வாசகர் பகுதி



கிழங்குகளில் கிடைக்கும் ஆரோக்கியம்!

கிழங்குகளை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்ணும்போது சோகை வராமல் தடுக்கப்படுகிறது. சர்க்கரை வள்ளி, கருணை, அமுக்கிராங்கிழங்கு, தாமரைக்கிழங்கு என பல்வேறு வகையான கிழங்குகள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் பல்வேறு விதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சத்துக்குறைவான உணவை உண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும். அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு வாத நோய்கள் வரலாம்.

கருணைக்கிழங்கு: அஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும். வாத சூலை, குன்ம நோய், கிருமிகள் வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களைப் போக்கும். மூலநோய் குணமாகும்.

அமுக்கிராங்கிழங்கு: கட்டிகளின் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குணப்படுத்தும். இதை பாலில் நன்கு வேக வைத்து உலர்த்தி பின் பொடியாக்கி கல்கண்டு சேர்த்து பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தாது புஷ்டி ஏற்படும்.

தாமரைக்கிழங்கு: கண்களில் தோன்றும் குறைபாடுகளை போக்க வல்லது. தவளை சொறி, உடல்வலி, பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் குணப்படுத்த வல்லது.

முள்ளங்கி கிழங்கு: இருமல், ஜலதோஷம், தலைவலி, கபம், சுவாசக் கோளாறு, குன்மம், பல்நோய், மூலக்கடுப்பு போன்ற குறைபாடுகளை குணப்படுத்தும்.பனங்கிழங்கு: பித்த மேகம், அஸ்தி சூடு ஆகியவற்றைக் குணப்படுத்தும். உடல் குளிர்ச்சி உண்டாக்கும். சிறுகிழங்கு: இருதய நோய், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

- ஜானகி ரங்கநாதன் சென்னை.

நோய் தீர்க்கும் மலர்கள்

மலர்கள் பலவித நோய்களுக்கு மருந்தாகவும், நோய் கட்டுக்குள் கொண்டுவரும் தன்மை கொண்டதாகவும் பயன்படுகிறது. அந்தந்த மலர்களை நாம் பயன்படுத்துவதின் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். குங்குமப்பூ: கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை ரோஜா இதழ்களுடன் சாப்பிட்டால் குடல் புண்கள் மறையும். வளரும் குழந்தைக்கும் நல்லது.

சம்பங்கிப்பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப்பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் வலுமை பெறும்.

வாழைப்பூ: இதை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களை வருத்தும் மாதவிடாய் வலி நீங்கும்.

பாதிரிப்பூ: பித்த ஜுரம் நீங்கும். வெள்ளைப்போக்கு நீங்கும்.

பன்னீர்ப்பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மகிழம்பூ: இதனை முகர்ந்தால் வாந்தி நிற்கும். உடலில் உள்ள வெப்பம் நீங்கும்.

செம்பருத்திப்பூ: காலையில் வெறும் வயிற்றில் பூவை சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலின் உஷ்ணம் குறையும். இதயத்தை பலப்படுத்தும்.

அல்லிப்பூ: இதனை சர்பத்தாக செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் நீங்கும். கண் நோய்கள் தீரும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

அகத்திப்பூ: இதனை சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். எலும்புகள் பலப்படும். உடலுக்கு சக்தியைத் தரும்.

வேப்பம்பூ: ஏப்பம், நாக்கில் சுவையின்மை, நாக்குப்புண், ஜன்னி ஆகிய நோய்களைத் தீர்க்கும்.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.