பெண்களின் பில்லியன் பயணங்கள்நம் இளைஞர்களிடையே சுற்றுலா செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளதை சமீபத்தில் பார்க்க முடிகிறது. அதில்  பலர் தாமாகவே காரிலும், பைக்கிலும் பயணிக்க விரும்புகிறார்கள். இதில் குறிப்பாக பெண்களும் இப்போது பல சாகச பயணங்கள் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். பெண்கள் மட்டுமே தனியாக பயணிப்பதற்காகவே பயணக் குழுக்கள் பல உருவாகியுள்ளன. அதே போல இப்போது பல பெண்கள் பைக் ட்ரிப் செல்லவும் ஆரம்பித்துள்ளனர். அதில் பில்லியின் ரைடிங் என்கிற பயண முறையையே பெண்கள் விரும்புவதாக ரம்யாவும் வானவியும் தெரிவிக்கின்றனர்.

ரம்யா அரவிந்த், கடந்த ஒரு வருடமாக பில்லியன் ரைடராக தன் கணவருடன் இணைந்து பல இடங்களுக்குச் சென்றுள்ளார். ‘‘என் கணவர் திருமணத்திற்கு முன் இருந்தே நண்பர்களுடனும் தனியாகவும் பல பைக் ட்ராவல் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின், என்னை அருகிலேயே சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார்.அப்படியே எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பைக் ட்ராவல் மீது ஈடுபாடு உருவானது. என் கணவரும்,  நானும் Royal Roads 500 என்ற யூடியூப் சேனலையும் இயக்கி வருகிறோம். அதை சுமார் நாற்பது ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஃபாலோ செய்கிறார்கள்.

பைக்கில் செல்லும் போது, நமக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்ல முடியும். சாலைகளே இல்லாத வழிகளிலும் பயணித்து யாரும் போகாத இடங்களுக்குப் போக முடியும். இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா எனப் பல இடங்களுக்கு பைக் ட்ரிப் சென்றுள்ளோம். இந்தியாவில் பல கண்டுபிடிக்கப்படாத, மக்கள் அதிகம் செல்லாத அழகிய நிலங்களும் இயற்கை காட்சிகள்  நிரம்பிய இடங்களும் இருக்கின்றன. அந்த மாதிரியான இடங்களை நோக்கியே எங்களது பயணங்கள் இருக்கும்.  

அடிக்கடி ட்ராவல் செய்தாலும், நாங்கள் பட்ஜெட் பயணங்களைத்தான் விரும்புவோம். வெறும் பெட்ரோலுக்கு மட்டுமே செலவு செய்வோம். அதே போலச் சாதாரணமான தங்கும் விடுதியையும், உணவையுமே விரும்புவோம். அந்த திட்டங்களை எல்லாம் முடிவு செய்வது என் வேலை.

பைக் ட்ரிப் போக முதலில் நமக்குத் தகுந்த வசதியான ஒரு பைக்கை தேர்வு செய்ய வேண்டும். எப்போதுமே பைக் ரைட்  அதிகாலையில் தொடங்குவது நல்லது. அப்போது வெயில் இருக்காது, அதிக நெரிசலும் இருக்காது. சுலபமாக நகரத்தை தாண்டிவிடலாம். அதே போல இருட்ட ஆரம்பித்ததும் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்.  

பல சுற்றுலா தளங்களில், உள்ளூரில் வசிக்கும் மக்களிடம் உரையாடினாலே, அவர்கள் அங்கு இருக்கும் மற்ற அழகிய இடங்கள் குறித்த விவரங்களைக் கூறுவார்கள். என் கணவரின் சொந்த ஊர் ஒகேனக்கல். அது நிறையக் காடுகள் இருக்கும் இடம். ஆனால் அங்கு மக்கள் அதிகம் செல்வது ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்குத்தான். இருந்தாலும், அங்கு சுற்றுலா பகுதிகளைத் தாண்டி பல அழகிய இடங்கள் உள்ளன.

காட்டுக்குள் செல்லும் போது, அங்கு அதிகாரிகளிடம் முன்னதாகவே அனுமதி பெற்றுக்கொள்வோம். அவர்கள் எங்களிடம் கையெழுத்து வாங்கிய பின் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். அது மாதிரியான இடங்களுக்குச் செல்லும் போது வழியில் அதிக நேரம் இருக்கக் கூடாது. விலங்குகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

அவர்களின் வீட்டிற்குள் நாம் செல்கிறோம் என்பதால், அந்த இடத்தை அசுத்தம் செய்யாமல், அங்கு வாழும்
உயிரினங்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் பயணிப்பது முக்கியம்.நாங்கள் செல்லும் பைக்கில் ‘சாடில் பேக்குகள்’ இருக்கும். அதை வண்டியின் இரு பகுதியிலும் வைத்துக்கொள்ளலாம். அதில் குறைந்தபட்ச துணிகளும்,  யூடியூப் சேனலுக்கான பொருட்கள், தண்ணீர் பாட்டில் இது போன்ற முக்கியமான சில பொருட்களைத்தான் கையில் கொண்டு செல்வோம். இது வரை நான் சென்ற பயணங்களிலேயே சிக்மங்களூர்- மைசூர்- உடுப்பி-மங்களூர் இடங்களுக்கு ஏழு நாட்கள் பைக்கிலேயே மொத்தம் 2000 கிமீ சென்றது தான் என்னுடைய நீண்ட பயணம்.

அடுத்து இன்னும் சில மாதங்களில் லே-லடாக் பயணம் செல்லும் திட்டத்தில் இருக்கிறோம். எதிர்காலத்தில் “வர்க் ஆன் ரோட்” என்ற வாழ்க்கை முறைக்கு மாறி, வீட்டிலிருந்து வேலை செய்வதைப் போல, பயணங்களிலும் வேலை செய்ய வேண்டும்” என்கிறார் ரம்யா.
நம் அடுத்த பில்லியன் ரைடர் வானவி பூபாலன். இவர் தனது பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் தன்னுடைய யூடியூப் சேனலில் (the girl on pillion) பதிவேற்றி வருகிறார்.  

இவரது சொந்த ஊர் வேலூர். ஏரோநாட்டிக்கல் பயின்று பெங்களூரில்  வேலை செய்கிறார். இப்போது சில மாதங்களுக்கு முன், அதிகமாகப் பயணம் செல்ல வேண்டும் என்பதற்காக தன் வேலையிலிருந்து ஒரு குட்டி ப்ரேக் எடுத்துள்ளார்.‘‘நண்பர்களுடன் பெங்களூரில் தங்கி இருந்த போது, வார இறுதியில் பைக்கில் வெளியே செல்வோம். அப்போது நண்பர்கள் ராயல் என்பீல்ட் பைக் வாங்கினார்கள். அதை வாங்கியதும், பெங்களூரைத் தாண்டி பல இடங்களுக்குப் பயணிக்கத் தொடங்கினோம். 2016ல் ஆரம்பித்த பைக் பயணம், இதுவரை 25 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பைக்கில் சென்றுள்ளோம்.

பைக் ட்ரிப் செல்பவர்களுக்கு, தொடர்ந்து சில நாட்கள் சாலையில் தொலை தூரப் பயணம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்கும் அப்படி ஒரு ஆசை பல வருடங்களாகவே இருந்தது. கொரோனா சமயத்தில், இந்த ஆசை அதிகம் மேலோங்க, உடனே வேலையைவிட்டு ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு, பைக் பயணம் செல்ல ஆரம்பித்துவிட்டேன்.

போன வருடம் சிக்கிம் சென்று வந்தோம். எனக்குப் பயணம் செல்வது தான் முக்கியம். பைக் ட்ரிப் போகும் போது, அதில் ஒரு தனிப்பட்ட அமைதியும் அனுபவமும் கிடைக்கும். அது வேறு எந்த விதமான பயணங்களிலும் கிடைத்ததில்லை. பொதுவாக மலைப் பகுதிகளுக்கும், கூட்டம் குறைவான இடங்களுக்கும் போவதையே விரும்புவோம். எந்த ஊருக்குச் செல்லப் போகிறோம் என்பதை மட்டும் முடிவு செய்து, போகும் வழியில் மக்களுடன் பேசி கிடைக்கும் அனுபவங்களில், அவர்கள் காட்டும் இடங்களுக்குச் சென்று வருவோம்.

இதுவரை நான் சென்ற பயணங்களில் மிகவும் சவாலாகவும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்த பயணமாகவும் சிக்கிம் இருந்தது. வடக்கில் சாலைகள் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். மேலும், சாலைகள் முழுக்க பல வகையான வண்ணங்களுடன் பெரிய பெரிய லாரிகளும் இருக்கும். அதனால் பைக் பயணம் செல்லும் போது சோர்வடைந்துவிடுவோம்.

சிக்கிமிற்கு நாங்கள் பனிக்காலத்தில் சென்றதால், கடுமையான குளிர் இருந்தது. பைக்கில் செல்லும் போது, எங்கள் கைகள் உறைந்தே விட்டது. சைலன்சரின் மீது  கைவைத்து,  கைகளை வெப்பமாக்கிப் பயணித்தோம். அது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. மலை உச்சியை அடைந்து திரும்பி கீழே வரும் போது எங்களால் பைக்கை ஓட்டி வர முடியவில்லை. பனி மிகவும் கடுமையாக இருந்தது.

அப்போது அங்கிருந்த பைக் ரைடர் ஒருவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். அவர்தான் எங்களுடைய பைக்கை மலையிலிருந்து கீழே ஓட்டி வந்தார். இப்படி முன்பின் தெரியாத பலரின் அன்பையும் பயணங்களின் போது உணரலாம்.பைக்கில் பயணிக்கும் போது,  இயற்கையுடன் அதனருகில் இருப்பது போன்ற உணர்வு உண்டாகும். பல காட்சிகளை முழுவதுமாக ரசிக்க முடியும். சில நிமிடங்கள் மட்டுமே நின்று ரசிக்கக் கூடிய ஒரு இடத்திற்குப் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து செல்வோம். அதில் இலக்கை விட அந்த பயணமே எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பச்சமலை எனக்குப் பிடித்த இடம். சுற்றுலாப் பயணிகளின் கட்டணத்தை - அங்கு வாழும் மக்களுக்கு உதவிக் கடனாகக் கொடுப்பார்களாம். மாஞ்சோலை குறைவான மக்கள் செல்லும் இடம், ஆனால் மிகவும் அழகாக இருக்கும்” என்றவர் நம் ஊரிலேயே இயற்கை அழகுடன் பல இடங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார். மேலும், பைக் ரைட் செல்லும் போது எந்த மாதிரியான திட்டங்களையும் தயாரிப்புகளையும் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

நெட் வர்க் கவரேஜ் இருக்கா என்பதைப் பார்த்து, மேப் டவுன் லோட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் போகும் இடத்தில் மக்கள் வசிக்கிறார்களா? மக்களின் நடமாட்டம் இருக்கிறதா என்பதையும் பார்ப்போம். நம் ஊரில் இருக்கும் வெப்பநிலையாக இருந்தால், லைட் காட்டன் பேன்ட் அணிந்துகொண்டால் எளிதாகப் பயணம் செய்ய முடியும். ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும். தங்குமிடம் குறைந்த பட்ஜெட்டில் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை  உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பைக் ரைடர்ஸ் ஒருவர் தவறு செய்தாலும், அது மற்றவர்களின் மீதான பிம்பத்தையும் பாதிக்கும். அதனால், நாங்கள் எப்போதுமே பாதுகாப்பாகத்தான் பயணிப்போம். அதிகமான வேகத்தில் செல்ல மாட்டோம். இரவில் பயணிக்க மாட்டோம். சுற்றுலா போகும் இடங்களை அசுத்தம் செய்து, அங்கிருப்பவர்களுக்குத் தொந்தரவு தரமாட்டோம். இது போன்ற அடிப்படை விதிமுறைகளுடன் பயணிப்போம்.

இன்று பயணங்களின் போது பல பெண்களைப் பார்க்க முடிகிறது. பல பெண்கள் திருமணமாகி குழந்தையுடன் கூட பைக் ட்ராவல் செய்கின்றனர். பைக் ட்ராவல் செய்யும் அனைவருக்குமே லே-லடாக் செல்ல வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். என்னுடைய ஆசையும் அதுதான். நண்பர்கள் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும் என்பதற்காகச் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்கிறார் வானவி.

ஸ்வேதா கண்ணன்