நியூஸ் பைட்ஸ்



மக்கள் மனதை கவர்ந்தார் தடகள வீராங்கனை!

இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் ஒடிசா மாநிலத்தில் தனது சொந்த கிராமமான ஜஜ்பூரில் வாழும் மக்களுக்கு உதவ, தன் காரில் 70 கி.மீ பயணம் செய்து சென்றிருக்கிறார். சிறப்பு அனுமதி பெற்று புவனேஷ்வரிலிருந்து புறப்பட்டு தன் கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று உணவு, மளிகை பொருட்களுடன் சானிடரி நேப்கின்களையும் வழங்கினார்.

‘‘இங்கு சானிடரி நேப்கின்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் இதை வெளியில் சொல்ல தயக்கப்பட்டு தனியாக அவதிப்படுவார்கள். வேலையில்லாமல் கிடைக்கும் வருமானம் உணவுக்கே செலவாகிவிடும் நிலையில், பெண் களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு அவர்களுக்குத் தேவையான சானிடரி பொருட்களை வழங்கினேன்” என்கிறார் நம் ரியல் ஹீரோ.

‘ரோஜா’ பட பாணியில் கணவரை மீட்ட பெண்

பிஜாப்பூரில் உள்ள போபால்பட்டணம் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் சந்தோஷ். இவர் மே 4 அன்று காணாமல் போனதும், இவரது மனைவி சுனிதா அவரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். மே 6 அன்று, சந்தோஷ் நக்சல் கும்பலால் கடத்தப்பட்டது தெரியவந்து அதிர்ச்சியாகியுள்ளார்.

உடனே தன் 14 வயது மகள்,  பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் சில கிராம மக்களுடன் இணைந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் தன் கணவரைமீட்கப் புறப்பட்டுள்ளார். அங்கு தன்  கணவரைக் கண்டுபிடித்து, நக்சல் கும்பலிடம் அவரை விடுவிக்கும்படி மன்றாடி கிராம மக்களின் உதவியுடன் போராடி மீட்டுள்ளார்.

கோமாளிகளாக மாறிய சகோதரிகள்!

வேலையில்லாமல் சொந்த ஊருக்குச் செல்ல வழியும்  இல்லாமல் பல ஆயிரம் கி.மீ கால்நடையாகவே தங்கள் ஊருக்கு சென்றுகொண்டிருக்கின்றனர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அதில் கால்நடையாகவும் செல்ல முடியாமல் பல தொழிலாளர்கள் முகாம்களில் தங்கி தங்கள் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் பல கண்ணீர்க் கதைகள் உண்டு. இவர்களது துயரத்தை சிறிதளவேனும் குறைக்கும் நோக்கில் தில்லியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் கோமாளிகளாக வேடமிட்டு மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இவர்களால் பல குழந்தைகளும் பயம் பசியை மறந்து மகிழ்ச்சி நிலைக்கு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நூற்றாண்டின்பிரபலமான பிரதமர்!

நியூசிலாந்தின் இளம் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் இந்நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரதமராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே தன் கைக்குழந்தையுடன் ஐ.நா சபைக்கு வந்து உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தார். சமீபத்தில் கொரோனா போராட்டத்தில் மக்களுடன் நின்று கனிவான நடவடிக்கைகளை முன்னெடுத்து முழு ஒத்துழைப்புடன் கொரோனாவைக் கட்டுப்படுத்தி வென்றிருக்கிறார். இதன் மூலம் டிவிட்டரில் ஜெசிண்டா ஆர்டனுக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

ஸ்வேதா கண்ணன்