எடை சொல்லும் கணக்கு...விடை தரும் இயன்முறை மருத்துவம்!“வெய்ட் ரொம்ப போட்டுடிச்சு, அதான் வெய்ட்ட குறைக்க டயட்ல இருக்கேன், ஜிம்முக்கு போயிட்டு வர்றேன்” என்று அதிக உடல் பருமனை மையமாக வைத்து ஓடும் கூட்டம் ஒரு பக்கம்.“ஆண்கள் மட்டும்தான் சிக்ஸ் பேக் வச்சிக்கணுமா? பொண்ணுங்க நாங்களாம் வச்சிக்கக் கூடாதா?” என்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்யும் கூட்டம் இன்னொரு பக்கம்.

இதோடு, “அந்த 50 கேஜி தாஜ்மஹால் மாதிரிதான் வேணும்” என்று உணவு பழக்கங்களையும், உடற்பயிற்சிகளையும் மாத்தி மாத்தி பரிசோதனை செய்து பார்க்கும் பெண்கள் ஒருபக்கம் என்றால், “ஒல்லியா இருந்தா தான் அழகு” என்று இன்னும் பல பெண்கள் எலும்பும் தோலுமாய் இருப்பதையே விரும்புகின்றனர்.உடல் எடை குறைவாக இருப்பது அழகுதான்.
எனினும் எந்த அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற வரையறை தெரியாமல் அறியாமையால் உடல் நலனை நாமே கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கட்டுரை.ஏன் உடல் எடை குறைவாக உள்ளது?இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும்.

*மரபியல் காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் யாராவது ஒல்லியாக இருந்தால், குழந்தைகளும் அதேபோல் வளர வாய்ப்புண்டு.
*அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் போதுமான அளவு உடம்பில் இல்லையென்றாலும் உடல் எடை கூடாது.
*போதுமான அளவில் ரத்த அணுக்கள் இல்லை என்றாலும் உடல் எடை கூடாது.
*தைராய்டு பிரச்சனை, புற்றுநோய், அதிக மன அழுத்தம் ஆகியவை இருந்தாலும் உடல் எடை அதிகரிக்காது.
*ஹீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்காது.

விளையும் பாதிப்புகள்...

* உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட குறைவாக இருந்தால் உடல் நலனில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* எலும்புகள் உறுதியாக இருக்காது.

* நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் எளிதில் நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* ரத்தசோகை ஏற்படும். இதனால் எப்போதும் உடல் வலி, அயற்சியாக இருப்பது, பலவீனமாக தோன்றுவது, சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் போவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

* கரு உருவாவதில் பிரச்சனை ஏற்படுவது.

* சரியான உதிரப்போக்கு இல்லாமல் இருப்பது.

* முடி உதிர்வது போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.

என்னதான் தீர்வு?

* நல்ல உணவு முறையும், சரியான பயிற்சிகளும் இருந்தால் உடல் எடை உயரும்.

* ஆரோக்கியமாக எடை உயருதலே எந்தவித தீமைகளையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் நாம் எவ்வழி சிகிச்சைகள் எடுத்துக்
கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.

* உடலில் உள்ள தசையின் அடர்த்தியை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை கூடும்.

* புரதச் சத்து உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் தசைகளின் வளர்ச்சி செழிப்பாய் இருக்கும்.

* தசைகளின் அடர்த்தியை அதிகப் படுத்த தசையை வலிமை செய்யும் உடற்பயிற்சிகளை இயன்முறை மருத்துவர்களின் உதவியுடன் செய்து வந்தால் உடல் எடை உயரும்.

* போதுமான கலோரி உணவு உட்கொண்டும், தேவையான ஓய்வு எடுத்தும், சரியான பயிற்சிகள் செய்தும் உடல் எடையை அதிகரிக்க வேண்டும்.

செய்யக் கூடாதது...

* டிரண்டிங் உணவு முறைகள் என அவ்வப்போது பிரபலம் ஆகும் உணவு வகைகள், அதாவது பேலியோ டயட், கீட்டோ டயட் என உணவு ஆலோசகர் பரிந்துரைகள் இல்லாமல் எந்த ஒரு உணவு முறையையும் பின்பற்றக் கூடாது.

* சந்தையில் உள்ள பல வகையான ஊட்டச்சத்து பவுடர்கள், உதாரணத்திற்கு ‘புரோட்டீன் பவுடர்’ போன்றவற்றை சரியான பரிந்துரை இல்லாமல் உபயோகிக்கக் கூடாது.

* நிறைய உணவு உட்கொண்டால் உடல் எடை உயரும் என நினைத்து பலர் பீட்சா, பர்கர் என ஜங்க் உணவுகளை அதிகம் உண்பர். அது தவறு. நற்சத்துடன் உயரும் உடல் எடையே உடல் நலத்திற்கு நன்மை.

செய்ய வேண்டியது...

* காய்ந்த பருப்புகள், சீஸ், சிகப்பு அரிசி போன்ற உணவுகளை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

* பொதுவாக காலை, மதியம், இரவு என மூன்று முறையாக உணவு உண்போம். ஆனால், உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆறு வேளையாக உணவு உண்பது சிறந்தது. அதாவது, காலை உணவை இரண்டாகப் பிரித்து சிறிது சிறிதாய் இடைவெளி விட்டு உண்ணவேண்டும். அதேபோல் ஆறு வேலையாக உண்பதால் விரைவில் செரிமானம் பெற்று நன்கு பசி எடுக்கும்.

தெரிந்து கொள்ளுங்கள்...

*நம் உடலில் உள்ள திசுக்கள் வளர்வதற்கும், திசுக்களில் ஏற்படும் காயங்களை ஆற்றுவதற்கும், திசுக்கள் இயங்குவதற்கும் நாம் உண்ணும் உணவை நம் உடல் பயன்படுத்தும். அவ்வாறு பயன்படுத்தப்படும் உணவில் அந்தந்த நாளுக்கான ஊட்டச்சத்தும் கிடைக்கப்  பெறவேண்டும். அப்போதுதான் உடலின் எடை சரிவர உயரும்.

* உடல் ஆரோக்கியமாக இயங்க அனைத்து விதமான ஊட்டச்சத்தும் முக்கியமானது. எனவே, கொழுப்புச் சத்து என்றாலே ஆபத்தானது, தீமைகளை விளைவிக்கக் கூடியது என்று இல்லை. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று வேறுபாடுகள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் எந்த உணவில் எந்த கொழுப்பு நிறைந்திருக்கும் என தெரிந்துகொண்டு உண்பது சிறந்தது. மூளையும், மற்ற சில உடல் பாகங்களும் சரியாக வேலை செய்ய தேவையான அளவு நல்லக் கொழுப்பு அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உணவு வகைகளை ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையோடு தேர்ந்தெடுக்க வேண்டும்.

மொத்தத்தில் ஒருவரது உடல் எடையானது உயர நீண்ட காலம் ஆகும் என்றாலும் ‘ஆரோக்கியம் உள்ள கலோரிகள்’ கொண்டே எடை உயர்கிறது என்பதால் உடல் நலனில் எந்த பாதிப்பும் இருக்காது. எனவே சரியான வழிமுறைகளைக் கொண்டு உடல் எடையை அதிகரிப்பதே எப்போதும் சிறந்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் பதித்துக்கொள்ளவேண்டியது மிக அவசியமாகிறது.

உடல் எடை எப்படி கணக்கிடப்படுகிறது?

உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட BMI (Body Mass Index) விதிமுறையினைக் கொண்டு ஒருவரின் உடல் எடையானது
கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக, உங்கள் எடை 55 கிலோ, உயரம் 155 செ.மீட்டர் என்றால்... 55 / (1.55 * 1.55) = 22.9. நீங்கள் ஆரோக்கியமான எடையில் இருக்கிறீர்கள்.
குறைந்த உடல் எடை    : 18.5 கீழ் இருந்தால்
சரியான அளவு     : 18.5 முதல் 25 வரை
அதிக எடை     : 25 முதல் 30 வரை
முதல் நிலை பருமன்     : 30 முதல் 35
2 ஆம் நிலை பருமன்     : 35 முதல் 40
40க்கு மேல் மிக அதிக பருமன்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்