விம்பிள்டன் கோப்பையை கையில் ஏந்துவேன்! டென்னிஸ் வீராங்கனை ஆர்த்திஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில், குறிப்பாக சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவில் பெண் வீராங்கனைகளுக்கு பல சிரமங்கள் உள்ளன. இருந்தாலும் பல தடங்களை தாண்டியே சமீப  ஆண்டுகளில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர் பெண் வீராங்கனைகள்.

பொதுவாகவே தோல்வி என்பது தற்காலிகமானது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, நம்முடைய விடாமுயற்சியை வளர்த்துக்கொள்ள சில அடிப்படைக் கருத்துக்களை கட்டாயம் நாம் பின்பற்ற வேண்டும். எதை அடைய நினைக்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவான நோக்கம் இருந்தால் மட்டும் போதாது.

அதை அடைவதில் தீவிரமாக செயல்படுவோம். சாதனைகளை நிகழ்த்த வேண்டுமானால் விடாமுயற்சி, மன உறுதி, தெளிவான லட்சியம் ஆகிய இம்மூன்றும் இருக்க வேண்டும். இவைகளை தாரக மந்திரமாக கொண்டு பல போட்டிகளில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கும் தயாராகி வருகிறார் ஆர்த்தி முனியன்.

“அப்பா ஆர்மியில் இருந்தவர். இதனால் அருணாச்சலப்பிரதேசம், லக்னோ உள்ளிட்ட ஊர்களில் வசித்தோம். அப்பா எங்கெல்லாம் செல்கிறாரோ, அந்தந்த ஊர்களில் என்னுடைய பள்ளிப்படிப்பை தொடர்ந்தேன். பள்ளியில் படிக்கும் போதே எனக்கு விளையாட்டு துறை மேல் தனி ஆர்வம் உண்டு. அதனால் முதலில் பேட்மிட்டன் தான் விளையாடினேன்.

அப்பா, இதை பார்த்து, ‘ஏன் டென்னிஸ் முயற்சிக்க கூடாது’ன்னு கேட்டார். அப்ப எனக்கு 12 வயசு. லக்னோவில் வசித்து வந்தோம். அப்போது தான் முதன் முதலில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தேன். அங்கு எதிர்பார்த்த அளவு பயிற்சி கிடைக்கவில்லை. இருந்தாலும் நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தேன். அதற்கு பின் அப்பாவுக்கு, அமிர்தசரஸ்க்கு மாற்றம் கிடைத்தது. அங்கு நாங்க வசித்து வந்த இடத்திற்கும் பயிற்சி எடுக்கும் இடத்திற்கும் சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் இருந்தது.

தினமும் அங்கு சென்று தான் பயிற்சி எடுத்தேன். இதை பார்த்த அப்பா, அவரின் அலுவலகத்தில் என்னுடைய பயிற்சியின் காரணமாக சென்னைக்கு மாற்றம் வேண்டும் என்று கேட்டு கடிதம் விண்ணப்பித்தார். அதற்கு பலனும் கிடைத்தது. அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றலாக, நாங்க அனைவரும் சென்னையில் செட்டிலானோம்’’ என்றவர் சென்னையில் பயிற்சிக்காக பல இடங்கள் தேடி அலைந்துள்ளார்.

‘‘சென்னை வந்து செட்டிலான பிறகு, படிப்பிலையும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தேன். 11, 12 ஆம் வகுப்பின் போது முழு நேரம் டென்னிஸாகவும், பகுதிநேரம் படிப்பிலும் கவனம் செலுத்தினேன். இதற்கிடையில் டென்னிஸ் பயிற்சிக்கு சென்னையில் பல இடங்கள் தேடி அலைந்தோம். கடைசியாக எழும்பூரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிப்பதாக கேள்விப்பட்டு வந்தோம். அங்கு தான், ஜோஷி சாரின் அறிமுகம் கிடைத்தது.

அவர் டென்னிஸ் பயிற்சி அளித்து வந்தார். மேலும், ஹரி சார், சங்கீதா மேம், அகஸ்டியன் அண்ணா இவர்கள் உடற்பயிற்சியோடு மட்டுமல்லாமல்,  எப்போதெல்லாம் மனம் சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் என்னை ஊக்குவித்து வந்தார்கள். என் ஆரோக்கியத்தில் என்னைவிட இவர்கள் அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அனைவரின் உதவியால் நான் தீவிரமாக பயிற்சி எடுத்து, விளையாட ஆரம்பித்தேன். எனக்கென்று ஒரு தனி ஸ்டைல் அமைத்துக் கொண்டேன். நிறைய போட்டிகள் கலந்து கொண்டு வெற்றி-தோல்விகளை சந்தித்தேன். 18 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 50வது, ரேங்கில் இருந்தேன்” என்கிறார் ஆர்த்தி.      

கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆர்த்தி, சர்வதேச அளவில் 80 போட்டிகளில் ஒற்றையர் பிரிவிலும், 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் இரட்டையர் பிரிவிலும் கலந்து வெற்றி பெற்றுள்ளார். இந்திய அளவில் பெண்களின் தரவரிசையில் 18வது இடத்தை தனதாக்கியுள்ளார். இவை அனைத்தையும் தன்னுடைய கடுமையான பயிற்சி மற்றும் உழைப்பால் அடைந்துள்ளார்.

“ஒரு சில நேரங்களில் எவ்வளவு நாள் இப்படியே டென்னிஸ் விளையாட போறோம்ன்னு யோசிச்சு இருக்கேன். ஆனால், எனக்குள் இருப்பது டென்னிஸ் மட்டும்தான். பணத்திற்காக இதை விளையாட இன்றளவும் நினைத்ததில்லை. விளையாடி வெற்றி பெற்ற பின் ஒரு சந்தோஷம் கிடைக்கும் அது போதும். பிடித்ததை செய்ய வேண்டும். இந்த துறையில் சாதிக்கணும். இது மட்டுமே என் எண்ணம். அதற்காக நேரம் போவது கூட தெரியாமல் மூழ்கிகிடக்கிறேன். பயிற்சி மட்டுமே அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். விடா முயற்சியை ஒரு போதும் கைவிடுவதில்லை. அப்படி இருக்க என் குடும்பம் என்னை தாங்குகிறார்கள்.

ஒரு முறை சிங்கப்பூர் வீராங்கனையான சாராவுடன்  இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடிய போது, என் விளையாட்டை பற்றி அவரது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். அதை பார்த்த சிலர் என்னை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும், விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கினார்கள். இன்றுமே அந்த பதிவை பார்த்து நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இது என்னுள் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது.       
 
தற்போது கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் முயற்சி, தொடரட்டும் பயிற்சி என்பதை நினைவில் கூர்ந்து மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறேன். விம்பிள்டன் நம்பர் 1 கோர்ட்டில் விளையாட வேண்டுமென்பது தான் என்னுடைய கனவு. அதனை நிறைவேற்றியே தீருவேன்” என்று உறுதியுடன் கூறுகிறார் ஆர்த்தி.

செய்தி: ஆனந்தி ஜெ.

படங்கள்: ஜி.சிவக்குமார்