ஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்!



கடந்த ஒன்றரை மாதமாக கொரோனா என்ற அரக்கன் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த நோய் பரவாமல் இருப்பதற்காகவே உலகம் முழுதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் மட்டும் விற்பனையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், மக்கள் அதனை பெறவே பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

குறிப்பாக வயதானவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்னை ஏன் இருதயம் குறித்த பிரச்னைகள் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் அந்தந்த பிரச்னைக்கான மருந்துகளை தவறாமல் எடுத்துக் ெகாள்வது அவசியம். தற்போது உள்ள நிலையில் மருந்து கடைகளுக்கு சென்று கால் கடுக்க நின்று மருந்து வாங்க முடியாத சூழல்.
இந்த இன்னல்களை சந்திக்காமல் இருக்க, ஒரே வழி ஆன்லைன் மூலம் மருந்துகளை பெறுவது தான். நமக்கு வேண்டிய மருந்துகளை ஆன்லைனில் பதிவு செய்தால் போதும், அவை நம் வீட்டுக்கே டெலிவரியாகிவிடும். இதற்காக இருக்கும் ஆப்களை உங்களின் கைப்பேசியில் டவுன்லோட் செய்து, பலன் அடையுங்கள்.

Aarogya Setu

COVID-19 வைரஸ் தொற்று நாளுக்கு நாள் மக்களை பாதித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் குணமாகினாலும், மறு பக்கம் நோய் தொற்று தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே Aarogya Setu என்ற ஆப்பினை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து இந்த ஆப்பில் அவ்வப்போது விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் மக்களை நேரடியாக அணுகவும் அதே சமயம் இந்த தொற்றின் தாக்கத்தை குறைக்கவும், இந்த அரசு மற்றும் சுகாதாரத் துறை இணைந்து இந்த ஆப் மூலம் முன்முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது.

Pharm Easy

தமிழ்நாடு, மும்பை, குர்கான், தில்லி, நொய்டா, ஆந்திரா, மேற்குவங்காளம், குஜராத், கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான் போன்ற இடங்களில் இதன் சேவை பரந்து விரிந்துள்ளது. PharmEasy ஆப் மூலம் மருந்துகளை ஆர்டர் செய்தால், 48 மணி நேரத்தில் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

நீங்கள் ஆர்டர் செய்யும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடியும் உண்டு. மருந்துகள் தவிர மற்ற ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்களும் இதன் மூலம் பெறும் வசதியுண்டு. மேலும் வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனைக்கு ஏற்ப விலையில் தள்ளுபடி வசதியும் உண்டு. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற மருந்துகளை தினமும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அதனை மாதம் எந்த தேதியில் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஒரு முறை பதிவு செய்தால் போதும். அந்த தேதியில் உங்கள் இல்லம் தேடி மருந்துகள் டெலிவரி செய்யப்படும்.

SastaSundar

மருத்துவர்கள், சுகாதார தகவல்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான சேவைகள் அனைத்தையும் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஆப் தான் SastaSundar. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான மருந்தினை குறைந்த விலையில் இதில் பெற்றுக் கொள்ளலாம். இதில் மருந்துகளை ெபறுவது மிகவும் சுலபம். டாக்டர் பரிந்துரைத்துள்ள மருந்து பட்டியலை இந்த ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அதற்கான விலைப் பட்டியல் குறித்த விவரங்கள் வெளியானதும், அதனை ஆன்லைனில் செலுத்தினால் போதும், மருந்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.

மருந்துகளைப் பெற்றுக் கொண்டும் பணம் செலுத்தலாம். மருந்துகள் மட்டுமல்லாமல், வயதானவர்களுக்கான நர்சிங், பராமரிப்பு சேவைகள் மற்றும் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளும் இதன் மூலம் பெறலாம். மேலும் வீட்டில் வந்து மருத்துவ ஆய்வுகள் செய்யும் வசதியும் உண்டு.

பொது மருத்துவ நிபுணர், தோல் மருத்துவர் (தோல் நிபுணர்), இரைப்பை நிபுணர், நரம்பியல் நிபுணர், சிறுநீரக மருத்துவர், பல் மருத்துவர், கார்டியாலஜிஸ்ட், கண் நிபுணர், பொது மருத்துவர், தைராய்டு நிபுணர், எலும்பியல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், குழந்தை நிபுணர், பிசியோதெரபிஸ்ட் போன்ற நிபுணர்களின் ஆலோசனையும் ஆன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

1mg

மருந்து குறித்த விவரங்கள், பரிசோதனைகள், ஆன்லைன் முறையில் டாக்டர்களின் ஆலோசனை மற்றும் ஆரோக்கிய குறிப்பு அனைத்தையும் 1mg ஆப் வழங்குகிறது. இந்த ஆப் உங்களுடன் இருக்கும் ஒரு மொபைல் மருந்துக் கடை என்று சொல்லலாம். அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆர்டர் செய்யப்படும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடியும் உண்டு. தவிர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த மருத்துவர்கள் இதில் பதிவு செய்துள்ளதால், உங்களின் பிரச்னைக்கு ஏற்ப டாக்டரிடம் ஆலோசனை பெறலாம்.

Drugs.com

இது ஒரு மருத்துவ கைட் ஆப். வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான மருந்தினை பட்டியலிட்டு பெற்றுக் கொள்ளலாம். FDA குறித்த அறிவிப்புகள், உணவு ஒவ்வாமை மற்றும் மருத்துவ நிலை குறித்த பரஸ்பர கலந்துரையாடல்கள் அனைத்தும் ஆன்லைனில் செய்யமுடியும். மருத்துவ துறை சார்ந்த பிரச்னை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட தீர்வுண்டு. அவை கேள்வி பதிலாக இதில் பதிவு செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் நோய் குறித்த செய்திகளை தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் அதற்கான தீர்வினையும் பெறலாம். நிபுணர்களின் ஆலோசனையும் நேரடியாக பெறும் வசதியும் உள்ளது.

Klinikals

மருத்துவர்களின் ஆலோசனை, மருந்துகள் வாங்க, பரிசோதனை என அனைத்தும் இந்த ஆப் மூலம் பெறலாம். டாக்டர்களை தொலைபேசியிலோ அல்லது வீடியோ மூலம் தொடர்பு கொண்டு நம்முடைய பிரச்னைகளுக்கான  சிகிச்சை பெறலாம். டாக்டர் பரிந்துரைத்த மருந்தினை முதலில் பதிவு செய்ய வேண்டும். 24 மணி நேரத்திற்குள் நீங்க ஆர்டர் செய்த மருந்துகள் உங்களை நாடி வந்துவிடும். பரிசோதனை வீட்டிலேயே செய்வது மட்டுமல்லாமல், அதற்கான அறிக்கைகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வீட்டிற்கோ கொண்டு வந்து தரும் வசதியுள்ளது.

மேலும் உங்கள் பிரச்னைக்குரிய தீர்வினை ஆப் மூலம் நிபுணர்களை அணுகி பெறலாம். தேவைப்பட்டால் வீடியோ மூலமாகவும் மருத்துவர்களை அணுகலாம். எல்லாவற்றையும் விட உங்களின் மருத்துவம் குறித்த அறிக்கைகள் இந்த ஆப்பில் சேமிக்கப்படுவதால், அதனை எப்போது வேண்டும்  என்றாலும் டாக்டருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதில் மருந்து வாங்கினால் 20% தள்ளுபடி மட்டுமல்லாமல், கேஷ்பேக் வசதியும் உள்ளது.

கார்த்திக் ஷண்முகம்