ஆட்சி மாற்றம் தேவையா?அலசுகிறார்கள் பெண்கள்



தமிழ்நாட்டின் 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 ல் முடிவடைகிறது. தமிழக சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கும் சேர்த்து பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல் 6ல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெற இருக்கிறது. தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதில் பிரதான திராவிட கட்சிகளான திமுக 12 பெண்களுக்கும், அதிமுக 14 பெண்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு கிடைத்த ஆறு தொகுதிகளில் ஒன்றில் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி 117 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் முகங்கள் அதிகம் தென்படுகிறது.

சட்டப்பேரவையில் பெண்களின் பங்கேற்பு 50 சதவீதத்தைக் கூட எட்டவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தங்களது வாக்குரிமை குறித்து இங்கே அலசுகின்றனர் பெண்கள் சிலர்.

கிருஷ்ணவேணி, தலைமையாசிரியர்

‘‘என்னுடைய 33 ஆண்டுகால அனுபவத்தில், ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராக இதைச் சொல்கிறேன். கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது குழந்தைகள் மனங்களிலும் ரொம்பவே ஊடுருவியுள்ளது. நான் உனக்கு பென்சில் தருகிறேன், பேனா தருகிறேன் எனக்கு ஓட்டு போடு எனும் அளவுக்கு குழந்தைகள் பார்லிமென்டிலும் இது எதுரொலிக்கத் தொடங்கியுள்ளது. இங்கே கல்வியும், மருத்துவமும் மட்டுமே மக்களுக்கு இலவசமாகத் தேவை. அதைப் பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஆட்சிக்கு வர நினைப்பவர்கள், வேலை வாய்ப்புகளை அதிகரித்து மக்கள் உழைத்து சம்பாதிக்கும் வழிகள் குறித்துச் சொல்லலாம்.

மதுக்கடை ஒழிப்பு குறித்தும் தேர்தல் அறிக்கையில் இல்லை. ஆண்களின் வருமானம் முழுமையாக மதுக்கடைகளுக்கே செல்கிறது. பெண்களும், குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஒட்டுமொத்த குடும்பமே சீரழிகிறது. பல குடும்பங்களில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு தவறான வழியில் செல்வதை எங்களைப் போன்ற ஆசிரியர்களால் நேரடியாகவே காண முடிகிறது. நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயிகள் நலன் குறித்து யோசிப்பவர்களின் ஆட்சி அமைந்தால் மிகவும் நல்லது.’’

ஜெயந்தி, வழக்கறிஞர்

‘‘ஆட்சி மாற்றத்திற்கும் அரசியல் மாற்றத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. என்னைக் கேட்டால் இப்போதைய தேவை அரசியல் மாற்றம். ராமன் ஆண்டால் என்ன... ராவணன் ஆண்டால் என்ன? மக்கள் நிம்மதியா இருக்காங்களா? அவர்கள் அத்தியாவசியத் தேவை பூர்த்தியாகுதா? இதுதான் மேட்டர். மக்கள் அமைதியான வாழ்வை வாழ வேண்டும். சுரண்டல் இல்லாமல் மக்களுக்கான திட்டங்கள் மக்களைச் சென்றடைந்தாலே கடைக்கோடியில் இருப்பவர்களும் பலன் அடைவார்கள். அதேபோல் ஊழல் இல்லாத ஆட்சியாகவும், சாதி மத சாயங்களைப் பூசிக்கொள்ளாத ஆட்சியாகவும் அமைந்தாலே போதும்.

இங்கே தேர்தலில் ஒருவர் வேட்பாளராக நிற்க அவர் ஐம்பது அல்லது அறுபது கோடி செலவு செய்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகி இருப்பது மிகவும் வேதனையான விஷயம். வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 50 கோடி செலவு செய்து வரும் ஒருவர் அதை திரும்ப எடுக்கத்தானே நினைப்பார். இது ஒரு சிம்பிள் சைக்காலஜி. ஊழலின் தொடக்கப் புள்ளியே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. மக்களும் ஓட்டுக்காக பணத்தையும், இலவசங்களையும் பெறுவதை தவறென உணர்தல் வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அமையும். நாங்கள் இதையெல்லாம் செய்தோம் இன்னும் இதைவிட நல்லது செய்ய மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் என கேட்கும் ஆட்சியாக அமைந்தால் மிகமிக நல்லது.’’

யுவ, கல்லூரி மாணவி

‘‘நான் முதுகலை கல்வி பயிலும் மாணவி. மாணவர்களாகிய நாங்கள் விரும்புகிற படிப்பை படிப்பதற்கான சூழல் இப்போது சுத்தமாக இல்லை. மதிப்பெண்களுக்கு மட்டுமே கல்வி என்கிற நிலை கல்வியை வேறு திசை நோக்கி நகர்த்துகிறது. ஆளும் அரசு மாணவர்களின் கல்வியை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. நான் பள்ளியில் படிக்கும்போது கல்வி உதவித் தொகை பெற்ற நினைவுகள் மட்டுமே என்னிடம் உள்ளது. என்னைப்போல் முதுகலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு
ஜே ஆர் எஃப்(JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் இரண்டுக்கும் சேர்த்து நெட் தேர்வு(NET exam) உண்டு.

அவற்றுக்கான உதவித் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையினை ஒன்று நிறுத்திவிடுகிறார்கள் அல்லது குறைத்துவிடுகிறார்கள்.
பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிட்டது. கல்வி வளாகத்திற்குள்ளே மாணவிகள் பாலியல் ரீதியான பிரச்சனைகளை தினம் தினம் சந்திக்கிறோம். பாலியல் தாக்குதல்கள் நமக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அடுத்த கட்டத்திற்கு எங்களை நகர்த்த முடியாத நிலையும் பெண்கள் மத்தியில் நிலவுகிறது. ஒரு மாணவியாக என் கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், பெண்கள் பாதுகாப்பாய் வாழவும் ஆட்சி மாற்றத்தை மாணவர்களாகி நாங்கள்  எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளோம்.’’

கலைச்செல்வி, குடும்பத் தலைவி

‘‘ஆரோக்கியமான உணவைக் கொடுக்காமல் ஆட்சியாளர்கள் எங்களுக்கு வெறும் ஊறுகாயை கொடுக்கிறார்கள். மக்களின் நிலை மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஆட்சியாளர்களின் சொத்து மதிப்புதான் இங்கே ஏறுகிறது. எளிய மக்கள் மேலே ஏறி வர முடியவில்லை.
தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளுமே சில விசயங்களில் முரண்படுகிறார்கள். கிராமப் பஞ்சாயத்து உள்ளாட்சித்துறை, மாற்றுத் திறனாளர் நலன் இவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை. உள்ளாட்சி என்ற ஒன்று இருந்தால்தானே கிராமப்புற மேம்பாடு இருக்கும். பெரும்பாலான மக்கள் கிராமத்தில்தானே வசிக்கிறார்கள். எல்லோராலும் நகர வாழ்க்கைக்குள் வந்துவிட முடியுமா?

‘சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னு போகும்’ என்பது மாதிரி, சில இளம் தலைமுறை வேட்பாளர்கள் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் சாதி ஒழிஞ்சிடும் என புரிதல் இல்லாமலே இங்கு பேசி வருகிறார்கள். வசதியானவர்களைத் தவிர யாரும் இனி படிக்க முடியாது. கலை அறிவியல் பயிலவும் நுழைவுத் தேர்வு வேண்டுமென்றால், எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் என்ன செய்ய முடியும்? ஒரு வேளை உணவாவது கிடைத்து படித்த குழந்தைகளை இனி கல்வியும் கிடையாது என்றால் இனி அவர்கள் என்ன செய்வார்கள்? அனைவரும் இந்த விஷயத்தை மௌனமாகவே கடக்கிறார்கள். வரப்போகிற ஆட்சியாளர்கள் எளிய மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும்.’’

நித்யா, கல்லூரி விரிவுரையாளர்

‘‘மிக நீண்ட காலமாகவே ஒரே அரசு நம்மை ஆள்கிறது. இதே சூழ்நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக ஒரே மாதிரியான திட்டங்கள் ஒரே மாதிரியான பலன்கள்தான் நமக்கு கிடைக்கும். மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் மாற்றம் தேவை. இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மன அழுத்தத்தில் தவிக்கின்றனர். புது திட்டங்கள், புதுவகை யோசனைகள், புது வகை குழுமங்களின் ஆட்சி மாற்றம்
வந்தால் மட்டுமே சாத்தியம். மாற்றங்கள் மட்டுமே புத்துணர்ச்சியைத் தரும்.’’

ராகவி, சமூக செயற்பாட்டாளர்

‘‘கட்சிகளுக்கு நடுவில் இங்கே போட்டிதான் நிலவுகிறது. தொய்வான மனநிலைதான் அனைவரிடத்திலும் நிலவுகிறது. தேர்தலில் ஓட்டுப் போடும் மன நிலையே எங்களுக்கு வரவில்லை. ஆட்சியாளர்கள்தானே அத்தனை மக்களுக்கும் இங்கு பொறுப்பு. எந்தக் கட்சிக்குமே எங்களின் மாற்றுத் திறனாளர் சமூகம் குறித்த சரியான பார்வையோ, புரிதலோ இல்லை. ஆயிரம் அல்லது இரண்டாயிரம் எங்களுக்கு கொடுத்துவிட்டால் குடும்பத்தை நடத்திவிட முடியுமா?

பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு கண்ணாடி கொடுப்பது, அவர்களுக்கு ஸ்டிக் கொடுப்பது, நடக்க இயலாதவர்களுக்கு வீல்சேர் கொடுப்பது மட்டுமே மாற்றமில்லை. அதையும் தாண்டி அவர்களுக்கான வாழ்க்கை இருக்கு என்கிற புரிதல் இல்லாத ஆட்சியாளர்கள்தான் நம்மை ஆள்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் வேலை வாய்ப்பு குறித்து யாருமே பேசவில்லை. வாழ்க்கையின் ஓரத்தில், விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் எங்கள் மாற்றுத்திறனாளி சமூக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நினைக்கும், அவர்களின் திறன்களை வளர்க்க நினைக்கும், அவர்களது வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யும் நல்லாச்சியாக அமைந்தால் மிக நல்லது.’’

ஜெயா. சகோதரன் அமைப்பு

‘‘அரசு சக்கரம் தொடர்ந்து நல்லவிதமாக இயங்க வேண்டும். ஆட்சியாளர்கள் தவறு செய்திருந்தால் ஆட்சி மாற்றம் தேவை என்பதற்காகவே ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை தேர்தல் வருகிறது. திட்டங்களை செயல்படுத்துவதில் தவறுபவர்களை, ஆட்சியில் இருந்து தூக்குவதற்காகவே ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கட்சிக்குள் குறுகிய வட்டத்துக்குள் இருப்பதில் எங்கள் மாற்றுப் பாலினத்தவர் சமூகம் சார்பாக எனக்கு விருப்பம் இல்லை. இங்கே ஒரே அரசு நீண்ட காலம் ஆட்சி செய்துவிட்டார்கள் என்கிற மனோ நிலை இப்போதைக்கு எல்லோர் மனதிலும் நிலவுகிறது. மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கிற ஆட்சியாளர்களாக வந்தால் மிகவும் நல்லது.’’

மகேஸ்வரி நாகராஜன்