கிச்சன் டைரீஸ் - டயட் மேனியாபலவகையான டயட்களை ஒவ்வொரு இதழிலும் பார்த்து வந்தோம். இதுவரை பார்த்த இனி மேல் பார்க்க போகும் டயட்கள் அத்தனையையும் ஒரு பருந்துப் பார்வை பார்த்துவிடுவோம். கலோரி மற்றும் எடைக்குறைப்பு டயட்கள், க்ராஷ் டயட் எனப்படும் துரித எடையிழப்பு டயட்கள், டீடாக்ஸ் எனப்படும் நச்சுநீக்க டயட்கள், மருத்துவக் காரணங்களுக்கான டயட்கள், உடல் பருமன் டயட்கள், சைவ டயட்கள், நம்பிக்கை சார்ந்த டயட்கள் என பலவிதமான டயட்கள் உலகம் முழுதும் உள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் பலவிதமான டயட்முறைகள் இருக்கின்றன.

அது குறித்து மிக எளிமையாக இனி பார்ப்போம். முதலில் கலோரி மற்றும் எடைக்குறைப்பு டயட்கள். இதில் லோ கலோரி டயட், அதிக லோ கலோரி டயட், லோ கார்போஹைட்ரேட் டயட், லோ ஃபேட் டயட் என பலவகையான துணைப்பிரிவுகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் விதவிதமான டயட்டுகள் இருக்கின்றன. முதலில் லோ கலோரி டயட்டில் என்னென டயட்கள் உள்ளன என்று பார்ப்போம்.

5:2 டயட்: இண்டர்மிட்டண்ட் டயட் என்று நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்த டயட்தான் இது. மைக்கில் மோஸ்லே என்பவர் 2012ல் உருவாக்கிய இதில் உணவு உண்ணும் நேரங்களுக்கான இடைவெளியை அதிகரித்துக்கொண்டே போக வேண்டும்.இண்டர்மிடண்ட் விரதம்: இதை வாரியர் டயட் என்று பார்த்தோம். ஒரு உணவு இடைவெளிக்கும் இன்னொரு உணவு இடைவெளிக்குமான நேரத்தை அதிகரிப்பதுதான் இதுவும்.

பாடி ஃபார் லைஃப்: உடலின் கலோரிகளை கட்டுப்படுத்தும் இந்த டயட் ஒரு தனியார் அமைப்பால் நெறிப்படுத்தப்படுகிறது. பனிரெண்டு வாரங்கள் செயல்திட்டம் கொண்ட டயட் இது.இ டயட்: இதுவும் ஒருவகை கலோரி கட்டுப்பாட்டு டயட்தான். பசி நேரங்களில் கொழுப்புச்சத்து குறைவான பண்டங்களை, மிட்டாய்களை சாப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டது. கார்ப்போவை தவிர்ப்பதுதான் இதன் நோக்கம்.

ஹேக்கர்ஸ் டயட்: ஜான் வாக்கர் என்பவர் உருவாக்கிய கலோரியைக் கட்டுப்படுத்தும் டயட் இது. இவர் தன்னுடைய நூலில் கலோரியை கவனிப்பதன் மூலம் எடை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.நியூட்ரிசிஸ்டம் டயட்: அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட நியூட்ரிசிஸ்டம் டயட். தனியார் அமைப்பினரால் கட்டுப்படுத்தப்படுகிறது. கலோரி குறைந்த உணவுகள், குறிப்பிட்ட விகிதத்தில் அமைந்த புரதங்கள், கொழுப்புகள் ஆகியவை இவர்கள் செயல்திட்டம்.

வெயிட் வாட்சர்ஸ் டயட்: இதைப் பற்றியும் நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். தினசரி உண்ணும் உணவுக்கு ஏற்ப பாயிண்டுகள் வழங்கப்பட்டு, இதன் பயனாளிகள் மதிப்பிடப்படுவார்கள். குறைவான மதிப்பெண் எடுப்பவர்கள் அதாவது இவர்கள் கணிப்பின்படியான ஹெல்த்தியான உணவுப் பழக்கம் மேற்கொள்பவர்களுக்கு எடை குறையும் வாய்ப்பு அதிகம்.அடுத்த இதழில் இந்த லோ கலோரி- லோ கார்போ டயட் தொடர்பான மேலும் சில டயட் வகைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

எக்ஸ்பர்ட் விசிட்

நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் உணவுகள் எதுவென்று இந்தியாவின் முக்கியமான உணவியல் நிபுணர் பூஜா மகிஜா தரும் டிப்ஸ் இதோ…

பூண்டு

பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

இஞ்சி

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

தயிர்

தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமான செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

பார்லி, ஓட்ஸ்

பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா & க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காளான்

உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

பழங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப் பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.

கீரைகள், காய்கறிகள்

பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

சர்விங் சைஸ் என்பது என்ன?

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கும்போது அதில் சர்விங் என்று ஓர் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். பலருக்கும் இது என்ன என்று சரியாகப் புரிவதில்லை. சிலர், அந்த மொத்த பாக்கெட்டிலும் உள்ள உணவின் அளவை ஒரு சர்விங் எனப் புரிந்துகொள்கிறார்கள். உண்மையில் இது என்ன என்று பார்ப்போம்.

ஒவ்வொரு பொருளிலும் அதன் சர்விங் சைஸ் எவ்வளவு என்றும் உணவு எத்தனை சர்விங்ஸ் வரும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். சர்விங் சைஸ் என்பது கப்கள், எண்ணிக்கைகளில் (Cups and numbers) இருக்கும். அதனைத் தொடர்ந்து எத்தனை கிராம் அல்லது லிட்டர் என மெட்ரிக் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, மக்காச்சோள பாக்கெட் ஒன்றில் ‘சர்விங் சைஸ் ஒன் கப் (228 கி) - சர்விங்ஸ் பெர் கன்டெய்னர் 2’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தால் அந்த பாக்கெட் முழுதையும் உண்டால் நீங்கள் இரண்டு கப் மக்காச்சோளம் உண்டதாகப் பொருள். எனவே, அதில் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து விகிதங்கள், கலோரிகளை அனைத்தையும் இரண்டு மடங்காக உட்கொண்டிருப்பீர்கள்.

சர்விங் சைஸின் அளவு என்பது அந்த உணவின் கலோரிகள், ஊட்டச்சத்து மதிப்பு போன்றவற்றையும் தீர்மானிக்கும். எனவே, ஒரு பொருளை உண்ணும் முன் “எவ்வளவு சர்விங்ஸ் நான் எடுத்துக்கொள்ளபோகிறேன்” என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு சர்விங் என்பதில் எத்தனை கலோரி, எத்தனை கொழுப்பு என்பது அந்த உணவுப் பொருளுக்குத் தக மாறுபட்டிருக்கும். மேலும், ஒரே பாக்கெட்டில் இரண்டு அல்லது மூன்று சர்விங் உணவுகள் இருக்கக்கூடும். ஆனால், அதில் ஒரு சர்விங்குக்கான ஊட்டச்சத்து மதிப்புகளே குறிப்பிட்டிருக்கும். எனவே, எத்தனை சர்விங் என்பதை நன்கு கவனித்து வாங்குங்கள்.

உணவு விதி #45

தயிரைத் தவிர்க்காதீர்கள். இது நம் நிலத்தைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான உணவு விதிதான். நம்மை போன்ற மிதவெப்ப மண்டல நாடுகளில் நம் வயிற்றில் எண்ணற்ற பாக்டீரியா வாழ வாய்ப்பு அதிகம். தயிரில் ப்ரோபயாட்டிக் எனும் நல்ல பாக்டீரியாவுக்கான சத்துப்பொருள்
நிறைந்துள்ளன. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவை வளர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தைச் சேர்க்கிறது. எனவே, தினசரி உணவில் தயிர் இருக்கட்டும்.

ஜிலேபி வரலாறு

ஜிலேபியின் ருசிக்கு அடிமையாகாதவர்கள் யார்? குழந்தைகள் முதல் சர்க்கரை நிறைந்த முதியோர் வரை ஜிலேபி என்றாலே அனைவருக்கும் நாவில் நீர் ஊறும். ஜிலேபி போலவே ஜிலேபியின் வரலாறும் சுவையானது. ஜிலேபியானது மேற்கு ஆசியாவில் இருந்த இதை ஒத்த ஒரு உணவு வகையில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. ஜிலேபி என்ற பெயரானது ஹாப்ஸன்-ஜாப்ஸனின் கூற்றுப்படி, அரபு மொழிச் சொல்லான ஜுலாபியா (Zulabiya) அல்லது பாரசீக மொழிச் சொல்லான சோல்பியா என்பதில் இருந்து பெறப்பட்டது.

இவை ஜிலேபியை ஒத்த உணவின் பெயராகும். மேற்கு ஆசியாவில் உள்ள கிருத்தவ சமூகங்களில், இது திஹோனி (மூவிராசாக்கள் திருநாள்) விருந்தில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் இலவங்கப் பட்டையுடன் வழங்கப்படுகிறது. ஈரானில், இது சோல்பியா என அறியப்படுகிறது, ரமலானில் பாரம்பரியமாக ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது.

10 ஆம் நூற்றாண்டு சமையல் நூல் ஜுலாபியா (zulabiya) செய்ய பல சமையல் குறிப்புகளைக் கொடுக்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் பல இனிப்பு  சமையல் குறிப்புகள் உள்ளன. அதில்  முஹம்மது பின் ஹசன் அல் பாக்தாடியில் சமையல் நூலில் உள்ளதை இந்த உணவாக பெரும்பாலும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த உணவானது மத்தியகால இந்தியாவுக்கு பாரசீக மொழி பேசும் துருக்கிய படையெடுப்பாளர்கள் கொண்டு வந்தனர். 15-ம் நூற்றாண்டில் இந்தியாவில், ஜிலேபியானது குண்டலிகா அல்லது ஜலவல்லிகா என அறியப்பட்டது.  1450ல் சைன எழுத்தாளரான ஜைனசுரா இயற்றிய பிரியம்கார் நாரகதா என்ற நூலில் பணக்கார வியாபாரிகளால் நடத்தப்பட்ட ஓர் இரவு விருந்து நிகழ்ச்சியில் ஜால்பிஸை இடம்பெற்றது குறிப்பிடுகிறது. கி.பி. 1600 க்கு முந்தைய சமஸ்கிருத நூலான குன்யாகுநாதோபினி, உணவுப் பொருள்கள் மற்றும் செய்முறையை பட்டியலிடுகிறது; அதில் நவீன ஜிலேபியை தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஃபுட் மித்ஸ்

சுகர் ஃப்ரீ இனிப்புகள் சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதிப்பில்லை என்கிற ஒரு நம்பிக்கை இங்கு இருக்கிறது. அதில் உண்மையில்லை. பொதுவாக, நாம் சர்க்கரை என்று சொல்லும் உணவுப்பொருளில் சுக்ரோஸ் என்ற சத்து உள்ளது. சுகர் ஃப்ரீ இனிப்பில் இதற்கு பதிலாக லீவ்லோஸ் அல்லது ஃப்ரக்டோஸ் உள்ளது.

இந்த இனிப்பு ரத்தத்தில் கலக்கும் க்ளைசெமிக் விகிதம் சுக்ரோஸ் விகிதத்தைவிட குறைவு என்பதால் ஒப்பீட்டளவில் இதனை உண்ணலாம் என்கிறார்களே தவிரவும் இதிலும் சர்க்கரைச் சத்து இருக்கவே இருக்கிறது. எனவே, எப்போதாவது அளவாக இதனைச் சாப்பிடுவதுதான் நல்லதே அன்றியும் சுகர் ஃப்ரீ இனிப்பை எப்போதும் சாப்பிட்டுக்கொண்டிருப்பது நிச்சயம் நல்லதில்லை.

இளங்கோ கிருஷ்ணன்