சொல்வார். பதிலுக்கு மகளும் கோபமாக ஏதாவது சொல்வாள். இதுவே இருவருக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தியது. ஆனால், தங்கையின் பிள்ளைகள் இருவரும் அம்மாவிடம் வழக்கம் போல் பாசமாக இருந்தது அம்மாவுக்கு ஆறுதலாக இருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவலுக்கு பிறகு தங்கைக்கும், அவளது கணவருக்கும் வீட்டிலிருந்தபடியே வேலை. பள்ளி செல்லாமல் ஆன்லைனில் படிக்கும் குழந்தைகளை கவனிக்க வசதியாக அம்மா எனது தங்கை வீட்டுக்கு சென்றார். அங்கும் தங்கையின் மகளுக்கும் ‘அட்வைஸ்’ செய்ய அங்கும் பிரச்னையாகி விட்டது. எதையும் செய்யாமல் ‘இந்த பாட்டி ரொம்ப அட்வைஸ் பண்றா.... இவங்கள எனக்கு பிடிக்கல’ என்று நேரடியாக சொல்லிவிட்டாள் தங்கை மகள். அது என் அம்மாவுக்கு சங்கடத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தி விட்டது. என் தங்கை மகளை கண்டித்திருக்கிறாள். அவளும் ‘சாரி’ கேட்டிருக்கிறாள். ஆனாலும் பாட்டிக்கும் பேத்திக்கும் இடையில் இணக்கம் குறைந்து விட்டது.

கூடவே பேரனும், விளையாட்டு, ஜாலி என்ற பெயரில் பாட்டியை போட்டு அடிக்கிறான். வயதான அம்மாவால் தாங்க முடிவதில்லை. ஒருமுறை அவன் அடித்த அடி தாங்காமல் அம்மாவுக்கு கண் கலங்கி விட்டதாம். இதெல்லாம் நானும், என் தங்கையும் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டது. அம்மா கஷ்டப்பட்டுதான் எங்களை வளர்த்தார். ஆனால் பாசத்துக்கு பஞ்சமில்லை. தனக்கு இல்லாவிட்டாலும் எங்களுக்கு கொடுப்பார். கல்யாண வாழ்க்கையில் அவர் சந்தித்ததெல்லாம் கஷ்டங்கள்தான்.

தன் பாட்டியிடம் அத்தனை நெருக்கமாக இருந்த என் மகள், ஆரம்பத்தில் அவரின் கிண்டலையும், ஜாலியையும் கேட்டு சிரிப்பார். இப்போது அவர் சொல்வதை கேட்டு கோபப்படுகிறாள். அவளை வளர்த்தது எல்லாம் என் அம்மாதான். அந்த பாச உணர்ச்சி கூட அவளிடம் இல்லை. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், ‘பாட்டி மட்டும் அப்படி பேசலாமா’ என்று கேட்கிறாள். ‘ஒழுங்காக இரு, கட்டுப்பாடாக நட’ என்று சொல்வதெல்லாம் அவளுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.

எங்க அம்மாவின் நிலையை பார்த்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அதே நிலைமைதான் என் தங்கைக்கும். என்னதான் நாங்கள் அவரிடம் அன்பாக இருந்தாலும், அவருக்கு பேரப்பிள்ளைகளிடம்தான் ஈர்ப்பு இருக்கிறது. அவர்கள் தன்னிடம் பழையபடி அன்புடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதே நேரத்தில் அவர்கள் சரியாக வளர வேண்டும் என்றும் விரும்புகிறார்.

அவை எங்களுக்கு புரிகின்றன. ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு புரியவில்லை. எங்கள் அம்மாவை பிடிக்காத என் கணவர் கூட, ‘பாட்டியிடம் அன்பாக நடந்து கொள்’ என்று மகளிடம் அறிவுரை கூறுகிறார். அதற்கு அவளோ, ‘சின்ன மருமகனிடம் நன்றாக பேசும் பாட்டி, உங்களிடம்  மட்டும் பேசுவதில்லையே ஏன்’ என்று கேட்கிறாள். அதற்கு என் கணவர், ‘ அதெல்லாம் பெரியவங்க விவகாரம்.... உனக்கு தேவையில்லாதது’ என்று சொல்லிவிட்டார். ஆனால் என் மகள் மாறுவதாக இல்லை.

‘ஏன் இந்த பிள்ளைகள் தன் பாட்டியிடம் இப்படி நடந்து கொள்கின்றன’ என்று தெரியாமல் நானும் என் தங்கையும் வேதனைப்படாத நாளில்லை. தான் வளர்த்த பிள்ளைகளுக்கு நல்லது சொல்வது தவறா? எங்கள் அம்மாவுக்கு அந்த உரிமை இல்லையா?எங்கள் அம்மாவின் நல்ல மனதை, பாசத்தைப் பேரப் பிள்ளைகள் புரிந்து கொள்ள மாட்டார்களா? அவர்கள் புரிந்து கொண்டு, தங்கள் பாட்டியிடம் அன்பாக நடந்து கொள்ள என்ன செய்வது?

பணம், காசு இல்லாத காலத்தில் கூட எங்கள் அம்மா மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். ஆனால் இப்போது அந்த மகிழ்ச்சி இல்லை. அந்த மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க என்ன செய்வது தோழி? யார் மாற வேண்டும் எங்கள் அம்மாவா? பிள்ளைகளா? அதற்கு என்ன செய்ய வேண்டும் தோழி? எங்களுக்கு வழி காட்டுங்கள்.இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,
இன்றைய உலகம் நிறையவே மாறியிருக்கிறது. முன்பு போல் யாரும் ஒரு வட்டத்திற்குள் இல்லை. எல்லோருக்கும்  படிக்க, பார்க்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. விளம்பரம், திரைப்படம் ,நாடகங்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். அவை எல்லாம் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் பாதிக்கும் வகையில்  எதிர்மறையாக சித்தரிக்கப்படுகின்றன.முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் இப்போது தாத்தா, பாட்டிகளாக இருக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பாடான பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

இன்றைய குழந்தைகளுக்கு அதிக கல்வியும் அதிக சுதந்திரமும், அவற்றை அதிகமாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றன. நாம் மேற்கத்திய பழக்க வழக்கங்களை ஆதரிக்கிறோம். அவர்களைப் போல உடை அணிவது மட்டுமின்றி, அவர்களைப் போல வாழ விரும்புகிறோம். கூடவே அவர்களைப் போலவே சிந்திக்கவும் செய்கிறோம். கூட்டு குடும்ப வாழ்க்கை அங்கு அரிது.

பல குடும்பங்களில் பெரியவர்களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. மதிப்பு இருப்பதில்லை. பெரியவர்களான நாம் வீட்டில் இருக்கும் பெரியவர்களை எப்படி நடத்துகிறோமோ அப்படித்தான் குழந்தைகளும் அவர்களை நடத்தும். எனவே குழந்தைகள் எல்லாவற்றையும் பெரியவர்களை பார்த்துதான் தெரிந்து கொள்கின்றனர். தாத்தா, பாட்டியை அவமதிக்கும் பெற்றோரை பார்த்துத்தான் பிள்ளைகளும் கற்றுக்கொள்கின்றனர். குழந்தைகள் களிமண் ேபான்றவர்கள் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

இளம் வயதிலேயே நாம் விரும்பும் வழியில் அவர்களை வடிவமைக்க முடியும்.உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் தாய்க்கும் இடையில் நீங்களும், உங்கள் தங்கையும் சிக்கியுள்ள வருத்தமான சூழலை என்னால் தெளிவாக காண முடிகிறது. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் யாரையும் எளிதில் மாற்றிவிட முடியாது. முயற்சி செய்தால் நிச்சயம் பலன் உண்டு. பொதுவாக பெரியவர்களை மாற்றுவது கடினம். அவர்கள் நீண்ட காலமாக ‘நியாயம்’ என்று உணர்ந்திருக்கும் மனநிலையை, ‘தவறு’ என்று சொல்லி எளிதில் மாற்றி விட முடியாது.

ஆனால் குழந்தைகளிடம் பேசலாம். உங்கள் அம்மாவின் அன்பு, அவர்கள் உழைப்பால் நீங்கள் இந்த நிலைமைக்கு உயர்ந்து இருப்பது போன்றவற்றை எடுத்துச் சொல்லலாம். பாட்டியின் அருமையை அவர்களை உணரச் செய்யுங்கள். கூடவே அவர்களின் வயதான, உடல் வலு குன்றிய நிலையில் அவரை எப்படி அன்பாக நடத்த வேண்டியதின் அவசியத்தை சொல்லலாம். குறிப்பாக உங்கள் தங்கை மகன் நடத்தும் உடல்ரீதியான தாக்குதல்களால் உங்கள் தாய் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். அதை தடுக்க வேண்டியது மிக அவசியம். உங்கள்  மகளிடமும், தங்கையின் பிள்ளைகளிடமும்  தொடர்ந்து பேசுவதின் மூலம் அது சாத்தியமாகும்.

உங்கள் தாயின் அனுபவத்துக்கும், வயதுக்கும் அவர் அறிவுரை சொல்ல தகுதியானவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் அதை அக்கறையுடனும் அன்புடனும்  தனது பேரன், பேத்திகளுக்கு சொல்லக்கூடும். ஆனால் அறிவுரை சொல்லும் விதம் ரொம்ப முக்கியம். நாசுக்காக சொல்ல வேண்டும். இன்றைய குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும், அறிவுரைகளை சொல்ல வேண்டும் என்பது குறித்து உங்கள் தாயிடம் பேச வேண்டும்.

‘படிக்கத் தானே போற எதுக்கு இப்படி அலங்கரித்துக் கொண்டு போற’ என்ற வார்த்தை கேட்பவரை கட்டாயம் காயப்படுத்தும். அவர்களுக்கு இடையிலான இடைவெளியை ஏற்படுத்தும். தேவையில்லாமல் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் உடை அணிவதால் ஏற்படும் சங்கடம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் எடுத்துச் சொல்லலாம். அதையும் கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சொல்ல வேண்டாம். ஓய்வில் இருக்கும் போது பேசலாம்.

அப்படி ஓய்வில் இருக்கும் நேரங்களில் உங்கள் அம்மா குறித்து உங்கள் பிள்ளைகளிடம் பேச வேண்டும். குழந்தையாக இருக்கும் போது அவளை, உங்கள் தாய் கவனித்துக் கொண்ட விதம், அப்போது நடந்த ஜாலியான தருணங்களை எடுத்துச் சொல்லலாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணைபிரியாமல், பாசமாக இருந்ததையும் சொல்லலாம். வயதான காலத்தில் அவரிடம் அன்பாக, ஆதரவாக இருக்கவேண்டிய அவசியத்தை சொல்லுங்கள். உங்கள் மகள் புரிந்து கொள்வாள். கட்டாயம் மாறுவாள். உங்கள் அம்மாவிடம் பழையபடி பழகுவாள்.

அப்படியே வாய்ப்பு கிடைக்கும் போது உங்கள் அம்மாவிடம் பேசுங்கள். காலம் மாறியிருக்கிறது. எல்லோரது பழக்க, வழக்கங்கள் மாறியிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்ப குழந்தைகளிடம் எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள். முக்கியமாக அவர்கள் மனம் வருந்தாத வகையில் பேசச் சொல்லுங்கள். எல்லாம் சரியாகும். உங்க அம்மாவின் தியாகமும், பேரப்பிள்ளைகள் மீது அவர் கொண்டிருக்கும் அன்பும் அதற்கு உதவும்.

கடைசியாக ஒன்று. உங்கள் குடும்பம் பல்வேறு சமூகங்களின் சங்கமம் என்று புரிகிறது. அந்த சங்கமம் நிலைப்பது பணத்தால், உயர்வு தாழ்வுகளால் அல்ல.... அன்பால் மட்டுமே என்பதை உங்க அம்மா மட்டுமல்ல, நீங்களும் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...