அந்த ஒரு நாளுக்காக காத்திருப்பேன்! நடிகர் அபி சரவணன்



‘‘என்னுடைய முகநூல் மற்றும் வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே போதும் நான் அம்மாவின் கைமணத்தை ரசித்து சுவைத்துக் கொண்டு இருக்கிறேன்னு தெரியும்’’ என்று பேசத் துவங்கினார் நடிகர் அபி சரவணன்.

‘‘என்னுடைய சொந்த ஊர் மதுரை மாட்டுத்தாவணி. மதுரைக்கு உணவு ஹப்புன்னு மற்றொரு பெயர் உண்டு. அங்கு சாதாரண சாலையோரக் கடையிலும் சாப்பாடு மிகவும் சுவையாக இருக்கும். அப்படி இருக்கும் போது, எங்க வீட்டிலும் அம்மாவும் சரி, பாட்டியும் சரி ரொம்ப நல்லா சமைப்பாங்க. அதுவும் பாட்டி சொல்லவே வேண்டாம். அவங்க செய்யும் ஒவ்வொரு உணவும் சுவையாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும். நான் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தால் பாட்டி ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் வகை செய்து வச்சிருப்பாங்க.

எல்லாமே பாரம்பரிய முறையில் தான் அவங்க சமைப்பாங்க. பால்கொழுக்கட்டை, பணியாரம், சுண்டல்னு... ஏதாவது ஒரு உணவு இருக்கும். அதை சாப்பிட்ட பிறகுதான் அவங்க என்னை வெளியே விளையாட விடுவாங்க. அது மட்டும் இல்லாமல் வாரம் ஒரு முறை வேப்பம்பூவை அரைச்சு சாறு எடுத்து சங்கில், மூக்கை பிடிச்சு ஊத்திவிடுவாங்க.

நான் விளையாடிக் கொண்டு இருந்தாலும், எங்க இதை பார்த்தா ஓடிடுவேன்னு மறைச்சு வச்சு ஊத்திவிடுவாங்க. எனக்கு அப்ப தெரியல அதனுடைய மகிமை. இப்பத்தான் புரியுது. என்னுடைய உடலில் உள்ள எதிர்ப்பு சக்திக்கு அவங்க அப்ப கொடுத்த அந்த மருந்து தான் காரணம். இது ஒரு பக்கம் இருக்க அந்த காலத்தில் எல்லாம் பர்கர், சாண்ட்விச் எல்லாம் கிடையாது. எல்லாமே வீட்டில் செய்யப்படும் உணவு தான் ஸ்னாக்சா தருவாங்க. அவங்க கொள்ளு மற்றும் எள்ளு சேர்த்து ஒரு மாவு உருண்டை போல செய்வாங்க.

அதை ஒரு பாக்கெட்டில் போட்டு தருவாங்க. பள்ளிக்கு போகும் போது சாப்பிட்டுக் கொண்டே போவேன். அது தவிர அவங்க பலவிதமான களி கிண்டி தருவாங்க. வெந்தய களி, உளுந்தக்களின்னு செய்து தருவாங்க. அதுவும் கூட வெல்லம், நல்லெண்ணை சேர்த்து சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும்’’ என்றவர் ஓட்டலுக்கு சென்று பரோட்டா சாப்பிடாமல் வந்துள்ளார்.

‘‘எங்க அம்மா நான் பள்ளி படிக்கும் காலத்தில் எப்போதுமே தயிர்சாதம் தான் மதிய உணவா தருவாங்க. அதற்கான சைட் டிஷ் மட்டும் தினமும் மாறி மாறி தருவாங்க. ஒரு நாள் கேரட் முட்டைகோஸ் பொரியல், உருளை வறுவல், சுண்டல்ன்னு மாத்தி மாத்தி தருவாங்க. அதாவது திங்கட்கிழமைன்னா கேரட் பொரியல், புதன் என்றால் முட்டை பெப்பர் மசாலா, வியாழன்னா சுண்டல்ன்னு ஒரு ஷெட்யூல் போட்டு தான் செய்து தருவாங்க. அப்பெல்லாம் அலுமினிய டப்பாவில் தான் சாப்பாடு கட்டி தருவாங்க. ஒரு நாள் அப்படி கட்டித்தரும் போது, அதில் இருந்த தயிர் சாதம் எல்லாம் வழிந்து என் புத்தகப்பையில் உள்ள புத்தகம் மற்றும் பை எல்லாம் நனைந்துவிட்டது.

அதனால் எனக்கு ஒரே கோபமாயிடுச்சு. என் புத்தகம் எல்லாம் நாசமாகிவிட்டதுன்னு. அந்த கோவத்தில் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சண்டைப் போட்டேன். எப்போதும் தயிர் சாதம் கட்டித் தரீங்க... அதனால் என்னுடைய பை எல்லாம் பாழாகிடுச்சு. ஏன் வேற சாதம் எல்லாம் கட்டித் தரமாட்டீங்களான்னு சண்டைப் போட்டேன். அப்பா வந்ததும் அம்மா இப்படி செய்திட்டாங்கன்னு சொல்லி அழுதேன். அவர் என்னை சமாதானம் செய்ய ஓட்டலுக்கு அழைத்து சென்றார்.

எங்க வீட்டு அருகில் இருக்கும் சின்ன ஓட்டலுக்கு சென்றோம். அது தான் முதல் முறையா நான் ஓட்டலுக்கு சென்றது. அங்க சாப்பிட எல்லாம் உட்கார்ந்துவிட்டோம். அப்போது, தோசைக்கல்லில் பரோட்டா போடுவதற்கு முன் அதை துடைப்பத்தால் துடைச்சாங்க. அதை பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்த வயசில் எனக்கு தெரியாது. இதற்கென தனி துடைப்பம் வச்சிருப்பாங்கன்னு. உடனே அப்பாவிடம் வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லி கூட்டிக்கொண்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதேன்.

அதன் பிறகு அம்மா தயிர் சாதத்தை கடுகு, கேரட் துருவல், முந்திரி, மாதுளை எல்லாம் போட்டு தாளித்து தர ஆரம்பிச்சாங்க. காரணம் அப்படி செய்தால், சாதம் கெட்டியாக இருக்கும். வழியவும் வழியாது. அம்மா செய்யும் கீரைக்கு எங்க வகுப்பு மாணவர்கள் எல்லாரும் அடிமைன்னு தான் சொல்லணும். அம்மா தினமும் ஏதாவது ஒரு கீரை சமைப்பதை வழக்கமா கொண்டு இருந்தாங்க. காரணம் அம்மா தான் பள்ளிக்கு மதிய உணவு கொண்டு வருவாங்க.

பள்ளியில் உள்அரங்கத்தில் இருக்கும் மேடை மேல் தான் நாங்க சாப்பிடுவோம். அப்போது அவங்க எனக்கு மட்டும் இல்லாமல் மத்தவங்களுக்கும் ஒரு டப்பாவில் தனியா கீரை செய்து கொண்டு வருவாங்க. இவங்க கீரை ஸ்பெலிஸ்ட் என்றால் என் பாட்டி பச்சரிசி சாதம்ன்னு ஒன்ணு செய்வாங்க. சாதாரண பச்சரிசி சாதம் தான் வடிச்சது என்றாலும், அதற்கு பூண்டு போட்ட வத்தக்குழம்பு, துவையல், கொத்தரவத்தல், மோர் மிளகாய்ன்னு நான்கைந்து சைட்டிஷ் வைப்பாங்க. அவ்வளவு நல்லா இருக்கும்’’ என்றவர் வெளியூருக்கு சென்றாலும் அம்மா, பாட்டி சாப்பாட்டுக்காக வார நாட்களில் ஊருக்கு வந்திடுவாராம்.

‘‘பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு டிப்ளமோ படிச்சேன். அதன் பிறகு ஐ.டி யும் முடிச்சேன். இரண்டுமே மதுரை என்பதால் எனக்கு உணவு பற்றிய கவலை ஏற்பட்டதில்லை. அதன் பிறகு துபாயில் இரண்டு மாதம் பயிற்சிக்காக சென்றேன். பிறகு பெங்களூரில் எனக்கு வேலை கிடைச்சது. அங்கு என்னுடைய பெரிய கவலையே சாப்பாடா தான் இருந்தது. அவங்க சாம்பாரில் கூட சர்க்கரை சேர்ப்பாங்க. அது எனக்கு செட்டே ஆகல. அதனால எப்ப ஞாயிற்றுக் கிழமை வரும்ன்னு காத்திருந்து இங்கு மதுரைக்கு வருவேன்.

இங்கு வந்தவுடன் அன்று முழுதும் சாப்பிடுவது தான் என் வேலையே. காலை எழுந்ததும் இட்லி மட்டன் குழம்பு, மறுபடியும் 11 மணிக்கு மட்டன் சூப், பிறகு எல்லாரும் சேர்ந்து அமர்ந்து ஒரு முழு அசைவ உணவினை சாப்பிடுவோம். அதுவும் அம்மா சிக்கன் மசாலான்னு செய்வாங்க, அவ்வளவு நல்லா இருக்கும். மறுபடியும் மாலையில் காபி மற்றும் ஸ்னாக்ஸ் செய்து தருவாங்க. இரவு சாப்பிட்டுவிட்டு கிளம்பும் போது ரொம்பவே சங்கடமா இருக்கும். அந்த வாரத்தில் ஒரு நாள் ஞாயிறு எனக்கு சொர்க்கமா தெரியும்’’ என்றவர் அதன் பிறகு சினிமா மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் சென்னைக்கு வந்துவிட்டார்.

‘‘சென்னையில் என்னுடையது பேச்சிலர் வாழ்க்கை என்றாலும், சினிமா என்பதால் அதற்கென சிறப்பு டயட் இருக்க வேண்டும் என்பதால் நான் ரொம்பவே டயட் கான்சியஸ் ஆயிட்டேன். ஒரு நாள் முழுக்க பாதி வேகவைத்த காய்கறியும், மறுநாள் பழங்கள் மற்றும் பழச்சாறுகள்னு தான் சாப்பிட ஆரம்பிச்சேன். மைதா சார்ந்த உணவினை முழுக்க தவிர்த்துவிட்டேன். அதற்கு பதில் பரோட்டா என்றாலும் கோதுமை பரோட்டான்னு மாறினேன். மேலும் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து சாப்பிட பழகினேன்.

இதில் எனக்கு எப்போதும் பிடிச்ச உணவுன்னா கேழ்வரகு கூழ் தான். இங்க எங்கு கிடைச்சாலும் நான் அங்க போய் சாப்பிடுவேன். சின்ன வயசில் பாட்டி வீட்டில் வச்சு தருவாங்க. கூழை விட அதற்கு அவங்க வைக்கும் சைட் டிஷ் தான் அமர்க்களமா இருக்கும். மாங்காயை பொடியா நறுக்கி மிளகாய் தூள், உப்பு சேர்த்து தருவாங்க. அப்பறம் கொத்தரவத்திலும் வைப்பாங்க. சில சமயம் மோர் மிளகாயும் இருக்கும். கருவாட்டு குழம்பு, பூண்டு குழம்புன்னு அந்த ஒரு பதார்த்தத்திற்கு மட்டுமே நான்கு ஐந்து சைட்டிஷ் இருக்கும்’’ என்றவர் இன்று வரை பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிட்டது இல்லையாம்.

‘‘டயட் என்று சொல்வதை விட ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்பதில் கவனமா இருக்கேன். ஒரு முறை துபாய் போன போது அங்கு சாதம் வடிச்ச கஞ்சின்னு வச்சிருந்தாங்க. அதன் விலை எட்டு தினார் என்று சொன்னாங்க. நாம அன்றாடம் வீட்டில் வடிகட்டும் கஞ்சிக்கு இவ்வளவு விலையான்னு யோசித்தேன். அப்போது தான் புரிந்தது, நம் முன்னோர்கள் எல்லா உணவையும் அறிவியல் ரீதியாகத்தான் அணுகி இருக்காங்கன்னு. நாம தான் அதை பற்றி தெரியாமல் இருக்கிறோம்.

மேலும் எந்த உணவு சாப்பிட்டாலும் அல்லது எங்கு சென்றாலும், நான் சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமா வைத்துக் கொண்டு இருக்கிறேன். சுடு தண்ணீர் நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. நாம் சாப்பிடும் உணவினை எளிதில் ஜீரணமாக்கும் சக்தி சுடு தண்ணீருக்கு உண்டு. கேரளாவில் எந்த ஓட்டலுக்கு சென்றாலும் சீரகம் போட்ட சுடு தண்ணீர் தான் தராங்க.

இங்க கேட்டா தான் தராங்க. அந்த பழக்கத்தையும் இங்கு கொண்டு வரலாம்.ஒரு முறை கல்லூரி நிகழ்ச்சிக்காக சென்று இருந்தேன். அங்கு என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்ட போது ஹாட் வாட்டர்ன்னு தான் சொன்னேன். அங்க இருந்த மாணவி எனக்கு ஹாட் வாட்டர்ன்னே பெயர் வச்சுட்டா. அதே போல் பள்ளியிலும் எனக்கு டிபன் பாக்ஸ் ஓப்பனர்ன்னு பெயர். கடைசி பெஞ்சில் அமர்ந்து இருப்போம், எங்களின் வேலையே எல்லாருடைய டிபன் பாக்சையும் பதம் பார்ப்பது தான்’’ என்றார் நடிகர் அபி சரவணன்.

சிக்கன் சூப்

முதலில் நான்கு துண்டு சிக்கனை நன்கு கழுவிக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். பிறகு வெந்த சிக்கனை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும். ஏற்கனவே வேவைத்த தண்ணீரில் தேவைக்கு ஏற்ப உப்பு, மிளகுத்தூள், சிறதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். அதில் வேகவைத்துள்ள சிக்கன் சேர்த்து ஒருகொதி வந்தவுடன் இறக்கவும். தேவைப்பட்டால் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியில் இறக்கும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

ப்ரியா