எல்லா வேலையும் செய்யும் ஆல்சர்வ்பெரும்பாலான வீட்டில் வயதானவர்கள் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். காரணம் அவர்களின் மகன்கள் வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவர்களாக இருப்பார்கள். பெண்கள் என்றால் திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகி இருப்பார்கள். அப்படியே அதே ஊரில் இருந்தாலும், அவர்களால் தினமும் வந்து இவர்களை பார்த்துக் ெகாள்ள முடியாது.

இப்படி தனிமையில் இருக்கும் பலர் கேட்டெட் கம்யூனிட்டியில் தங்களுக்கு என்று ஒரு வீடு வாங்கி செட்டிலாகிவிடுகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் நகர வாழ்க்கையை விட்டு சிறிது தூரம் தள்ளி அமைக்கப்பட்டு இருக்கும். பொதுவாகவே கேட்டெட் கம்யூனிட்டி பாதுகாப்பானது என்பதால், பலர் அதையே விரும்புகிறார்கள் என்கிறார் ஆல்சர்வ் (Alserv) நிறுவனத்தின் நிறுவனர் ஜெகதீஷ்.

‘‘ஆரம்பத்தில் நான் ஒரு நிறுவனத்தை நிர்வகித்து வந்தேன். ஆனால் சில காரணங்களால் அதனை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டேன். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் தொழில்நுட்பம் சார்ந்து ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. காரணம் தற்போது நாம் எல்லாரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் வந்த காலம் முதல் எல்லாருடைய வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. ஸ்மார்ட் போன்கள் இளம் வயதினருக் கானது மட்டுமல்ல... எல்லா வயதினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் தனித்திறன். இந்த தொழில்நுட்பத்தை எளிய மற்றும் நூதன முறையில் வயதானவர்களுக்கு பயன்படுத்தும் படி ஒரு ஆப்பினை உருவாக்க நினைச்சேன். அதன் படி ஆரம்பிக்கப்பட்டது தான் ‘ஆல்சர்வ்’’ என்றவர் அந்த ஆப்பின் பயன்பாட்டினை விவரித்தார்.

‘‘முதலில் வயதானவர்களின் தேவை என்ன என்று பட்டியலிட்டோம். அவங்களுக்கு என்ன விதமான சேவைகளை செய்ய முடியும் என்று குறிப்பெடுத்தோம். அதில் அவங்களுக்கு முக்கியமானது என்று பார்த்தால் சாப்பாடு. குறிப்பாக வீட்டுச் சாப்பாடு, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள், மருந்துகள், மருத்துவ உதவிகள், வீட்டு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு... இவை தான் அவர்களின் முக்கிய தேவை என்று அறிந்து கொண்டோம். சிலர் தற்போது ரிடையர்மென்ட் கம்யூனிட்டி போன்ற இடங்களில் வசித்து வருகிறார்கள். அங்கு இவர்களுக்கு என மாதம் ஒரு பேக்கேஜ் இருக்கும்.

அதாவது மூன்று வேளை சாப்பாடு மற்றும் மருந்து உதவிகளுக்கு என ஒரு கட்டணம் அவர்கள் மாதம் செலுத்த வேண்டும். அதை அவர்கள் பெறாவிட்டாலும் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த வசதிகள் எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்லிட முடியாது. ஒரு சிலர் ஏற்கனவே நான் சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். இந்த வயதான காலத்தில் தனியாக ஒரு இடம் வாங்கியோ அல்லது வாடகை செலுத்தியோ இருக்க முடியாது. நான் இருக்கும் இடத்திலேயே இதற்கான சேவை எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவார்கள். அவர்களுக்காகவே அமைக்கப்பட்டது தான் இந்த ஆப்.

முதலில் இதனை கூகிள் ப்ளேஸ்டோர் மூலம் தங்களின் செல்போனில் டவுண்லோட் செய்ய வேண்டும். 1000 ரூபாய் செலுத்தி உறுப்பினராக இணைய வேண்டும். அவ்வளவு தான். அதன் பிறகு அவர்களுக்கு வேண்டிய எல்லா சேவைகளும் தரம் வாரியாக பிரித்து பட்டிய லிடப்பட்டு இருக்கும். அதை அவர்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தந்த சேவைக்கான கட்டணம் தனியாக குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பதால், அவர்கள் உரிய கட்டணம் செலுத்தி பயன்  பெறலாம்.

உதாரணத்திற்கு இவர்கள் மூன்று வேளையும் உணவு வேண்டும் என்றால் வாங்கிக் ெகாள்ளலாம். ஒரு சிலர் மதிய உணவு மட்டும் விரும்புவார்கள். அதில் சிலர் சாதம் வடித்துக் கொள்வார்கள். குழம்பு மற்றும் காய்கறி மட்டும் வேண்டும் என்பார்கள். இது போல் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப உணவினை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். உணவைத் தொடர்ந்து அவர்களின் அடுத்த தேவை மருத்துவ உதவி. 90 சதவிகித பேருக்கு டயபெட்டிக் மற்றும் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளது.

இவர்கள் மாதம் ஒரு முறை அதன் நிலையை அறிந்து கொள்வது அவசியம். அதற்காக ஒவ்வொரு முறையும் லேப்புக்கு சென்று ஆய்வு செய்ய முடியாது. இதனை வீட்டிற்கே வந்து ஆய்வு செய்யும் வசதியும் இந்த ஆப் மூலம் அமைத்து தந்துள்ளோம். அது மட்டும் இல்லாமல், பிசியோதெரபி, கேர்டேக்கர், நர்ஸ் சேவை மற்றும் மருந்துகளையும் வீட்டிற்கே கொண்டு தர முடியும். மூன்றாவது வீட்டு பராமரிப்பு. வீடு ஒன்று இருந்தால், அதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் சின்ன சின்ன ரிப்பேர்கள் ஏற்பட செய்யும். மாதம் ஒரு முறை அவர்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கான வசதியும் உண்டு.

எல்லாவற்றையும் விட பாதுகாப்பு என்பது அவர்களுக்கு மிகவும் அவசியம். வாரம் ஒரு முறை அவர்கள் வீட்டில் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்க்க செக்யூரிட்டி ஆடிட் செய்கிறோம். அது மட்டும் இல்லாமல் வீட்டில் செக்யூரிட்டி சார்ந்த தொழில்நுட்பம் சி.சி.டி.வி கேமரா, படுக்கை அறையில் க்ேளா விளக்குகள், யார் வந்து இருக்கிறார்கள் என்று வீட்டில் இருந்து பார்க்கும் செக்யூரிட்டி அமைப்புகள்... என பல வசதிகளும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏற்படுத்தி தருகிறோம்.

எல்லாவற்றையும் விட கடைசியாக, அவர்கள் வங்கி அல்லது வெளியே செல்ல கேப் வசதிகள் மற்றும் கால் டிரைவர் வசதியும் இந்த ஆப் மூலம் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றவர் 24 மணி நேரமும் கால்சென்டர் வசதி இருப்பதால், எந்நேரம் வேண்டும் என்றாலும் தொலைபேசி மூலமாகவும் இவர்களுக்காக சேவையினை அமைத்து தந்துள்ளதாக தெரிவித்தார்.

‘‘இவர்கள் தங்களின் அனைத்து சேவைகளையும் ஆப் மூலமாகத்தான் செயல்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் சிலருக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவது சிக்கலாக இருக்கும். அவர்களுக்காகவே 24 மணி நேரமும் கால்சென்டர்கள் இயக்கப்படுகிறது.

(044-46664888) என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு உதவியினை பெறலாம். இதில் மற்றொரு வசதியும் உள்ளது. ஒருவருக்கு ஒருவர் என்ற செயல்பாடு. அதாவது கணேஷ் என்ற வாடிக்கையாளர் கால்சென்டர் மூலம் பேசும் போது, அவருக்கு என ஒரு ரிலேஷன்ஷிப் நிர்வாகி (relationship manager) என்பவர் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்படுவார்.

எப்போது கணேஷ் தொடர்பு கொண்டாலும், அந்த நபர் தான் அவரின் தேவைகளை பூர்த்தி செய்வார். அதாவது ஒருவரே தொடர்பு கொண்டு பேசும் போது, அவரின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுவது எளிது என்பதால், ஒருவருக்கு ஒருவர் என்ற திட்டத்தினை அமல் செய்திருக்கிறோம்’’ என்றவர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்துவதால், அவர்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

‘‘வீட்டில் வயதானவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்று தெரிந்தால், எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெற வாய்ப்புள்ளது. அவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அவர்கள் ஒரு சேவையை நியமித்த அடுத்த நிமிடம் அதனை பூர்த்தி செய்ய வருபவர்களின் முழு விவரங்கள் அவர்களின் புகைப்படம் உட்பட வாடிக்கையாளர்களின் கைபேசிக்கு செய்தி வந்திடும்.

மேலும் அவர்களின் பிள்ளைகளும் இவர்கள் என்ன சேவையினை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை ஆப் மூலமாக தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்தில் சரியான முறையில் நடைபெற்றதா என்பதையும் நாங்க கேட்டு தெரிந்து கொள்வோம். இதன் மூலம் அவர்கள் பல தரப்பட்ட பாதுகாப்பு வளையத்தில் இருப்பதை நாங்க உறுதி செய்து கொள்கிறோம்.

தற்போது சென்னையில் மட்டுமே ஆல்சர்வ் செயல்பட்டு வருகிறது. விரைவில் மற்ற நகரத்திலும் துவங்கும் எண்ணம் உள்ளது. மேலும் இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சேவைகளையும் அதிகரிக்கும் எண்ணம் உள்ளது. மேலும் தற்போது ஊரடங்கு நேரத்தில் முடிந்த அளவிற்கு எங்களின் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எங்களின் நோக்கமே அவர்களுக்கு ஒரு தரமான வாழ்க்கை முறையினை அமைத்து தருவது தான்’’ என்றார் ஜெகதீஷ்.

ஷம்ரிதி