என்ன செய்வது தோழி? முதல் மனைவிக்கு உரிமை இல்லையா?அன்புடன் தோழிக்கு,

அன்புத் தோழி, எங்கள் வீட்டில் நான்தான் முதல் பெண். அப்பாவுக்கு என்மீது அளவு கடந்த பிரியம். என்னை ஆண் பிள்ளைபோல்தான் வளர்த்தார். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் சைக்கிள் ஓட்டுவதையே எங்கள் ஊரில் அதிசயமாக பார்ப்பார்கள்.
இருசக்கரமான மொபட் வாகனம் அறிமுகமான போது அதை அப்பா வாங்கினார். அதை நான்தான் அதிகம் ஓட்டுவேன். தோழிகள் ‘மொபட் ராணி’ என்று கூட கிண்டல் செய்வார்கள். நான் பத்தாம் வகுப்பு பெயிலாகி விட்டதால் ஒரு டியூஷனுக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

அப்போது எங்கள் பகுதியில் புதிதாக ஒரு டுடோரியல் ஆரம்பித்து இருந்தனர். அதை எங்கள் எதிர்வீட்டில் உள்ள ஒருவர்தான் நடத்தினார். அங்கு சேர்க்க எனது பெற்றார் தயங்கினர். அவரது பெற்றோர் மீது மட்டுமல்ல, அவர் மீதும் ஊரில் நல்ல அபிப்ராயம் கிடையாது.

எனக்கும் அப்படித்தான்எனக்கு தெரிந்து 2,3 பேரை காதலித்து திருமணம் செய்யவில்லை என்று நடந்த தகராறுகளை பார்த்து இருக்கிறேன். ரொம்ப தொலைவுக்கு டியூஷன் அனுப்ப தயங்கி, வேறு வழியில்லாமல் என்மீது நம்பிக்கை வைத்து அந்த மையத்தில் என்னை சேர்த்தனர்.

அவரிடம் தயங்கிதான் பேச ஆரம்பித்தேன். என்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். பாடங்களை நன்றாக சொல்லித் தருவார். அதுவே ஈர்ப்பாகி அவரும் நானும் காதலிக்க ஆரம்பித்தோம். அவற்றை விவரமாகச் சொன்னால் ஒரு புத்தகம்தான் நீங்கள் போட வேண்டியிருக்கும்.

‘நமது திருமணத்துக்கு வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், அதனால் திருமணம் செய்து கொண்டு பிறகு வீட்டில் சொல்லலாம் என்றார். நானும் அதற்கு தலையாட்டினேன்.

எங்கள் பகுதியில் இருந்த இளைஞர் மன்றத்தில் அவரும் பொறுப்பில் இருந்தார். அதனால் அவர்கள் உதவியுடன் ‘காவல் நிலையத்தில்’ திருமணம் செய்தோம். மன்றத்துக்காரர்களே வீடு பிடித்துக் கொடுத்தனர். மளிகை, உடைகள், சமையல் பாத்திரங்களை வாங்கி வந்தனர். மன்றத்தில் பலரும் இரும்புகளை ஏற்றி இறக்கும் கூலி வேலை செய்தவர்கள். இவரை அங்கு அழைத்துச் சென்று, படித்தவர் என்பதால் சூப்பர்வைசர் வேலை வாங்கி தந்தனர்.

கொஞ்ச நாட்கள் மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கை போனது. நான் கர்ப்பமானதும், வீட்டுக்கு வருவதை குறைத்தார். ஒருகட்டத்தில் அவர் அம்மா வீட்டுக்கே போய் விட்டார். எங்கள் வீட்டில் கோபமாக இருந்ததால் என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. நடுத்தெருவில் நின்றேன். மன்றத்துக்காரர்கள் போய் நியாயம் கேட்டனர்.

அதற்கு அவர், ‘அவள் உங்களுடன் படுத்துதான் கர்ப்பமாக இருக்கிறாள். அவளிடம் எப்படி குடும்பம் நடத்துவது’ என்று கூறிவிட்டார். அதன் பிறகு போலீஸ், கோர்ட் என்று பல பிரச்னைகள் ஆனாலும் அவருடன் சேர முடியவில்லை. இந்த பிரச்னையில் பாவம் மன்றத்தினர் பலருக்கு வேலை போய்விட்டது.

பரிதாபப்பட்டு எங்கள் வீட்டில் என்னை சேர்த்துக் கொண்டனர். அங்கு குழந்தை பெற்றேன். ஆண் குழுந்தை. அப்படியே அச்சு அசலாக அவரது தாத்தாவுக்கு இருந்தது போல் கால் ஊனத்துடன் பிறந்தது. அதுவே குழந்தை அவரது குடும்பத்து வாரிசு என்பதை அவர்களுக்கும், ஊருக்கும்
சொன்னது.

அவருடன் சேரவும், குழந்தையின் கால் ஊனத்தை சரிச் செய்யவும் போராடினேன். காலை சரி செய்துவிட்டேன். அவருடன் சேர முடியவில்லை. அவரது உறவினர்கள் சொன்னார்கள் என்று மதம் கூட மாறினேன். பலனில்லை. ஆனால் நான்கைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் நன்றாக பேசினார். அதனால் தனியாக வீடு பார்த்தேன். மறுபடியும் ஒரு பெண் குழந்தை. அதன் பிறகு அவ்வப்போது பேசுவார், வருவார் தங்குவார்.

திடீரென ஒருநாள் அவருக்கு கல்யாணம் என்றனர். அவரிடம் கேட்டு அழுதேன். அதற்கு அவர், ‘உன்னையும், பிள்ளை
களையும் கைவிட மாட்டேன். நீ வேறு சாதி என்பதுதான் பிரச்னை. சொந்தக்காரங்க மதிக்க மாட்டேங்கிறாங்க... அப்பா, அம்மாவும் கஷ்டப்படுகிறார்கள். அவங்களுக்காகதான் எங்கள் சாதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்றார்.நான் அழுது அடம் பிடித்தும் பலனில்லை. திடீரென கல்யாணம் செய்து  கொண்டார். அவருக்கு எதற்கு கஷ்டம் என்று நான் புகார் ஏதும் செய்யவில்லை. இடையில் அரசு வேலையிலும் சேர்ந்தார். அவரது 2வது மனைவியும் அரசு ஊழியர்தான். அவருக்கு ஒரு பெண், ஒரு பையன்.

எனக்கு குடும்பம் நடத்த அவர் எந்த உதவியும் செய்ததில்லை. என் அப்பா இருந்தவரை உதவினார். பிறகு நான் வேலை செய்துதான் பிழைக்கிறேன். வாடகை வீட்டில்தான் வாழ்க்கை. இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். என் பையனுக்கு எளிமையாக திருமணம் செய்தேன்.
அவரது 2வது மனைவி மகளுக்கு கார் எல்லாம் தந்து பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார். அந்த மகளை விட மூத்தவளான என் மகளுக்கு இன்னும் திருமணம் செய்யவில்லை. மேலும் மாடி வீடு கட்டினார்.

அதில் அவர் 2வது மனைவி அதிகம் இருந்ததில்லை. அவர் அம்மா ஊரில் அவருக்கு வீடு கட்டி தந்துள்ளார். அவரது 2வது மனைவி ஓய்வு பெற்று விட்டார். அதன் பிறகும் அந்த வீட்டுக்கு வரவில்லை. அந்த வீட்டுக்கு நான்தான் போய் அவருக்கு சமைத்து தந்து விட்டு வருவேன். படுத்த படுக்கையாக இருந்த அவரது அம்மாவுக்கு கடைசி காலத்தில் நான்தான் எல்லாம் செய்தேன். மற்ற மருமகள்களோ, அவரது 2வது மனைவியோ ஏதும் செய்ததில்லை. மாமியாரே என்னிடம் ஒருமுறை ‘உன்னைப் போய் சாதி சொல்லி ஒதுக்கி வைத்து விட்டேனே’ என்று அழுதார். மன்னிப்பு கேட்டார். அவர் இறந்த பிறகு அவரது அப்பாவுக்கும் சாப்பாடு கொடுப்பது, மாத்திரைகள் கொடுப்பது என்று உதவியாக இருந்திருக்கிறேன்.

அதன்பிறகு என்னை மிரட்டுவது, அடிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டார். அதுவும் என் மகனுக்கு குழந்தை பிறந்த பிறகு பேரனை தூக்கி கொஞ்ச வந்து விடுவார். பிள்ளைகளிடமும் கொஞ்சம் அன்பாக இருந்தார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு என் கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். ஓய்வு பெற சில மாதங்கள் உள்ள நிலையில் அவர் இறந்து விட்டதால் வாரிசு வேலை, செட்டில்மென்ட் குறித்து பிரச்னை வந்தது. வேலை, செட்டில்மென்ட் என ஆளுக்கொன்றை எடுத்துக் கொள்ளலாம் என்று எல்லாரும் சொன்னார்கள். ஆனால் அவரது 2வது மனைவியும், பிள்ளைகளும் ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் அடிக்க வருவதாக காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர்.

மேலும் கணவரின் உடல் அடக்கம் நடந்ததும் அவர்கள் புறப்பட்டு போய்விட்டனர். அவர் கட்டிய வீட்டில் நானும், பிள்ளைகளும் இப்போது இருக்கிறோம். நான் பிரச்னை வேண்டாம் என்றுதான் சொன்னேன். உறவினர்களும், எனது பிள்ளைகளும் ‘நீ எப்போதுதான் அவரது மனைவி என்று நிரூபிக்கப் போகிறாய்’ என்று கேட்கின்றனர். பிள்ளைகள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழித்தெரியவில்லை.

ஆனால் அவரது சர்வீஸ் புத்தகத்தில் 2வது மனைவியின் பெயர்தான் இருக்கிறது. ஆனால் வங்கி கடன் வாங்கியதில் மனைவியாக, நாமினியாக என் பெயரை போட்டிருக்கிறார். அவர் ரேஷன் கார்டில் 2வது மனைவி பெயர் இருக்கிறது. அவர் மனைவிக்கு ஊரில் ஒரு ரேஷன் கார்டு இருக்கிறது. என் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அனைத்திலும் கணவர் என்ற இடத்தில் அவர் பெயர்தான் இருக்கிறது. காவல் நிலையத்தில் எங்கள் திருமணம் நடந்ததற்கு ஆதாரம் இருக்கிறது.

நாங்கள் வழக்கு போடலாமா? எனக்கும், என் பிள்ளைகளுக்கும் சட்ட பாதுகாப்பு கிடைக்குமா? கணவர் வேலை என் பிள்ளைக்கு கிடைக்குமா? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன ஆதாரங்கள் தேவை? அதுமட்டுமல்ல எனக்கு 51 வயதாகிறது. நீதிமன்றம் போனால் தீர்ப்பு கிடைக்க நாளாகும். அதனால் யாருக்கும் பலனில்லாமல் போகும் என்கிறார்கள். என்ன செய்வது? தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள் தோழி!
இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,
எல்லா பிரச்னைகளிலும் ஆண்களையே குறை சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. சில பிரச்னைகளுக்கு காரணம் பெண்கள்தான். ஆமாம், உங்கள் பிரச்னைகளுக்கும் காரணம் நீங்கள்தான். சரியானவரை தேர்ந்தெடுக்கவில்லை. தவறு செய்து விட்டீர்கள் என்றெல்லாம் இப்போது ஆராய்ச்சி தேவையில்லை. காலம் கடந்து விட்டது. ஆனால் ஒவ்வொரு முறை அவர் தவறு செய்யும் போதும் நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதால்தான் இன்று உங்களுக்கு கஷ்டம். இனியும், இப்படி யாரும் ஏமாளியாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இதையும் சொல்கிறேன்.

யாராக இருந்தாலும் தங்கள் உரிமையை சட்டப்படி நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் அதை விசாரித்து சட்டத்தின்படி, இயற்கை நீதியின்படி தீர்ப்பை அளிக்கும். உங்கள் பிரச்னைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சொல்ல எந்த தடையுமில்லை. அதுமட்டுமல்ல இரண்டு தரப்பும் சமாதானமாக பேசி தீர்வு காண முடியவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை.

உங்கள் கணவருக்கு எத்தனை மனைவி இருந்தாலும் முதல் மனைவியான நீங்கள் சட்டப்படியான மனைவி. மாலை மாற்றிக் கொண்டாலே திருமணம்தான். உங்களுக்கு காவல் நிலையத்திலேயே திருமணம் நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது என்று கூறியுள்ளீர்கள். அதுமட்டுமல்ல உங்கள் பிள்ளைகளும் அவருக்கு சட்டப்பூர்வமான வாரிசுகள் தான்.

எனவே உங்கள் கணவரின் பணிக்கொடை உள்ளிட்ட செட்டில்மென்ட்களை பெறவும், உங்கள் பிள்ளைகள் கருணை அடிப்படையில் வேலை கேட்டும் அவர் வேலை செய்த துறையில் விண்ணப்பிக்கலாம்.இந்த பலன்களை பெற, வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதில் சிக்கல் இருந்தால் உயர் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து சிக்கலை தீர்த்துக் கொள்ளலாம். கருணை அடிப்படையிலான வேலை தரக் கோரியும் சம்பந்தப்பட்ட துறை மீது வழக்கு தொடரலாம்.

அதேபோல் இந்த வழக்குடன், வாகன விபத்துகள் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து சாலை விபத்தில் இறந்த உங்கள் கணவருக்கான இழப்பீடும் பெற முடியும். சான்றுகள் இல்லை என்று தாமதப்படுத்த வேண்டாம். தேவையான சான்றிதழ்களை வழங்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நீதிமன்றம் மூலமாகவே உத்தரவு பெற முடியும்.

உங்கள் கணவரின் பணி பலன்களை பெற வழக்கின் போது திருமண ஆதாரம், உங்கள் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்கள், கணவரி இறப்புச் சான்றிதழ், வங்கி கணக்கு விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன், உங்களுக்கும், கணவருக்கும் நடந்த பரிமாற்றங்கள் குறித்த ஆதாரங்கள் இருந்தால் அதையும் தாக்கல் செய்யலாம். இதே பிரச்னைக்காக அவரது 2வது மனைவியும் சட்டப் படி வழக்கு தொடர முடியும். அவரது பிள்ளைகளும் சட்டப்பூர்வமான வாரிசுகள்தான். ஆனால் 2வது மனைவியின் பொருளாதார சூழல் உள்ளிட்டவற்றை நீதிமன்றம் ஆராயும், முடிவு செய்யும்.

உங்களுக்காக எதையும் செய்யாத கணவர் வாங்கிய கடனுக்காக உங்கள் பெயரை அவர் பரிந்துரைத்திருப்பது நியாயமில்லை. ஆனால் சட்டப்படி கடனை கட்டித்தான் ஆக வேண்டும். முதலில் எந்தமாதிரியான கடன் என்று பாருங்கள். வீட்டு கடன்களுக்கு இப்போது இன்சூரன்ஸ் செய்வது குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. அப்படி அவர் இன்சூரன்ஸ் செய்திருந்தால் நீங்கள் கடன் ஏதும் கட்ட வேண்டியிருக்காது. அப்படி இல்லை என்றால் வங்கி நடவடிக்கை எடுக்கும்.

நீங்கள் ஏழை, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறீர்கள் என்றால் சட்ட உதவி மையத்தை அணுகலாம். வணிகரீதியான கடன் என்றால் நீங்கள் திருப்பிச் செலுத்த மறுக்கலாம்.வழக்கு தொடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வதற்கு முன்பு வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...