மதுரை என்றாலே முக்தி !
மதுரை என்று சொன்னாலே நம்முடைய கவனத்தில் முதலில் வருவது கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோயில். இப்படி பெருமை வாய்ந்த ஊரில்தான் சிவபெருமான் 64 திருவிளையாடல் புரிந்தார். இதேபோல் உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், சித்திரைத் திருவிழா கொடியேற்றம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் பத்து நாட்களும், வீதியில் உலா வரும் அழகை கண்டு ரசிக்க கோடி கண்கள் வேண்டும்.
மீனாட்சி அம்மன் திக்விஜயம் செய்து வெற்றி பெற்று சிவபெருமானிடம் ஐக்கியமாகும் நாளை தான் சித்திரை திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள் முதல் பத்து நாட்கள் திருவிழா களைகட்டும். வைகை நதி : முன்பொரு காலத்தில் வைகை ஆறு இரு கரைகளிலும் தெளிந்த நீருடன் ஏராளமான மரங்கள் பூச்செடிகள் என இருந்தது.
சிவனால் உருவான ஆறு தான் இந்த வைகை ஆறு. சிவபெருமான் தன்னுடைய திருமணத்திற்கு வந்தவர்களின் தாகம் தீர்ப்பதற்காக, தன் சிரசில் இருந்து கங்கையை ஓடச் செய்தார். அது தான் வைகையாக மாறியது. வைகையில் குளித்தால் நம் பாவம் விலகும் என்பது நம்பிக்கை. தென்னக கங்கை என்று அழைக்கப்படும் வைகையைப் பற்றி பரிபாடலில் உள்ளது. மீனாட்சி அம்மனின் திருமண விழா : மதுரையில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும், மதுரைக்கு திருமணம் செய்து கொண்டு வரும் பெண்ணும், மீனாட்சி திருக்கல்யாணம் அன்று தங்களின் மாங்கல்ய சரடினை புதிதாக மாற்றிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தனது கணவன்மார்கள் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளும் பெறவேண்டி, அன்றைய தினத்தில் இந்த வழக்கத்தை அந்த ஊர் பெண்கள் அனைவரும் பல காலமாக பின்பற்றி வருகின்றனர்.
மீனாட்சி மதுரை திருத்தேர் : தமிழகத்திலுள்ள மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக விளங்கும் மதுரை மீனாட்சி தேர் திருவிழா அன்று மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்படும் மிக பிரமாண்டமான விழாவாகும்.
அழகர் வைகை எழுந்தருளுதல்: திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டதால் இவருடைய காலத்தில் தான், மதுரையை வளமாக மாற்றியமைத்தார். பல்வேறு திருப்பணிகள் செய்வித்தார். நாயக்கர் காலத்தில் இருந்துதான் இவ்விழா பெரிய விழாவாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதற்கு முன்பு வரை அழகர் திருவிழா, சித்திரை திருவிழா என்று வெவ்வேறு மாதங்கள் நடந்தது. நாயக்கர்கள் காலத்தில் தான் இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை அழகர் பார்க்க வருவதாகவும், அவர் வருவதற்குள், திருமணம் நடந்ததாகவும் அதனால் அழகர் கோபித்துக்கொண்டு ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. அழகர் வைகையில் இறங்குவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. மண்டுக முனிவர் சாபவிமோசனம் பெறுவதற்கு அழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள் புரிந்தார் என்கின்றனர். ஒவ்வொரு வருடம், அழகர் நீண்ட தொலைவில் இருந்து வெயிலில் வருவதால், அவரை குளிர்விக்க தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்பார்கள். சைவத்தையும் வைணவத்தையும் ஒன்று சேர்க்கின்ற விழாவாக அமைகிறது.
கள்ளழகரின் உடை : கள்ளழகர் உடுத்தும் உடைகள் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். தலைமை பட்டர் அப் பெட்டியில் உள்ள உடைகளை தேர்வு செய்ய, அதைத்தான் அவருக்கு அணிவிப்பார்கள். இது தான் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கும் வழக்கம். மேலும் அவர் அணியும் உடையின் நிறத்தைக் கொண்டு நாட்டுடைய வளத்தை பக்தர்கள் தீர்மானிப்பார்கள்.
உற்சவர் திருமேனி : இந்திர லோகத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட அபரஞ்சி என்ற தங்கத்தால் செய்யப்பட்ட உற்சவர் தான் கள்ளழகர். திருவனந்தபுரத்திலுள்ள உற்சவர் விஷ்ணு சிலையும் இதே தங்கத்தால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தங்க குதிரை வாகனத்தில் பேரழகுடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது விண்ணைக் கழிக்கும், கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தைக் கேட்டாலே, நாம் பிறவி புண்ணியம் அடைந்ததாக கருதப்படுகிறது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அன்று குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, காது குத்துவது போன்றவை நடைபெறும். சிறுவர்கள் அழகரின் காவல் தெய்வமான, பதினெட்டாம்படி கருப்பு வேஷம் தரித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ஜி.சிவக்குமார்
|