வீரமரணம் அடைந்த ஹெலின் போலக்



அரசுக்கு எதிராக துருக்கியைச் சேர்ந்த 28 வயதே நிரம்பிய இளம் இசைக் கலைஞர் ஹெலின் போலக்  288 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீர மரணம் அடைந்தார்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர் ஹெலின் போலக். அந்நாட்டின் மிகவும் பிரபலமான ‘க்ரூப் யோரம்’ என்ற இசைக் குழுவை நடத்தி வந்தார். இது துருக்கியில் 1985ம் ஆண்டு தொடங்கப்பட்ட இசைக் குழுவாகும். துருக்கியின் நாட்டுப்புற இசையினை அடிப்படையாகக் கொண்டு இக்குழுவானது பாடல்களை உருவாக்கி வந்தது.

அரசின் அநீதிக்கு எதிராக, அரசியல் ரீதியான கருத்துக்களையும், புரட்சிகரமான பாடல்களையும் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானது. தங்களின் 25ம் ஆண்டு இசை விழாவில் இந்தக் குழுவினருக்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இசை ரசிகர்கள் குவிந்தனர்.

அவர்கள் அரசின் அடக்கு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களின் உரிமையினை இசை வழியே எழுப்பினர். ‘க்ரூப் யோரம்’  இசைக் குழுவை கடந்த 2016ம் ஆண்டு துருக்கி அரசு அடக்குமுறையினை அரங்கேற்றி தடை செய்தது. அப்போது ஹெலின் போலக் உள்பட அந்தக் குழுவின் உறுப்பினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

தங்கள் இசைக் குழு மீதான தடையை நீக்கவும், கைது செய்யப்பட்ட தன்னுடைய இசைக் குழுவினரை விடுதலை செய்யக் கோரியும்,  ஹெலின் போலக் சாகும் வரையிலான தனது தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்து, 2019 ஜூன் மாதம் தொடங்கினார்.

கடந்தமாதம் ஹெலின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் துருக்கி அரசிடம் ஹெலின் உண்ணா நிலைப் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஹெலின் தனது பட்டினிப் போராட்டத்தை நிறுத்தாமல், கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாது என துருக்கி அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

கடந்த மார்ச் மாதம் கட்டாயமாக உணவு அருந்த வைக்க, ஹெலின் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் ஒத்துழைப்புத்தர மறுத்திருக்கிறார்.

கடந்த 288 நாட்களாகத் தொடர்ந்த இந்த உண்ணா நிலைப் போராட்டத்தால் உடல் நலிவுற்ற ஹெலின் போலக்  துருக்கியில் உள்ள இஸ்தான்பூலில் கடந்த மாதம் தன் இசை மூச்சை நிறுத்திக் கொண்டார்.

தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற துருக்கி நாட்டின் இசை தேவதை ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றது. அவரது ரசிகர்கள் மத்தியில் இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஹெலின் போலக் இறுதிச் சடங்கில் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் பங்கேற்று கண்ணீரால் விடைகொடுத்தனர்.

மகேஸ்வரி நாகராஜன்