நியுஸ் பைட்ஸ்குடும்ப வன்முறைக்கு ஆஸ்திரேலியாக்குள் தடா!

உலகில் எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இனி குடும்ப வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆஸ்திரேலியா விசாவோ அல்லது அங்கு தங்கும் அனுமதியோ தடைசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறையை ஆஸ்திரேலிய அரசு வன்மையாகக் கண்டித்து இந்த தடையை கொண்டுவந்துள்ளது.

கர்நாடகாவில் ‘குழந்தை பட்ஜெட்’

கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் எடியூரப்பா தாக்கல் செய்த பட்ஜெட்டில், குழந்தைகளுக்கென தனி பட்ஜெட்டை அறிவித்துள்ளார். அதில் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், வளர்ச்சி மற்றும் பிற நலத்திட்டங்களுக்காக ரூ.36 ஆயிரத்து 340 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும், அங்கன்வாடி மையங்கள் அமைக்கவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பொதுத்தேர்வுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வந்த மாணவி

உத்தரப் பிரதேசத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத, ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மாணவி வந்திருக்கிறார். சஃபியா ஜாவெட் என்ற 16 வயது மாணவி, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசிக்கும் நிலையில் இருக்கும் அவர் பத்தாம் வகுப்புத் தேர்வை எப்படியாவது எழுத வேண்டும் என்று சிறப்பு அனுமதி பெற்று வந்திருக்கிறார். சஃபியா கடந்த ஐந்தாண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு, சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியால்தான் சுவாசிக்கிறார்.

இலவச சானிட்டரி நாப்கின்கள்

ஸ்காட்லாந்து, உலகத்திலேயே முதல் நாடாக தங்கள் நாட்டின் பெண்களுக்கு இலவச சானிட்டரி பொருட்களை வழங்குகிறது. இது அனைத்து தரப்பட்ட பெண்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கப்படும் சானிட்டரி பொருட்கள், ஒவ்வொரு பெண்ணின் சுகாதார உரிமை என்பதை ஆதரித்து, ஸ்காட்லாந்து அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை அந்நாட்டு பெண்கள் மட்டுமின்றி, உலக தலைவர்களும், பிற நாட்டுப் பெண்களும் கூட வரவேற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மொபைல் கிச்சன்

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில், பெண்கள் மட்டுமே இயக்கும் மொபைல் கிச்சன் அறிமுகமாகியுள்ளது. இதை பானு கிச்சன் என்று குறிப்பிட்டு, இந்த வண்டி முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 96 கிமீ வரை, ஆறு மணிநேரம் செல்ல முடியும். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்கவேண்டி இந்த மொபைல் கிச்சன் ஆரம்பிக்கப்பட்டு, பெண்கள் மத்தியில் பெரும் வெற்றியை
கண்டுள்ளது.

புதுமண தம்பதிக்கு சிறப்பு இல்லம்

கேரளாவில் சாதி மாறி திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளை பாதுகாக்க, சிறப்பு இல்லங்கள் அமைக்கப்படும் என்று கேரளாவின் சமூக நீதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். சில சமயம், சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு தொடர்ந்து மிரட்டல்களும் அச்சுறுத்தலும் இருந்து வருவதால், அவர்களைப் பாதுகாக்கவே இந்த திட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சிறப்பு இல்லங்களில் திருமணம் ஆன ஒரு வருடம் வரை அவர்கள் தங்கிக்கொள்ளலாம்.