இரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ



செல்லுலாய்ட் பெண்கள்-80

50களில் இந்தித் திரைஉலகில் கொடி கட்டிப் பறந்த நடிகை நர்கீஸ், சாயலில் அவரைப் போலவே இருந்ததால் ’தெலுங்குத் திரையுலகின் நர்கீஸ்’ என அறியப்பட்ட நடிகை ஜமுனா, 50களில் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் அறிமுகமாகி 60களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கதாநாயகியாகவும் மாறி பேரும் புகழும் பெற்ற ராஜஸ்ரீ என இவர்கள் மூவருக்கும் உள்ள ஒற்றுமை அவர்களின் நீள் வடிவ முகம். அதனாலேயே தனித்தன்மை வாழ்ந்த அழகுடன் அறியப்பட்டவர்கள். ராஜஸ்ரீ சிறு வயது முதலே நாட்டியத் திறனிலும் சிறந்து விளங்கியவர்.

ஆந்திரம் தந்த அழகு மகள்

நாடு விடுதலை பெறுவதற்கு முன்னதாகவே சென்னை ராஜதானியாக அறியப்பட்ட பகுதியில் தெலுங்கு மொழி பேசும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்த ஏலூரு ராஜஸ்ரீ பிறந்த ஊர். பின்னர் அது ஆந்திர மாநிலமாக மாறியது. ஆகஸ்ட் 31, 1945 ஆம் ஆண்டில் சூர்ய நாராயண ரெட்டி - லலிதா தம்பதியரின் மகளாகப் பிறந்தவர் அவர்.
பெற்றோர் ஆசையாகச் சூட்டிய பெயர் குஸும குமாரி. வீட்டில் அழைக்கும் செல்லப்பெயர் குமாரி. தந்தையாருக்கு ஊர் ஊருக்கு மாற்றலாகிச் செல்லும் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை என்பதால் பல ஊர்களில் பணிபுரிந்தவர். உடன் பிறந்தவர் ஒரே ஒரு மூத்த சகோதரி மட்டுமே. அக்கா, தங்கை இருவருக்கும் இடையே 21 வயது வித்தியாசம்.

குஸும குமாரி வயதில் அக்காளுக்குக் குழந்தைகள் இருந்தனர். தந்தையின் வயதான காலத்தில் பிறந்த மகள் அவர். தமிழகத்தின் மதராஸ் அக்காவின் புகுந்த வீடு. அதனால், அடிக்கடி பெற்றோருடன் அக்காவைப் பார்க்க மதராஸ் வந்து செல்வது சிறுமி குஸும குமாரிக்கு வழக்கமாக இருந்தது. சென்னை தியாகராய நகரில் அக்காள் குடியிருந்த அதே தெருவில் நடிகைகள் கிருஷ்ணகுமாரி, ஜமுனா, நடிகர் சலம் என அனைவருடைய வீடும் இருந்தது. சற்றே அருகாமையில் உள்ள தெருவில் என்.டி,ராமாராவ் வீடும் இருந்தது.

தந்தையாரின் மறைவுக்குப் பின் அக்காள் வீட்டிலேயே தங்கி, சென்னையில் படிப்பும் தொடர்ந்தது குஸும குமாரிக்கு. மேற்படி நடிக, நடிகையரின் வீடுகளுக்குக் கொலு பார்க்கப் போவது சிறு வயதில் வழக்கமாக இருந்தது. அத்துடன் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து சுற்றுலா வருபவர்கள் என்.டி.ராமாராவ் மற்றும் கிருஷ்ண குமாரி, ஜமுனா வீடுகளுக்கும் வந்து அவர்களையும் ‘தரிசித்து’ விட்டுப் போவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு முக்கிய காரணம் என்.டி.ராமாராவ் திரைப்படங்களில் ஏற்ற ராமன் வேடங்கள் அவரை ராமாவதாரமாகவே ரசிகர்களை நினைக்க வைத்ததுதான். சினிமாவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே இதை எல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ந்த அனுபவம் சிறுமியான குஸும குமாரிக்கு இருந்தது. தியாகராய நகரில் இருந்த ராஜகுமாரி தியேட்டரில் அடிக்கடி படங்கள் பார்த்து வளர்ந்தபோதும், ஒரு நாள் தானும் ஒரு திரைப்பட நடிகையாக ஆவோம் என அவர் கனவிலும் நினைத்ததில்லை.

ஆனால், நாட்டியத்தின் மீது சிறு வயதிலிருந்து அவருக்கும் அவருடைய அக்காவுக்கும் மிகுந்த ஆர்வம் இருந்ததால், திரைப்படங்களுக்கு நடனம் அமைத்து வந்த பிரபல நடனக் கலைஞர் கே.என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் குஸும குமாரி. ( நடிகை வைஜெயந்தி மாலா, ஸ்ரீவித்யா, சச்சு, ஜெயலலிதா மற்றும் பல நடிகைகள் அவருடைய மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.)

 பள்ளி நாடகங்களில் கிருஷ்ணன், மேனகை வேடங்களை ஏற்று நடனமாடிய அனுபவமும் சிறு வயதிலேயே அவருக்கு இருந்தது. ஆந்திராவிலிருந்து வந்த உறவினர்கள் சிலர் சினிமா ஷூட்டிங் பார்க்க விரும்பியதால், குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம் சிபாரிசு கடிதம் பெற்றுக்கொண்டு ஷூட்டிங் நடப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக உறவினர்களுடன் சிறுமி குஸும குமாரியும் ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்குச் சென்றார்.

வேடிக்கை பார்க்க வந்து நடிகையான அதிர்ஷ்டக்காரப் பெண் சினிமாவைத் திரையில் பார்த்து ரசித்த அந்தப் பத்து வயது சிறுமி பிரம்மாண்டமான தேவலோக செட், மற்றும் தெய்வ உருவங்களாகவும் மன்னர் காலத்து உடைகளுடனும் வலம் வந்து கொண்டிருந்த நடிக நடிகையரை விழிகள் விரிய பார்த்து வியந்து போனாள்.

ஆனால், அந்த அழகான சிறுமியை வேறு ஒரு ஜோடிக் கண்கள் ஆச்சரியத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அப்படத்தின் தயாரிப்பாளரும் ஸ்டுடியோ முதலாளியுமான ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்தான் அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரர். ஸ்கர்ட் அணிந்துகொண்டு ஸ்டுடியோவை சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமியின் நீள் வடிவ முகமும், அழகான கண்களும் அவரைக் கவர்ந்தன.

அந்தச் சிறுமியைத் தன் படத்துக்கு கதாநாயகி ஜமுனாவுக்கு ஜூனியராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அந்த நொடியே அவருக்குள் தோன்றியது. படத்தின் நடன இயக்குநரிடமும், கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஜமுனாவிடமும் அந்தச் சிறுமி குறித்துக் கருத்துக் கேட்டார். கதாநாயகி ஜமுனா தன்னைப் போல் நீள் வடிவ முகம் கொண்ட அந்தச் சிறுமி மிகப் பொருத்தமாக இருப்பாள் என்று அவரும் அதை ஆமோதித்தார். சிறுமி குஸும குமாரியின் தாயாருக்கோ தன் மகள் சினிமாவில் நடிப்பதில் சற்றும் விருப்பமில்லை. ஆனாலும் சிறுமியின் அதிர்ஷ்டம் வென்றது.

1956 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட ’நாகுல சவிதி’ படத்தில் கதாநாயகி ஜமுனாவுக்கு ஜூனியராக நடிக்க ஒப்பந்தமானார். இது தமிழிலும் ‘நாக தேவதை’ என மொழி மாற்றம் செய்யப்பட்டது.

கோயிலில் சிவலிங்கத்தின் முன்பாக ஏழெட்டு சிறுமிகளுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற காட்சியில் சிறுமி ராஜஸ்ரீ வளர்ந்து ஜமுனாவாக மாறுவதாக அந்தக் காட்சி முடிவுறும். ஆம், திரையில் தோன்றிய பின் குஸும குமாரி பெயரும் மாறிப் போனது. சிறு வேடம்தான், ஆனால், அந்தப் படத்தைத் தொடர்ந்து ’சின்னப் பெண், நல்ல முகபாவத்துடன், பிரமாதமாக ஆடுகிறாள்’ என்று ராஜஸ்ரீக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

அதனால் ஏ.வி.எம். படங்களில் தொடர்ந்து நடிப்பதற்காக மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் ராஜஸ்ரீ. அந்த மூன்றாண்டு இடைவெளியில் அங்கு அவருக்கு மொழிகள் கற்பிப்பது, நடனப் பயிற்சி என  எதிர்காலத்துக்குத் தேவையான நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

வைஜெயந்தி மாலா நடித்த தமிழ், இந்திப் படங்களான ‘பெண்’ மற்றும் ’சங்கம்’ படங்களின் வசனங்களைக் கொடுத்து மனப்பாடம் செய்து பேசச் சொல்வார்கள். அங்கு பெற்ற உருது மொழிப் பயிற்சி அவருக்கு பின்னர் இந்திப் படங்களில் நடிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது.

நடிகர் சித்தூர் நாகையாவின் கவனத்தையும் கவர்ந்தார் ராஜஸ்ரீ. அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘பக்த ராமதாஸு’ தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக அணுகியபோது, ராஜஸ்ரீ, ஏ.வி.எம். நிறுவனத்தில் மாத ஊதியம் பெறும் ஒப்பந்த நடிகையாக இருந்தார். ஆனாலும், ராஜஸ்ரீயின் குடும்பத்தார் ஒன்றரை ஆண்டுகளிலேயே ஒப்பந்தத்தை விலக்கிக் கொண்டு, நாகையாவின் படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளித்தனர். அந்தப் படமும் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ராஜஸ்ரீக்கு அளித்தது.

14 வயதில் கண்ணாம்பாவுக்கு ஜூனியராக நடித்திருந்தார். அதன் பிறகான வாய்ப்புகள், சிறு பெண் என்பதால் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தங்கை மற்றும் சிறு சிறு வேடங்களையே அளித்தன. தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்திருந்தாலும் முதன் முதலில் கதாநாயகி அந்தஸ்து அளித்தது மலையாளத் திரைப்படம் ‘பார்யா’. அதேபோல் தமிழிலும் தெலுங்கிலும் ராஜஸ்ரீ என அறியப்பட்டவர் மலையாளக் கரையோரம் கிரேஸி என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

மூன்று மொழிகளிலும் காதலிக்க நேரமில்லை செங்கமலத்தீவு, நிச்சய தாம்பூலம், பணம் பந்தியிலே போன்ற படங்களில் நடித்த போதும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பிரதான நாயகியாகும் வாய்ப்பு 1963ல் வெளியான ‘கலை அரசி’ படத்தில்தான் கிட்டியது. அதிலும் எம்.ஜி.ஆருடன். இப்படத்தின் பிரதான நாயகி பானுமதி. மற்றொரு நாயகி ராஜஸ்ரீ வேற்றுக் கிரகம், பறக்கும் தட்டு என்று அறிவியல்பூர்வமாகக் கதை சொல்லப்பட்ட முதல் தமிழ்ப்படமும் அதுவே.

வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த இளவரசியாக ராஜஸ்ரீ நடித்தார். தமிழில் பெரும்பாலும் இரண்டாவது நாயகியாகவே நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. தமிழில் முதன்மை நாயகியாக அவர் நடித்த படங்கள் குறைவுதான் என்றாலும் அவரது தாய் மொழியில் இல்லாத சிறப்பாக தமிழில் அதிகமான வண்ணப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு ராஜஸ்ரீக்குக் கிடைத்தது. தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரும்பாலும் கருப்பு வெள்ளைப் படங்களே.

பெரும் பாய்ச்சலாக ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் படமான, இன்று வரை நகைச்சுவைப் படங்களில் பேர் சொல்லும் படமாக விளங்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் அறிமுக நடிகரும் இளமையான கதாநாயகனுமான ரவிச்சந்திரனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. இன்றுவரை ‘நாளாம் நாளாம் திருநாளாம்’, ‘அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்’ பாடல்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், இதே படம் ‘ப்ரேமிஞ்ச்சு ச்சூடு’ என தெலுங்கிலும் ’பியார் கே ஜா’ என இந்தியிலும் எடுக்கப்பட்டபோதும் இதே கதாபாத்திரத்தில் ராஜஸ்ரீ நடித்தார் என்பது சிறப்பு. ஏனெனில் தெலுங்கும் இந்தியும் அவருக்கு சரளமாகப் பேசுவதற்கு வந்ததால் அவரை விட்டு விட இயக்குநர் ஸ்ரீதர் தயாராக இல்லை. தெலுங்கில் நாகேஸ்வர ராவ், இந்தியில் சசி கபூர் நாயகர்கள். இந்தியில் ராஜஸ்ரீக்கு முதல் படமும் இதுதான். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து, அதன் பிறகும் மூன்று இந்திப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் ராஜஸ்ரீக்குப் பெற்றுக் கொடுத்தது.

தன் ‘கலைக்கோயில்’ படத்திலும் இரண்டாவது நாயகியாக நடிக்க வைத்தார் ஸ்ரீதர். கிட்டத்தட்ட அதுவும் சிலப்பதிகாரத்தின் மாதவி கதாபாத்திரம் போல்தான் அமைந்தது. ஸ்ரீதர் படங்களின் பாடல்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தளவு கவித்துவமாகவும் அழகியலுடனும் அவை அமைந்திருக்கும். இப்படத்தில் ’தேவியர் இருவர் முருகனுக்கு’ என்று அற்புதமாக ஆடுவார் ராஜஸ்ரீ. ஆனால், படம் வெற்றி பெறாமல் போனது துயரம்.  

ராஜஸ்ரீக்கு நடிப்பதற்கான நல்ல வாய்ப்பை வழங்கிய மற்றொரு படம் ‘பூம்புகார்’. இதில் மாதவியாக நடித்தார். அற்புதமான மூன்று நடனங்களையும் ஆடினார்.   தர் படம் மட்டுமல்லாமல், கே.பாலச்சந்தர் படங்களிலும் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ’பாமா விஜயம்’, பூவா தலையா, அனுபவி ராஜா அனுபவி என தொடர்ந்து நகைச்சுவைப் படங்கள். இதில் தெலுங்கில் எடுக்கப்பட்ட படங்களில் எல்லாம் ராஜஸ்ரீயே தொடர்ந்தார்.

எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களின் நாயகியாக….தமிழ்ப் படங்களில் பிரதான நாயகியாக குறைவான படங்களில் மட்டுமே நடித்தவர். பெரும்பாலும் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்துள்ளார். ‘கலை அரசி’ படத்துக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து ‘குடியிருந்த கோயில்’ படத்தில் வழக்கம் போல் இரண்டாவது நாயகியாக நடித்தார் ஆனால், ‘துள்ளுவதோ இளமை’ பாடல் எப்போதும் அவரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். காளையை அடக்கும் வீரனும் அடங்க மறுத்துத் திமிறும் காளையும் என ஸ்பெயின் நாட்டுக் காளைச் சண்டையைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் பாடல் காட்சி அது.

’அடிமைப்பெண்’ படத்தில் குறைந்த நேரமே தோன்றினாலும் மறக்க முடியாத பாத்திரம் ஏற்றிருந்தார். இறுதியில் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்கும் இளவரசியாக ஜொலிப்பார். பட்டிக்காட்டுப் பொன்னையாவிலும் அதே நிலைதான். ’நாளை நமதே’ படத்திலோ கௌரவ வேடம்.

சிவாஜி கணேசன் படங்களான ’நீலவானம்’ படத்தின் துவக்கத்திலேயே வருபவர் ராஜஸ்ரீ. சிவாஜி கணேசனுக்குக் காதலியாக நடிப்பதுடன் ‘ஓ லக்ஷ்மி.. ஓ.. ஷீலா..ஓ… மாலா..’, ‘ஓ.. லிட்டில் ஃபிளவர்’ என இரு டூயட் பாடல்கள் வேறு. இவர்தான் முதன்மை நாயகி என ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கும்போது கதையின் நடுவே தேவிகா வந்து, கதாநாயகி வேடத்தைக் கைப்பற்றி விட, வழக்கம்போல் இரண்டாமிடம் ராஜஸ்ரீக்கு. ‘சொர்க்கம்’ படத்திலும் இரண்டாவது நாயகியே.

தமிழின் முதன்மையான நாயகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்கள் தவிர இரண்டாம் கட்ட நாயகர்களான எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என அனைவருடனும் இணைந்து நடித்தவர். தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, மலையாளத்தில் சத்யன், பிரேம் நஸீர், கன்னடத்தில் ராஜ்குமார், உதயகுமார் என அனைவருடனும் இணைந்து நடித்தவர்.

தெலுங்குத் திரையுலகால் மறக்கப்பட்ட தாரகைராஜஸ்ரீயைப் பொறுத்தவரை முதன்மைக் கதாநாயகி வேடம் தான் வேண்டுமென்று ஒருபோதும் அவர் பிடிவாதம் பிடிக்கவில்லை. இரண்டாவது நாயகி, கவர்ச்சிகரமான நாயகி, நகைச்சுவை நாயகி என எல்லா வேடங்களையும் விரும்பி ஏற்று நடித்தார்.
தெலுங்குப் படங்களிலும் விட்டலாச்சார்யா எடுத்த மாயாஜாலப் படங்களின் நாயகியாகப் பல படங்களில் என்.டி.ராமாராவ், காந்தாராவ் போன்ற நாயகர்களுக்கு ஜோடியாகவும் அதிகப் படங்களில் நடித்தவர் ராஜஸ்ரீ.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 300 படங்கள் நடித்துக் குவித்தவர். 170க்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களில் அவர் நடித்திருந்தபோதும், தெலுங்குத் திரையுலகம் அவருக்கு விருது எதையும் வழங்கவில்லை என்ற வருத்தமும் ஆதங்கமும் ராஜஸ்ரீக்கு இருக்கிறது. அவர் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஓய்வென்பதே அறியாதவராக தொடர்ச்சியாக நடித்தவர்,

பிறந்தநாள் விழாவில் உருவான திருமண பந்தம்பிறந்தநாள் விழா ஒன்றில் ராஜயைப் பார்த்த தோட்ட பாஞ்ச்சஜன்யம் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிப் பெண் கேட்டு 1977ல் திருமணம் செய்து கொண்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி அவர். வெங்கல் ராவ் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர்.

பின்னர் என்.டி.ராமாராவ் ஆட்சியேற்ற பின் எதிர்க்கட்சியாகவும் இருந்தவர் பாஞ்ச்சஜன்யம். திருமணத்துக்குப் பின் நடிப்பை முற்றிலும் துறந்து முழு நேர இல்லத்தரசியாக மட்டுமே கணவர், குடும்பம் என கவனத்தை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் ராஜஸ்ரீ. 1979ல் மகன் பிறந்த பின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

ஆனால், 1983ல் மாரடைப்பால் தோட்ட பாஞ்ச்சஜன்யம் காலமானார். அதன் பின் முப்பதாண்டு காலம் ராஜஸ்ரீ எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே தெரியாமல் தன் மகனுக்காக மட்டுமே வாழ்ந்தார். திருமணத்துக்குப் பின் மீண்டும் அவர் நடிக்கவே இல்லை. முற்றிலும் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

மகனின் படிப்புக்காக தன் கவனம் முழுவதும் அதிலேயே செலுத்தினார். சிறிது காலம் விசாகப் பட்டினம், பின்னர் நீண்ட காலத்துக்குப் பின் சென்னை வாசம் என இருப்பவர். மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்கான அழைப்புகளும் வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்த நிலையிலும் அவற்றை எல்லாம் ராஜஸ்ரீ மறுத்து விட்டார்.

பெற்ற விருதுகள்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கலைமாமணி விருது ராஜஸ்ரீக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்பதை அறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதன் பிறகே அவருக்கு 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதேபோல் 2004 ஆம் ஆண்டில் ‘எம்.ஜி.ஆர்’ பெயரில் தமிழக அரசின் விருது ராஜஸ்ரீயின் கலைச்சேவை யைப் பாராட்டி வழங்கப்பட்டதைப் பெருமையுடன் பலமுறை நினைவு கூர்ந்து பேசியுள்ளார் ராஜஸ்ரீ.

தமிழகத்தில் உள்ள விண்டேஜ் ஹெரிடேஜ் அமைப்பு பழம்பெரும் நடிகை கண்ணாம்பா பெயரில் ராஜஸ்ரீக்கு விருது வழங்கி கௌரவித்தது.

ராஜஸ்ரீ நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

நாக தேவதை, பெற்றவள் கண்ட பெருவாழ்வு, பக்த சபரி, பணம் பந்தியிலே, தட்ச யக்ஞம், தென்றல் வீசும், செங்கமலத்தீவு, நிச்சய தாம்பூலம், குபேரத்தீவு, கலை அரசி, மந்திரி குமாரன், யாருக்கு சொந்தம், காட்டு மைனா, மாங்கல்யம், காதலிக்க நேரமில்லை, பூம்புகார், நானும் மனிதன்தான், நல்வரவு, மகளே உன் சமத்து, அம்மா எங்கே?, கலைக்கோவில், பூமாலை, வழிகாட்டி, நீல வானம், தாய்க்குத் தலைமகன், பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, அனுபவம் புதுமை, செல்வ மகள், கல்லும் கனியாகும், நீயும் நானும், டெல்லி மாப்பிள்ளை, சிரித்த முகம், குடியிருந்த கோயில், உலகம் இவ்வளவுதான், பூவா தலையா?, அடிமைப் பெண், சிங்கப்பூர் சீமான், குமார சம்பவம், நம்ம வீட்டு தெய்வம், சொர்க்கம், இரு துருவம், பத்தாம்பசலி, நீதி தேவன், பொய் சொல்லாதே, பாட்டொன்று கேட்டேன், ஆதி பராசக்தி, யானை வளர்த்த வானம்பாடி மகன், எல்லைக்கோடு, ஸ்கூல் மாஸ்டர், பட்டிக்காட்டுப் பொன்னையா, பத்து மாத பந்தம், நேற்று இன்று நாளை, அக்கரைப்பச்சை, நாளை நமதே, சுவாமி அய்யப்பன், அமுதா, வீடு வரை உறவு, இரவு 12 மணி.

(ரசிப்போம்!)