அக்கா கடை-தரமான சுவையான உணவை எப்போதும் மக்கள் கைவிடமாட்டாங்க!
ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு. வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் தங்களின் இரு மகள்களுக்கு உள்ளது என்பதற்கு உதாரணமாக குடும்பமாக இட்லி மற்றும் மாவு வியாபாரம் செய்து வருகிறார்கள் பாலசுப்பிரமணியம்- தங்கம் தம்பதியினர். ஈரோட்டில், சூரம்பட்டியில் ஐந்து ரூபாய் இட்லிக் கடை என்றால் மிகவும் பிரபலம்.
 ‘‘என் பசங்க இல்லைன்னா எங்களால இந்த கடையை நடத்தியே இருந்து இருக்க முடியாது’’ என்று பேசத் துவங்கினார் பாலசுப்பிரமணியம். ‘‘என்னுடைய பூர்வீகம் திருநெல்வேலி. அப்பா சின்ன வயசிலேயே இங்க ஈரோட்டில் வந்து செட்டிலாயிட்டாங்க. அதனால நான் படிச்சது வளர்ந்தது எல்லாம் இங்கு தான். அப்பா சின்னச் சின்ன வேலைகள் செய்து தான் எங்களை வளர்தார். நான் எட்டாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன்.
 13 வயசில் சாயப்பட்டறையில் வேலைக்கு சேர்ந்தேன். காட்டன் புடவைகளுக்கு சாயம் போடுவது முதல் பிரின்டிங் என பத்து வருஷம் அந்த வேலையில் இருந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. இரண்டு மகள்கள், ஒரு மகன். அப்பா தன்னுடைய சம்பாத்தியத்தில் சிறிய அளவில் ஒரு மளிகை கடை வச்சிருந்தார். அவருக்கு வயதானதால் அதை நான் எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். அப்பா பார்த்து வந்த வியாபாரத்தை நான் இரட்டிப்பாக்கினேன். சீட்டு பணமும் பிடித்து வந்தேன்.
வாழ்க்கையில் எப்போதுமே ஏற்றம் மட்டுமே இருக்காது, இறக்கமும் இருக்கும். ஆனால் நான் பாதாளத்தில் தள்ளப்பட்டேன்னு தான் சொல்லணும். சீட்டு விஷயத்தில் பெரிய இழப்பை சந்தித்தேன். கடையும் சரியா கவனிக்க முடியல. ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்து போச்சு. மடத்தில் போய் தங்கிட்டேன். என் குடும்பமும் என்னை பிரிந்து அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. இரண்டு வருஷம் என்ன செய்றதுனு புரியாம இருந்தேன்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் மனைவி தங்கம்.
‘‘இவர் தொழில் ரீதியா ரொம்ப இழப்பை சந்திச்சதால், குடும்பத்தை பற்றி எதுவுமே யோசிக்காமல் மடத்தில் போய் சேர்ந்துவிட்டார். அவர் இருந்த மனநிலைக்கு என்னால் அவருடன் சண்டையும் போட முடியல. அவரே வருவார் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருந்தது. இந்த சமயத்தில் என் மாமனார் காலமானார். செய்திக் கேள்விப்பட்டு இவர் அங்கு வர, சொந்தங்கள் அனைவரும் எவ்வளவு காலம் தான் இப்படி இருவரும் தனியே இருப்பீங்க. இனிமேலாவது குடும்பமா இருங்கன்னு அவருக்கு அறிவுரை கூற அவரும் தன் தவறை உணர்ந்து, குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று எங்களிடமே வந்துவிட்டார். அந்த சமயத்தில் வேலை ஏதும் இல்லை.
என் மாமனார் விட்டு சென்ற மாவு தொழில் மட்டும் இருந்தது. மூன்று குழந்தைகளை கரை சேர்க்க வேண்டும். அதனால் நானும் என் கணவரும் மாவு தொழிலை எடுத்து செய்ய ஆரம்பித்தோம். மாவு அரைச்சு வீடாவீடாக போய் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். ஒரு குறிப்பிட்ட அளவு தான் அரைப்போம். அதுவும் மாலை நேரத்தில் மட்டும் தான் விற்பனை செய்வோம்.
எல்லா மாவும் விற்பனையாயிடும். எங்களின் குடும்பமும் ஒரு நிலைக்கு வர ஆரம்பிச்சது. எவ்வளவு காலம் இப்படி வண்டியை தள்ளிக் கொண்டு தெருத்தெருவா மாவை விற்பனை செய்றது. நிரந்தரமாக ஒரு இடத்தில் இருந்து வியாபாரம் செய்யணும்ன்னு முடிவு செய்தோம். மாவு விற்கும் போது, அதை கொஞ்சம் கூடுதலாக அரைச்சு இட்லி மற்றும் தோசை கடை போடலாம்ன்னு முடிவு செய்தோம்’’ என்றவரை இடைமறித்தார் அவரின் மூத்த மகள் சந்தியா.
‘‘நான் பி.காம் படிச்சிருக்கேன். இப்போது ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறேன். அம்மாவும் அப்பாவும் என்னிடமும் என் தங்கை ரம்யாவிடமும் இட்லி கடை போட போறதாகவும், அதற்கு எங்களின் ஆதரவு வேண்டும்ன்னு கேட்டாங்க. அம்மாவிற்கு காலில் சின்ன விபத்து ஏற்பட்டதால், அவங்களால அதிக நேரம் நின்று வேலை செய்ய முடியாது. நாங்க கொஞ்சம் உதவினா நல்லா இருக்கும்ன்னு அப்பா கேட்டார். நம்ம கடை அதில் நம்ம உழைப்பு இல்லாமல் எப்படின்னு நானும் தங்கையும் அம்மா, அப்பாவுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சோம்’’ என்றார்.
‘‘இட்லி, ேதாசை, முட்டை ேதாசை, ஆனியன் தோசை, ஆம்லெட் எங்க கடையின் ஸ்பெஷாலிட்டி. நாங்க சாம்பார் தருவதில்லை. அதற்கு பதில் இட்லி குருமா, தேங்காய் சட்னி, வெங்காய சட்னி கொடுக்கிறோம். 20 ரூபாய்க்கு நான்கு இட்லி தரோம். நானும் அம்மாவும் கடையை பார்த்துப்போம். அக்காவும் அப்பாவும் மாவு விற்க போயிடுவாங்க’’ என்று பேசத்துவங்கினார் இளையவரான ரம்யா. ‘‘அக்கா காலேஜ் முடிச்சிட்டாங்க. வேலைக்கு போறாங்க. வேலை முடிச்சிட்டு கடைக்கு வந்திடுவாங்க.
நான் படிச்சிட்டு இருக்கேன். கல்லூரி முடிச்சிட்டு நானும் கடைக்கு அம்மாவுக்கு உதவியா வந்திடுவேன். எந்த ஒரு சுவையூட்டிகளும் கலப்பதில்லை. வீட்டு தயாரிப்பு தான். சமைக்கிறது எல்லாம் அம்மா தான். அவங்களுக்கு தான் அந்த பக்குவம் தெரியும். நானும் அக்காவும் இப்ப தான் கத்துக் கொண்டு இருக்கிறோம். சில சமயம் பசின்னு வருவாங்க. காசு இருக்காது. அப்பா அவங்களிடம் காசு வாங்க வேண்டாம்ன்னு சொல்லிடுவார். பசின்னு வந்தா நம்மாள முடிந்த உதவியை செய்யுங்கன்னு சொல்வார். அதே சமயம் கடனா மட்டும் கொடுக்காதேன்னு அப்பா ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கார்’’ என்றார் ரம்யா தன்னுடைய டிரேட் மார்க் புன்னகையுடன்.
‘‘என்னதான் படிச்சு வேலைக்கு போனாலும், பெண்களுக்கு கைத்தொழில் ரொம்பவே அவசியம். அவங்க கல்யாணமாகி செட்டிலானாலும், இந்த கைத்ெதாழில் கண்டிப்பா அவங்களுக்கு கைகொடுக்கும். எங்களால முடிந்த வரைக்கும் இந்த கடையை நடத்துவோம். அதன் பிறகு என் பசங்களிடம் ஒப்படைச்சிடுவோம். மாவு விற்பனையில் வரும் வருமானத்தில் வீட்டு செலவினை பார்த்துப்போம். கடையில் வரும் வருமானத்தை கடை வாடகை மற்றும் பசங்க படிப்புன்னு தனித்தனியா பிரித்துக் கொள்வோம்.
கொரோனா காலத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். மாலை நேரம் மட்டும் அனுமதி பெற்று இரண்டு மணி நேரம் கடை நடத்தினோம். மற்ற நாட்களில் ஏழு மணிக்கு கடையை திறப்போம். இரவு பத்து மணி வரை கடை இருக்கும். என்னைக் கேட்டால் சாப்பாடு தொழில் நிரந்தரமானது. அதுவும் உணவினை தரமாகவும் சுவையாவும் கொடுத்தா மக்கள் கண்டிப்பா நம்மை கைவிடமாட்டாங்க என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
என் மாமனார் விட்டுட்டுப் போன தொழிலை நானும் என் கணவரும் எடுத்து நடத்த ஆரம்பிச்சோம். அவரின் பெயரை எங்க காலம் முழுதும் சொல்ல நாங்க கடமைப்பட்டு இருக்கோம். அதே போல் எங்களுக்கு பிறகு என் பசங்களுக்கு இந்த தொழில் கண்டிப்பா ஒரு உறுதுணையா இருக்கும்’’ என்றார் தங்கம்.
செய்தி: ப்ரியா
படங்கள்: ராஜா
|