கெட்டில்பெல் விளையாடலாம் தேசிய அளவில் தங்கம் வெல்லலாம்!கலை எப்படி எல்லோருக்கும் பொதுவானதாக உள்ளதோ அதே போல் விளையாட்டும் அனைவருக்குமானது. ஆனால், இங்கு ஒரு சில விளையாட்டுகள் எல்லோராலும் விளையாட முடிவதில்லை. குடும்ப பின்னணி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து போன்றவை, திறமை இருந்தாலும் அடிப்படை காரணிகளாகின்றன. இதில் ஒரு சிலரே மோதி முன்னோக்கி வருகின்றனர். அதில் ஒருவராக இன்று தேசிய அளவிலான கெட்டில் பெல் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா.

“என்னுடைய  சொந்த ஊர் திருநெல்வேலி. பி.இ மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து, அந்த துறையிலேயே ஒரு ஆறுமாத காலம் வேலை பார்த்தேன். தொடர்ந்து அதில் வேலை செய்யப் பிடிக்கவில்லை. சிறுவயதிலிருந்தே ஃபிட்னஸில் தான் ஆர்வம். கல்லூரி படிக்கையில் நண்பர்கள் பாடி பில்டிங் பண்ணும் போது ஓரமாக நின்று பார்ப்பேன்.

வேலை விட்ட பின் ஏதாவது ஒரு வேலைக்குப் போவதற்குப் பதில், எனக்குப் பிடித்த பிட்னஸ் சம்பந்தமாகத் தேடிக் கொண்டிருக்கையில், ஜிம்மில் டிரைனராக செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வேலையில் இருக்கிறேன்” என்று கூறும் ராஜாவிற்கு, கெட்டில் பெல் அறிமுகம் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றிக் கூறினார்.

“என்னால் பாடி பில்டிங்கெல்லாம் பண்ண முடியாது. காரணம் அதற்கான பொருளாதார பின்னணியோ, ஸ்பான்சரோ கிடையாது. ஊரிலிருந்து வரும் போது, எனக்கு மூன்று வேலை சாப்பாட்டுக்கே கஷ்டமாகத்தான் இருந்தது. டிரைனராக மட்டுமே வேலை பார்த்த சமயத்தில், சர்வதேச கெட்டில் பெல் போட்டியில் தங்கம் வென்ற விக்னேஷ் ஈஸ்வரன் சார் தொடர்பு கிடைத்தது.

ஆனால், இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது, சர்வதேச அளவில் தமிழர் ஒருவர் தங்கம் வென்றிருக்கிறார் என்பது பல பேருக்கு இன்றளவும் தெரியாது. ஏன், இந்த துறையிலிருக்கும் எனக்கே இவரைச் சந்தித்த பின்னர்தான் இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்பது தெரிந்தது.

கெட்டில் பெல், ரஷ்யாவில் பிறந்தது. அங்குள்ள ராணுவத்தில், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றினாலும், 30 ஆண்டுகளுக்கு முன் தான் இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதில், உடலின் முன்பக்கமும், பின்பக்கமும் பலம் பெறும். மூச்சுப்பயிற்சி சீராகும். இதனால், உடல் பிரச்னைகளும், மனப்பிரச்னைகளும் வராது. 40 வயதுக்குட்பட்டோர் மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் உள்ளதால், எந்த வயதினரும் விளையாடலாம்.

போட்டி என்பது 8, 12, 16, 20, 24, 28, 32 என்னும் எடைகளில், கைப்பிடியுடன் உள்ள குண்டுகளை, ஒரு கையிலோ, இரு கைகளிலோ தலைக்கு மேல் தூக்கி துாக்கி இறக்க வேண்டும். எவ்வளவு நேரம், எத்தனை முறை தூக்குகிறோம் என்பது தான் போட்டி.

10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை, எடையை தூக்கி வைத்திருக்க வேண்டும். பளு தூக்கும் போட்டியில், ஒரே மூச்சில், பளுவைத் தூக்கி, இறக்கி வைத்துவிட்டால், தோற்று விடுவோம்” என்று கூறும் ராஜா, சமீபத்தில் தேசிய அளவில் நடைபெற்ற கெட்டில் பெல் போட்டியில் இரு பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார்.

“விக்னேஷ் ஈஸ்வரன் கொடுத்த பயிற்சியின் மூலம் இது சாத்தியமானது. சென்னை, கோவை என தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளோருக்கும் இவர்தான் பயிற்சி அளித்து வருகிறார். தேசிய அளவில் வென்றிருப்பது, அடுத்து சர்வதேச அளவில் பங்கேற்பதற்கான முகவரியாக அமைந்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் சாதிக்க, நிதி நிலைமை ஒரு தடையாக இருக்கக் கூடாது. மிகச்சிறந்த விளையாட்டான இதை, தமிழகத்தில் நிலைநிறுத்தவும், அடுத்த ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கான தங்கத்தைப் பெறவும், கடுமையாக உழைப்பேன். அரசும், தனியார் நிறுவனங்களும் இதைத் தத்தெடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார் ராஜா.            

அன்னம் அரசு